search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • விரத காலத்தில் உபவாசம் இருக்க வேண்டும்.
    • விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

    சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

    இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.

    விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற எளிமையான ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

    விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும். விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம். மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.

    • பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது.
    • இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்..

    தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலை கடைந்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் இதற்கு பயன்படுத்தினர். அப்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதற்குள் இருந்து பல தெய்வீக அம்சம் நிறைந்த பொருட்களும், தேவதைகளும், தெய்வங்களும் கூட வெளிப்பட்டன. இறுதியாகத்தான் அமிர்தம் வெளிப்பட்டது. ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக முதன் முதலில் கடலில் இருந்து வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அதோடு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகியும் வலி பொறுக்க முடியாமல், விஷத்தை கக்கியது. அந்த இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து 'ஆலகால' விஷமாக மாறியது. அது இந்த உலகையே அழிக்கும் சக்தி படைத்ததாக இருந்தது.

    இதையடுத்து அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் அவரது உடலுக்குள் நுழையாமல் இருக்க, அவரது கழுத்தை பிடித்தார், பார்வதி. அதனால் விஷம் கழுத்திலேயே நின்று, கழுத்து நீலநிறமாக மாறியது. இதனால்தான் ஈசனை 'நீலகண்டன்' என்றும் அழைக்கிறோம். கழுத்தில் விஷம் பரவியதால் மயக்கமடைந்த சிவன், மயக்கம் தெளிந்ததும் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று ஆனந்த நடனம் புரிந்தார். அந்த நாளே 'பிரதோஷ தின'மாக வழிபடப்படுகிறது.

    இதனால்தான் பிரதோஷ தினத்தில் சிவன்- பார்வதி மற்றும் நந்தியம்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் வழிபாடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். பிரதோஷங்களிலேயே 20 வகையான பிரதோஷம் இருக்கின்றது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    1. தினசரி பிரதோஷம்: தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர், ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    2. பட்சப் பிரதோஷம்: அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர்பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியை 'பட்சப் பிரதோஷம்' என்கிறோம். இந்த பிரதோஷ கால வேளையில், பட்சி லிங்க வழிபாடு (பறவைகளோடு தொடர்புடைய மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்று) செய்வது உத்தமம்.

    3. மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையில் பவுர்ணமிக்குப் பிறகு 13-வது திதியாக வரும் 'திரயோதசி' திதியே 'மாதப் பிரதோஷம்' ஆகும். இந்த பிரதோஷ நாளில் மாலை நேரத்தில் பாணலிங்க வழிபாடு (பாணம் என்பது ஒரு வகை லிங்கம்) செய்வது நன்மையான பலன்களைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம்: பிரதோஷ திதியாகிய திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை, பிரதோஷ நேரத்தில் வழிபடுவது 'நட்சத்திர பிரதோஷம்' ஆகும்.

    5. பூரண பிரதோஷம்: திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராமல், திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷ நாளை, 'பூரண பிரதோஷம்' என்பார்கள். இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்புவாக தோன்றிய லிங்கத்தை தரிசனம் செய்வது சிறப்பான பலனைத் தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம்: பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது 'திவ்யப் பிரதோஷம்' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7. தீபப் பிரதோஷம்: பிரதோஷ தினமான திரயோதசி அன்று தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபாடு செய்வதையும் 'தீபப் பிரதோஷம்' என்கிறோம். இவ்வாறு செய்வதால் சொந்த வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

    8. சப்தரிஷி பிரதோஷம்: வானத்தில் 'வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை, 'சப்தரிஷி மண்டலம்' என்பார்கள். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே 'சப்தரிஷி பிரதோஷம்' ஆகும். இதனை அபயப் பிரதோஷம் என்றும் அழைப்பார்கள். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு ஈசன் பாவ-புண்ணியம் பார்க்காது அருள்புரிவார்.

    9. மகா பிரதோஷம்: புராணத்தில் பிரதோஷம் நடந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் 'மகா பிரதோஷம்' ஆகும். அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் சிறப்புக்குாியது.

    திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீசுவரர் ஆலயம், திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சிவ ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள 'திருக்கோடி காவல்' சிவ ஆலயம் ஆகியவை, எமன் வழிபட்ட சுயம்பு லிங்கங்களில் குறிப்பிடத்தக்கவை. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், 'மகா பிரதோஷம்' எனப்படும்.

