search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #HeavyRains #KeralaRains
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரபிக்கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    இதேபோல் உத்தரகாண்ட், மேற்கு மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம்  தெரிவித்துள்ளது. #HeavyRains #KeralaRains #WeatherWarning
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர். #HeavyRain
    அரக்கோணம்:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



    அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.

    மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    பெங்களூரு:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். மேலும் கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Kumarasamy
    கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. #KeralaFloods #KeralaRain
    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளாவில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    திருவனந்தபுரம்:

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மோட்டார் வாகன தொழில் முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் சென்று விடும் என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே இந்த சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி இன்று போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. பஸ், டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் இன்று இயங்காது என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி, இன்று இந்த போராட்டம் நடைபெற்றது. கேரளாவிலும் இந்த போராட்டம் காரணமாக பஸ், டாக்சி, ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அரசு பஸ்களும் ஓடாததால் அவை டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    கேரளாவில் அதிகளவில் ஆட்டோக்கள் உள்ளன. பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பலரும் ஆட்டோக்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். சரியான கட்டணத்தை ஆட்டோக்கள் வசூலிப்பதால் எப்போதும் சாலைகளில் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வண்ணம் இருக்கும்.

    இன்று போராட்டம் காரணமாக ஆட்டோ சேவை முழுமையாக முடங்கியது. இதனால் ஆட்டோக்களை நம்பி பயணம் செய்ய வந்தவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.

    திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் பஸ்கள் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டம் பற்றி தெரியாத பொதுமக்கள் பஸ்சுக்காக இங்கு வந்து விட்டு ஏமாற்றமடைந்தனர்.

    பஸ்கள் ஓடாததால் அவர்கள் ரெயில் மூலம் அலுவலகம் மற்றும் தங்கள் அவசர பணிகளுக்காக பயணம் மேற்கொண்டனர். இதனால் தம்பானூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களில் கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்தது.

    கேரளாவில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் வாகன ரோந்தும் நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் கேரள எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு பணிகள் காரணமாக கேரள சென்ற குமரி மாவட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    கேரளாவில் மனைவி, மகன், மகளுடன் மந்திரவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஒரே குழியில் உடல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி புதைக்கப்பட்ட வழக்கில் அவருடைய உதவியாளர் நண்பர் கைது செய்யப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். மந்திரவாதியான இவர் அந்த பகுதியில் ஒதுக்கு புறமான இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மந்திரவாதத்துக்காக இவரது உதவியை தேடி வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மந்திரவாதி கிருஷ்ணன், அவரது மனைவி சுசீலா, மகன் அர்ஜூன், மகள் ஆர்ஷா ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீடு அருகே உள்ள உரக்குழியில் புதைக்கப்பட்டு இருந்தனர்.

    இவர்களது உடல்கள் ஒருவர் மீது ஒருவர் என்று வரிசையாக அடுக்கி மூடப்பட்டிருந்தது. இந்த கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மந்திரவாதி குடும்பத்துடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடுபுழா, அடிமாலி பகுதியைச் சேர்ந்த லிபீஷ் (வயது28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்திரவாதி கிருஷ்ணனை அவரது உதவியாளர் அனிஷ் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கு அனிசுக்கு லிபீஷ் உடந்தையாக இருந்துள்ளார்.

    கைதான வாலிபர் லிபீஷ்.

    மந்திரவாதியை அவரது உதவியாளரே கொன்றதற்கான காரணம் பற்றி லிபீஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    மந்திரவாதி கிருஷ்ணனிடம் கடந்த 2 வருடங்களாக அனிஷ் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அவர் தனியாகச் சென்று மாந்திரீகம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். கிருஷ்ணன் அளவுக்கு அவரால் சரியாக மாந்திரீகம் செய்ய முடியவில்லை. இதனால் அவரை தேடி வந்த கூட்டமும் குறையத் தொடங்கியது.

    கிருஷ்ணன் தனக்கு முழுமையாக மாந்திரீகத்தை கற்றுதராதது தான் இதற்கு காரணம் என்று அனிஷ் நினைத்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக எனது உதவியை நாடினார். முதலில் நான் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனை தீர்த்து கட்டினால் அவரிடம் இருக்கும் மாந்திரீக சக்திகள் தனக்கு வந்து விடும். அதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி என்னை சம்மதிக்க வைத்தார்.

    திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு மந்திரவாதி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஆடுகளை கத்தியால் கீறினோம். ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணனை இரும்பு கம்பியால் அனிஷ் தாக்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது மனைவி சுசீலாவை நான் கத்தியால் குத்தினேன். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததால் அவர்களை தூக்கிச் சென்று வீட்டுக்குள் போட்டோம்.

    இதற்கிடையில் குழந்தைகள் அர்ஜூன், ஆர்ஷா ஆகியோரும் விழித்துக் கொண்டனர். அவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்த 30 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டுச்சென்று விட்டோம்.

    மறுநாள் இரவு அங்கு சென்று வீட்டை திறந்து பார்த்த போது சிறுவன் அர்ஜூன் உயிரோடு மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. மந்திரவாதி கிருஷ்ணனும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் பிணமாக கிடந்தனர். இதனால் அருகில் இருந்த உரக்குழியை தோண்டி மனைவி, மகள் பிணத்தை முதலில் போட்டோம்.

    பிறகு கிருஷ்ணன், அர்ஜூனை உயிரோடு அதே குழியில் போட்டு மூடி விட்டு தப்பிச் சென்று விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மந்திரவாதி குடும்பத்தினர் கொலையில் முக்கிய குற்றவாளியான அனிஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கைதான லிபீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை வட்ட வழங்கல் அதிகாரி நேற்று பறிமுதல் செய்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாள் தலைமையில் ஆய்வாளர் ஆனந்த கோபால் உள்ளிட்டவர்கள் வடசேரி பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கேரள பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் இருக்கைக்கு அருகே சில மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனே அதிகாரிகள் அந்த மூடைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் 450 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக பஸ் நிலையத்தில் கடை நடத்தி வருபவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அரிசி மூடைகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதே போல பள்ளவிளை பஸ் நிறுத்தத்திலும் மறைவான இடத்தில் சுமார் 400 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை ஆய்வு நடத்தி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் இவற்றையும் பதுக்கி வைத்திருந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

    அதைத் தொடர்ந்து 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 850 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் கோணத்தில் உள்ள அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரிசி மூடைகள் ஒப்படைக்கப்பட்டன. 
    கேரளாவில் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்த கன்னியாஸ்திரியை மிரட்டி புகாரை வாபஸ் பெறும்படி வற்புறுத்திய தலைமை பாதிரியாரிடம் விசாரிக்க கேரள போலீசார் விரைந்துள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாதிரியாரால் கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் மீது முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

    இதையடுத்து இந்த புகார் மீதான விசாரணை கேரள போலீசாரால் முடுக்கி விடப்பட்டது. இந்த புகாருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட பகையை மனதில்கொண்டு கன்னியாஸ்திரி பெண் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் அந்த பாதிரியார் தரப்பில் கூறப்படுகிறது.

    சமீபத்தில் அந்த கன்னியாஸ்திரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜலந்தர் பகுதியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தைல், புகாரை வாபஸ் பெருமாறு மிரட்டியுள்ளார். மேலும், தனது பேச்சைக் கேட்டு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால், 10 ஏக்கர் நிலமும், தனி மடம் ஒன்றும் அமைத்து தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கன்னியாஸ்திரி, பாதிரியாரின் செல்போன் உரையாடலைக் கொண்டு அவர்மீதும் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக தலைமை பாதிரியார் ஜேம்ஸ் எர்தலிடம் விசாரணை நடத்துவதற்காக டி.எஸ்.பி சுபாஷ் தலைமையிலான தனிப்படை ஜலந்தர் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டள்ளனர். #Kerala #NunSexualAssaultCase
    கேரளாவில் போலீஸ் நிலைய காவலில் இருந்த விசாரணை கைதியை அடித்துக் கொன்றது தொடர்பான வழக்கில் 6 போலீசாருக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படுகிறது. #KeralaPolice
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகன் உதயகுமார், (வயது 30). திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரும்புக்கடையில் உதயகுமார் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றனர்.

    அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுரேஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    உதயகுமார் கையில் ரூ.4 ஆயிரம் பணம் இருந்தது. இதனால் அவரையும் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் பணம் வைத்திருந்தது பற்றி கேட்டனர். அவர், ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் அளித்த போனஸ் பணம் என்று கூறினார்.

    இதை நம்ப மறுத்த போலீசார் அவரை அடித்து உதைத்தனர். மறுநாள் அவரை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து போனார்.

    இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனு கொடுத்தார்.


    அந்த மனு மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பிரபாவதி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

    சி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில், சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் ஆகியோருக்கு வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், மற்றவர்கள் சதி திட்டம் தீட்டுதல், ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்து சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.

    இதில், ஏட்டு சோமன் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறினார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். நேற்று கோர்ட்டில் தீர்ப்பை கேட்பதற்காக ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர்.

    மற்ற 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி கூறி உள்ளார்.அவர்களும் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்படுவார்கள்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரபுழா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஜித் என்ற வாலிபர் மரணமடைந்தார். இவரும் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    மாநில மனித உரிமை கமி‌ஷனும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சில போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். இதில், கொலை முயற்சி, பாலியல் புகார்கள், பணமோசடி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக 59 போலீசார் மீது குற்றம் சாட்டுக்கள் கூறப்பட்டது.

    இதில் 10 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் மீது விரைவில் நடவடிக்கை இருக்குமென்று தெரிகிறது. #KeralaPolice
    நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #shigellavirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

    இந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. மேலும் 2 குழந்தைகள் இந்த பாதிப்பு காரணமாக அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் குழு அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.



    இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கேரளாவில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 2,564 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் ஷிகெல்லா வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. #shigellavirus
    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கேரளாவிற்கு டெம்போ வேன்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. #LorryStrick
    கோவை:

    இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இது போல் கோவை மாவட்டத்திலும் லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான லாரிகள் கோவையை அடுத்த வாளையாறு வழியாக கேரளாவுக்கு செல்வது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாக அந்த லாரிகள் அனைத்தும் வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளன.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் தினமும் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 100 லாரிகளில் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் கோவைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

    ஆனால் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆனால் 20-ந் தேதிக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றிய 20 லாரிகள் நேற்றுக்காலை கோவை வந்தன. காய்கறி லாரிகள் என்பதால் அவற்றை யாரும் தடுக்கவில்லை. கோவை வந்த அந்த லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    ஆனால் பெரிய லாரிகளை இயக்க முடியாது என்பதால் கேரளாவில் உள்ள காய்கறி வியாபாரிகள் தங்களுக்கு சொந்தமான டெம்போ வேன்களில் கோவையில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு சென்றனர். கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட டெம்போ வேன்களில் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இது குறித்து எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளன. மற்ற காய்கறிகளும் ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை வியாபாரிகள் தங்கள் சொந்த டெம்போ வேன்களில் கொண்டு செல்கின்றனர். இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடையவில்லை.

    காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் டெம்போ வேன்களை இதுவரை யாரும் தடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களுக்கு கேரளாவுக்கு டெம்போ வேன்கள் மூலம் காய்கறி கொண்டு செல்ல முடியும். அதன்பின்னர் கோவை மார்க்கெட்டில் இருப்பு குறைந்த பிறகு கேரளாவில் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

    கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஆட்டோக்கள், டெம்போ வேன்களில் கோவை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது அரசு பஸ்களிலும் காய்கறி மூட்டை களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவையின் சுற்று வட்டாரங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய எங்கும் கொண்டு செல்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் வெளிமாநிலங்களில் வரும் காய்கறிகள் தற்போது தடைபட்டு உள்ளது. அவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrick
    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 10 நாட்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஆழப்புழா, கோட்டயம் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 569 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 86 ஆயிரத்து 598 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதையடுத்து, எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் இன்றும் நாளையும் நடக்க இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக சுமார் 113 கோடியே 19 லட்ச ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து உதவியும் கோரியுள்ளது.

    கேரளாவில் கடந்த மே மாதம் முதல் மழையினால் ஏற்பட்ட விபத்துக்களில் மட்டும் சுமார் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    ×