    10. உத்தம மகா பிரதோஷம்: சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. அதிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறை சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் 'உத்தம மகா பிரதோஷம்' ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம்: வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்கு 'அர்த்தநாரி பிரதோஷம்' என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம்: வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது 'திரிகரண பிரதோஷம்.' இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது 'பிரம்மப் பிரதோஷம்.' இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம்:வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது 'அட்சரப் பிரதோஷம்.' தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் 'கந்தப் பிரதோஷம்' எனப்படும். இது முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜபிரபா பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்டதிக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் வரும் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம்: ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது 'நவக்கிரகப் பிரதோஷம்.' இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம்: அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

    • எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.
    • குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.

    1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்

    2.கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும்

    3. கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.

    4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.

    5. இரவில் தூங்கும் போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதைக் தவிர்க்க வேண்டும்.

    6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.

    7.சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

    8. திரிகரண சுத்தி(மனம், வாக்கு, செயல்)ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.

    9. சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.

    10.காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம்,துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ எப்பொழுதும் ஐயப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது ஐயப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.

    11. உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.

    12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.

    13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.

    14. குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங் களுக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

    15. விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைந்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.

    16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.

    18. நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களில் யாருக்காவது மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.

    19. பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.

    20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.

    21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது.

    22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

    • உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.
    • ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும்.

    ஐயப்பன் மீது பக்தி கொண்ட ஆண்கள் அனைவருமே விரதம் இருக்க தகுதி உடையவர்களே. பெண்களில் சிறுமிகளும், பெரியவர்களில் வீட்டு விலக்கு நின்று போனவர்களும் மட்டுமே இவ்விரதத்தை கடைபிடித்து சபரிமலை சென்று ஐயனைக் காணவேண்டும்.

    ஐயனை மனக்கண்ணில் மட்டுமே தரிசிக்க வேண்டும். விரதத்தின் அம்சம்: "நான்" என்ற அகங்காரம், கெட்டப்புத்தி, எல்லாம் எனக்கே என்ற சுயநலம் என்பன சிறிதளவும் காண முடியாத உயர்ந்த சிறந்த விரதம் ஐயப்ப விரதமாகும்.

    இவ்விரதம் இருப்பவர்கள் எல்லோருமே எதிரே ஒரு ஐயப்ப பக்தரைக் கண்டால் சாமி! சாமி! என்றே ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வர். இதனால் ஜாதி, மத, பேதம் ஏதுமின்றி சரிநிகர் சமமாய் ஒருமித்து போற்றக் கூடிய ஐயப்ப விரதம், விரதத்திற்கு எல்லாம் சிறந்த விரதம் என்று கூறலாம்.

    • இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம் தான்.
    • ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பொது காவி உடை அணிய வேண்டும்.

    ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்குக் குறையாதது. இந்த விரதத்தை விரதத்திற்கு எல்லாம் பெரிய விரதம் என்றே சொல்லலாம்! எல்லா விரதங்களும் மவுனமாக இருக்கவும், பட்டினியிருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களை அடக்கி அதன் வழி இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம்தான்.

    கீதையின் போதனையும் ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித் தரமாய் வற்புறுத்துவது ஐம்புலன் அடக்கமே! அதை செயலில் காட்ட செய்வதே ஐயப்ப விரதத்தின் மகிமை!

    பிரம்மச்சர்யம்: பிரம்மச் சர்யம் என்றால், ஆண்-பெண் சேர்க்கையைத் தவிர்ப்பது என்பதாகும். ஆனால் ஐயப்ப விரதம் என்ன சொல்கிறது தெரியுமா? மனதாலும் பெண்ணைத் தீண்டாதிருப்பதே பிரம்மச்சர்யம் என்கிறது. அது மட்டுமல்ல இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் அனைவரும் தாங்கள் பார்க்கும் பெண்களை அம்பிகையின் அவதார மாகக் கருதுவதே இவ் விரதத்தின் உயர்ந்த தத்துவம்.

    நீராடல் : அனுதினமும் காலை, மாலை இருவேளையும் தவறாது குளிர்ந்த நீரில் நீராடி வழிபட வேண்டும். மழையோ பனியோ குளிரோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து 45 நாள் முதல் 50 நாள் வரை நீராடி விரதத்தின் முடிவாக சபரிமலை யாத்திரையில் நேரும் மழை, பனி, குளிர், இயற்கை சீதோஷ்ணத்திற்கு உடல் நிலை பாதிக்கப்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்தி தயார்படுத்துவது இவ் விரதத்தின் சாதனை என்றே சொல்லலாம்.

    வழிபாடு: அவரவர் தாய் மொழியில் ஐயப்பன் நாமங்களை சரணம் சொல்லுதல், ஐயப்பனை கிடைக்கும் நேரத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைத்தோ சொல்லி வழிபட்டு பானகம் கரைத்த நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து வழிபட்டால் போதுமானது.

    காவி உடை: ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பொது காவி உடை அணிய வேண்டும். ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்டவும், ஐயப்பனுக்குரிய மரியாதையை கிடைக்கச் செய்யவும் தன்னைத்தானே உணர்ந்து சதா சர்வகாலமும் ஐயப்பனை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கவும், கொலை, களவு, பொய், வன்முறை பொன்ற எந்த தீமையும் எண்ணத்தில் கூட வராமலிருக்கும் பொருட்டு அறிவுறுத்தும் வகையில் காவி ஆடை விரதம் கொள்வோருக்கு கவசமாக இருந்து உயர்த்துகிறது. மாயையைக் குறிப்பது கறுப்பு. ஐயப்பா! நான் மாயையில் உழன்று தவிக்கிறேன். என்னை மாயையில் இருந்து விடுபடச் செய்! என்று வேண் டிக் கொள்ள ஏதுவாக கறுப்பு நிற ஆடைகள் அமைகிறது.

    உணவு பழக்கம் : விரத காலத்தில் நண்பகல் உணவும், இரவு பலகாரமும் உணவும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பாய், தலையணை, போர்வை எதுவுமே விரத காலத்திற்கு உகந்தது அல்ல. இவை இன்றி படுத்துறங்க பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் காட்டுப் பிரதேச பயணத்தில் இவை பெரிதும் உதவும். இந்த நியதி மூலம் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைக்கு மாற்ற ஐயப்ப விரதம் பக்தர்களை முழுமையாக தயார்படுத்துகிறது.

    • விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும்.
    • ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும்.

    கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். சபரிமலை செல்ல விரத விதிமுறைகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதை பார்க்கலாம்

    * கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே மாலை அணிவது சிறந்தது.

    * தவறும் பட்சத்தில் 19-ம் தேதிக்குள் அணிய வேண்டும். முதல் நாளில் மாலை அணிந்தால் நல்ல நேரம் பார்க்க வேண்டாம். மற்ற தினங்களில் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

    * குறைந்தபட்சம் 41 நாட்களாவது விரதம் இருக்க வேண்டும்.

    * துளசிமணி 108 கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது உத்திராட்சம் மணி 54 கொண்டதாக இருக்க வேண்டும். அதில் ஐயப்ப திருவுருவப் படம் டாலர் ஒன்றை நினைத்து மாலை அணிய வேண்டும்.

    * குருசாமியின் கையால் ஆலயத்துக்குச் சென்று பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி இல்லாதபட்சத்தில், கோயிலுக்கு சென்று கடவுள் பாதத்தில் மாலையை வைத்து பூசாரியிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனே குருவாக நினைத்து மாலையை அணிந்துகொள்ளலாம்.

    * இது எதுவுமே முடியாதபட்சத்தில் தமது தாயின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் கையால் மாலையை வாங்கி அணிந்து கொள்ளலாம்.

    * காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து சரணங்களை கூறவேண்டும்.

    * ருத்ராட்சம் அல்லது துளசி மாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.

    * விரத காலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.

    * காலை, மாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஐயப்பனிற்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும்.

    * விரத காலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூற வேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

    * விரத காலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை போன்றவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும்.

    * நீலம் கருப்பு காவி பச்சை நிற வேட்டி சட்டை அணியவேண்டும்

    * மிக தண்ணிய பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

    * ரத்த சொந்தங்களில் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்

    * ஏதேனும் காரணத்தினால் மாலையை கழற்ற நேரிட்டால் அந்த வருடம் சபரிமலை செல்லக்கூடாது

    * புகைப்பிடித்தல் மாமிசம் மது மாது அறவே கூடாது

    * பெண் வயதுக்கு வந்த குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது

    * காலணி அணிய கூடாது

    * தன் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் ஐயப்பன் ஆகும் பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதி பழக வேண்டும்

    * மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் என்று ஆரம்பித்து முடியும்போது சாமி சரணம் என்று கூறி முடிக்க வேண்டும்

    * இருமுடி கட்டும் பொழுது கோவிலிலோ வீட்டிலுள்ள அல்லது குருசாமியின் இடத்தில்தான் இருமுடி கட்ட வேண்டும்

    * சபரிமலைக்குச் செல்லும் பொழுது யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக்கூடாது

    * பம்பை நதியில் குளிக்கும் போது மூதாதையர்களை நினைத்து ஈமக் கடன்களை செய்து நீராட வேண்டும்

    * சபரிமலை பயணம் இனிய முறையில் முடிந்தபின் குருசாமி அல்லது தாயார் மூலமாகவே மாலையை கழட்ட வேண்டும்.

    * மாலையைக் கழட்டி ஐயப்பனின் படத்துக்கு முன்பு சந்தனத்தில் வைத்து தீபாரதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்

    • நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
    • அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1-ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில், காமராஜர் நகர் சக்தி விநாயகர் கோவில், சோமேஸ்வரன் கோவில், ஆகிய திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் மாலை அணிந்து சுவாமியே சரணம் அயயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • கார்த்திகை முதல் நாள் இன்று தொடங்கியது.
    • 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்துவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ந்தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அவர்கள் ஒரு மண்டலம் முதல் 60 நாட்கள் வரை விரதம் மேற்கொண்டு சிறப்புபூஜைகள் நடத்துவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கார்த்திகை முதல் நாளான இன்று தொடங்கியது. இவ்விழா இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 27-ந்தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

    இதில் பங்கேற்க செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    தமிழகத்தில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலை செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று புனித நீராடி சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் சங்கிலி துறையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சங்கிலி துறையில் உள்ள 16 கால் மண்டபத்தில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்தனர்.

    இதுபோல ஏராளமான கன்னிசாமிகளும் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், நாகர்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும், தக்கலை, குழித்துறை, திருவட்டார், குலசேகரம் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம், கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் திரண்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

    அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். கன்னிசாமிகளும் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    கோவை மாவட்டம் சித்தாபுரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி விட்டு விரதத்தொடங்கினார்கள்.

    நெல்லை மாநகர பகுதியில் பாளை பொதிகைநகரில் உள்ள ஐயப்பன்கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துரை முருகன் கோவில், டவுன் ஈசானவிநாயகர் கோவில், தொண்டர் நயினார் சுவாமி கோவில், நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், தச்சநல்லூர் சிவன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதைமுன்னிட்டு கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் கோவில் வளாகமே ஐயப்ப பக்தர்களின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் ஒலித்தது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் உள்ள குற்றால நாத சுவாமி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வடகிழக்கு பருவமழை காரணமாக மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் கார்த்திகை முதல் நாள் என்பதாலும், சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டதாலும், காலை முதலே அருவிகளில் பக்தர்கள் குவிந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் அருவியில் நீராடி விட்டு குற்றால நாதர் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர்.

    அதிகாலை முதலே குற்றால நாதர் கோவிலில் சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து அருவிக்கரை பகுதிகளில் புதிய கடைகள் அமைக்கும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் தென்காசி பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

    • மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது.
    • விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.

    கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து, ஐயப்ப விரதம் துவங்கி, ஒரு மண்டலம் என்னும் 48 நாட்கள் விரதத்தை கடைபிடித்தல் வேண்டும்.

    காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம். விரத காலத்தில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்க கூடாது. திருமணமானவர்கள் லௌகீக வாழ்வில் ஈடுபடாமல், மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து, ஐயப்ப விரதம் கடைபிடிக்க வேண்டும்.

    ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக மாலையில், ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிந்து கொள்ளுதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். மேலும் கறுப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணிய வேண்டும். கன்னி ஸ்வாமிகள் கறுப்பு நிற ஆடைகளை மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.

    காலை, மாலை குளிர்ந்த நீரில் நீராடி விட்டு பின்னர், ஐயப்பனுக்கு துளசி, பால், பழம், கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து, 108 முறை சரண கோஷம் செய்து வழிபடவேண்டும்.

    விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் என்பவற்றை தவிர்க்கவேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல் இகடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.

    விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி நிறைவு செய்யும் போதும் "ஸ்வாமி சரணம்" என்று கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்பாக, மாலையை எந்த விதமான காரணம் கொண்டும் கழட்டுதல் கூடாது. நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.

    விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது. இரவில் பாய் தலையணை என்பவற்றை தவிர்த்து, அணிந்திருக்கும் வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை "ஐயப்பா" என்றும் பெண்களை "மாளிகைப்புறம்" என்றும் சிறுவர்களை "மணிகண்டன்" என்றும் சிறுமிகளை "கொச்சி" என்றும் அழைக்கபட வேண்டும்.

    மாதவிலக்கான பெண்களை பார்ப்பதும், அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபாடு நிகழ்த்த வேண்டும்.12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

    • குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது.
    • கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியன்று (நாளை) விரதத்தை தொடங்குவது வழக்கம். இதற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

    அதே சமயம் குமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த பொட்டல்குளம் பகுதியில் உள்ள அய்யன்மலை ஐயப்பசாமி கோவில் தமிழக அளவில் புகழ் பெற்றது ஆகும். இது குமரியின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் மருந்துவாழ் மலைக்கு மிக அருகில் உள்ளது.

    இந்த கோவிலிலும் நாளை (வியாழக்கிழமை) ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்க உள்ளனர்.

    இந்த கோவிலை பொட்டல் குளத்தை சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் என்ற சித்தர் நிறுவினார். இவர் பனை ஓலையில் ஐயப்பசாமி குறித்து பல பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர். இவர் சபரிமலை ஐயப்பசாமி கோவிலுக்கு சென்ற போது, நம் பகுதியிலும், இது போன்று ஒரு கோவிலை கட்ட வேண்டும் என்று எண்ணியபடி தூங்கினார். அப்போது அவர் கனவில் ஐயப்பசாமி தோன்றி, அதற்கான இடத்தையும் காட்டினார். அதைத்தொடர்ந்து பொட்டல்குளத்தில் அய்யன்மலை குபேரன் ஐயப்பசாமி கோவிலை நிறுவினார்.

    இந்த மலைக்கு பாதை அமைக்க ஊரில் உள்ளவர்கள் பலரும் உதவினர். அதைத்தொடர்ந்து மலை உச்சியில் 18 படிகளுடன் 1983-ம் ஆண்டு ஐயப்பசாமி கோவில் கட்டப்பட்டது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் ஏராளமானவர்கள் இங்கு வந்து வழிபட்டனர். அப்போது அவர்கள் குமரியின் சபரிமலையாக இந்த கோவில் திகழ்கிறது என்று கூறினார்கள்.

    மேலும், சபரிமலைக்கு செல்ல முடியாத எங்கள் ஏக்கத்தை இந்த கோவில் தீர்த்தது என்றும் தெரிவித்தனர். தற்போது ஏராளமான பக்தர்கள் நேரடியாகவே இங்கு வந்து ஐயப்பசாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை செய்து வழிபடுகிறார்கள். இந்த மலையில் இருந்து சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். தினமும் கோவிலுக்கு மேலே கருடன் வட்டமிட்டு செல்வதும் கோவிலின் சிறப்பாகும்.

    மலையின் அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 108 படிகள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க தியான மண்டபமும் உள்ளது. கோவிலில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தமிழ் மாதங்களில் ஒன்றாம் தேதி முதல் 5-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    கார்த்திகை 1-ந்தேதி முதல் தை 1-ந் தேதி வரை ஐயப்ப பக்தர்களுக்காகவே சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த கோவிலின் நிர்வாகி சித்தர் தியாகராஜ சுவாமிகள் தினசரிஐயப்ப சாமிக்கு பூஜைகள் நடத்தி வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்தது நிறைவேறி வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

    • கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும்

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிச னத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலை யில் சுமந்து சென்று அய்யப்பனை தரிச னம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளைமறுநாள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்தி ரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப் பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், குமார கோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் அய்யப்ப பக்தர் கள் நாளை மறுநாள் அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கு கிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர் கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்க மாகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற் காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
    • ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி.

    ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.

    செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள், வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

    செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

    வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

    செவ்வாய்க் கிழமை தோறும் காலையில் குளித்து முடித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்கு திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    ×