search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். #KeralaRain
    கோழிக்கோடு:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் கோழிக்கோடு, வயலூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    நிலச்சரிவில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

    அப்போது இடிபாடுகளில் சிக்கி கிடந்த 1½ வயது குழந்தை ரிபா மரியம், அபினவ் (வயது 17) ஆகியோரின் உடல்களை நவீன கருவிகளின் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டனர். குழந்தை ரிபா மரியத்தின் தாய் உள்பட 6 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை கேரள மந்திரிகள் டி.பி. ராமகிருஷ்ணன், ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், கேரள எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சென்னிதலாவும் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.



    இதற்கிடையே கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும், மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முதல்-மந்திரி உத்தரவிட்டார். 
    முதுமலை வளர்ப்பு யானை முகாமில் கேரளாவை சேர்ந்த 3 யானைகளுக்கு கும்கி பயிற்சி தொடங்கியது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, நோய்வாய்படும் யானைகள் பிடிக்கபட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த, நீலகண்டன்(வயது 22), சூரியன்(20), சுரேந்திரன்(20) ஆகிய 3 யானைகள் கும்கி பயிற்சி பெற முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து இந்த 3 யானைகளும் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டன. பின்னர் பயிற்சிக்காக யானைகள் அங்குள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டன. பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சண்முகப்பிரியா, கேரள மாநில முத்தங்கா வனக்கோட்ட வன அலுவலர் சாஜன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை அளித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த 3 யானைகளுக்கும் 90 நாட்கள் கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் யானைகளை ஆற்றில் குளிக்க வைத்தல், அத்துடன் காட்டு யானைகளை விரட்டுதல், ரோந்து செல்லுதல், மரங்களை தூக்கி செல்லுதல், பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுதல் என பல்வேறு வகையான கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்றனர்.

    இந்த பயிற்சிகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், மருத்துவர்கள் அளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் தயானந், சிவக்குமார், காந்தன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கேரளாவில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இளம்பெண்ணும், வாலிபர்களும் செல்போனில் வீடியோ சாட்டிங் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இதன் மூலம் அந்த பெண்ணிடம் அதிக பணம் இருப்பதை 4 வாலிபர்களும் தெரிந்து கொண்டனர். அவர்கள் பெண்ணிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதற்காக அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து ஆபாச படம் தயாரித்தனர். அந்த படத்தை இன்னொரு செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பெண்ணிடம் செல்போனில் வேறு நபர் பேசுவதுபோல் பேசி, பணம் கேட்டனர். பணம் தர மறுத்தால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர். பயந்து போன அந்த பெண், அவர்களுக்கு பல்வேறு தவணையாக ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தார். மேலும் அவரது நகைகளையும் வழங்கினார்.

    பெண்ணிடம் இருந்து வாங்கிய பணம் மூலம் 4 வாலிபர்களும் தனியாக கார் வாங்கினர். அதில், கோவா, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர்.

    தமிழில் வெளியான திருட்டு பயலே படம் போல நடந்த இச்சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் 4 வாலிபர்களையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக வல்லாப்பாடு போலீஸ் அதிகாரி சைஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    4 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டபோது, அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வருமாறு அந்த பெண் அழைப்பதுபோல் போலீசார் அழைத்தனர்.

    அதனை நம்பி வந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொத்தகுளத்தைச் சேர்ந்த ஆதித்யன், வல்லப்பாட்டைச் சேர்ந்த அஜய், தலைக்குளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆதில் ஆகியோர் ஆவார். அவர்களிடம் இதுபோல வேறு யாரிடமாவது பண மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புஷ்கரன் கூறும்போது, பெண்கள் செல்போனில் தவறான நபர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக செல்போனை கையாள வேண்டும் என்று கூறினார். #Tamilnews
    கேரளாவில் போலீஸ் டிரைவரை தாக்கியதாக ஐபிஎஸ் அதிகாரியின் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் தலைவரான ஏடிஜிபி சுதேஷ் குமாரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் கவாஸ்கர். இவர் சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர்.

    இந்நிலையில், நேற்று காலை அதிகாரி சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வாக்கிங் சென்றபோது, கார் வருவதற்கு தாமதம் ஆனது. இதனால் டிரைவர் கவாஸ்கரை அதிகாரியின் மகள் திட்டியுள்ளார். தன்னை திட்டவேண்டாம் என டிரைவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அதிகாரியின் மகள், டிரைவரை தன் செல்போனால் தாக்கியுள்ளார்.  இதில் காயமடைந்த கவாஸ்கர் மாவட்ட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுதொடர்பாக டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரியின் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எதிர் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கவாஸ்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்துவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
    கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Keralarains
    கோழிக்கோடு:

    கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது.

    தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

    நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் மாயமானார்கள். இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

    அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது பற்றி அறிந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மந்திரிகள், தலைமை செயலாளர், கலெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தினார். கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    நிலச்சரிவால் கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  #KeralaRain
    கேரள மாநிலத்தில் இரவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக இறங்கிய இளம்பெண்ணை தனியாக விட்டுசெல்ல மனமின்றி காத்திருந்த அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று கடந்த ஞாயிறு அன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் (41) என்பவர் டிரைவராகவும், ஷைய்ஜூ (40) என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர்.

    இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஆதிரா என்ற இளம்பெண் ஒருவர் இறங்க வேண்டிய கொல்லம் அருகே உள்ள சங்கரமங்கலம் பேருந்து நிறுத்தத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பேருந்து வந்தது. அப்போது அங்கு நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. இதனால் தனியாக அந்த பெண்ணை இறக்கிவிட்டு செல்ல மனமில்லாமல் அவரது உறவினர் வரும் வரை அப்பேருந்தின் டிரைவரும், கண்டக்டரும் காத்திருந்தனர். 

    சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சகோதரர் வந்த பின்னரே பேருந்து அந்த இடத்தை விட்டு சென்றது. இதுகுறித்து அந்த பெண் பேஸ்புக்கில் பதிவு செய்து, அந்த கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
    கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் இன்று அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளம் பகுதியை சேர்ந்தவர் உசேன். துபாயில் எலட்ரீசியனாக உள்ளார். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு ஏற்கனவே 20 வயதில் இளம்பெண் உள்ளார்.

    இந்நிலையில் சல்மா 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கர்ப்பமானார் ஒரே பிரசவத்தில் 2 ஆண், 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். அவர்களுக்கு முகமது பாசிம், முகமது பிசாம், பாத்திமா பனினா, பாத்திமா ஹம்னா என்று பெயரிட்டு வளர்த்தனர்.

    தற்போது அவர்களுக்கு 4 வயதாகிறது. இதனையொட்டி அவரது பெற்றோர் சங்கரங்குளம் கோக்கூன் அரசு பள்ளியில் அவர்களை எல்.கே.ஜி.யில் நேற்று சேர்த்தனர். பள்ளிக்கு வந்த 4 குழந்தைகளையும் ஆசிரியர்கள், அதிகாரிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

    ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளும் ஒரே சீருடையில் பள்ளிக்கு வந்ததை அப்பகுதி பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். #tamilnews
    எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றக்கோரி நீதிபதி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மைய பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது.

    இந்த மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும் இந்த குப்பைகள் அகற்றப்படவில்லை.

    இதுபற்றி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் அருகில் உள்ள பள்ளி நிர்வாகத்தினர் கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகும் குப்பைகள் அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் எர்ணாகுளம் சட்ட உதவி மைய துணை நீதிபதி பசீர் நேற்று இக்குப்பைகளை அகற்றக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். காய்கறி மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்ட குப்பைகளின் அருகில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது கொச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மின்னல் வேகத்தில் மார்க்கெட்டுக்கு வந்தனர். 1 மணி நேரத்தில் குப்பைகள் அனைத்தையும் அகற்றினர்.

    நீதிபதி ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதும், இதனால் ஒரு வாரமாக தேங்கி கிடந்த குப்பை உடனடியாக அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதார சீர்கேடே இந்நோய்களுக்கு காரணம். எனவே சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். எனவே தான் குப்பைகளை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்டேன்.

    இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் இதுபற்றி புகார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றே இப்போராட்டத்தை நடத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, எர்ணாகுளம் காய்கறி மார்க்கெட்டில் தினமும் 6 முதல் 7 லோடு குப்பைகள் தேங்கும். அவற்றை உடனுக்குடன் அகற்றுவோம். கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. எனவேதான் குப்பைகள் தேங்கி விட்டது என்றனர். #Tamilnews
    கேரளாவில் வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஒரே நாளில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 10 முதல் 12 சென்டிமீட்டர் வரை மிக கனத்த மழை பெய்யும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை கேரளாவில் மழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகளும் இடிந்து உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

    நேற்று கேரளாவில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் 32 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் இன்று இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பத்தனம் திட்டா மாவட்டத்தில் ராணி, மல்லப்பள்ளி தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த மழை காரணமாக மலங்கரா அணை நிரம்பி விட்டது. இந்த அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகியார் அணை, நெய்யாறு போன்ற அணைகளுக்கும் அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த பகுதி மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாலும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 15-ந்தேதி வரை அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு தொடர்பாக 1072 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மழை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
    கேரளாவில் முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க தலைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. #KeralaUnionLeader
    கொல்லம்:

    கேரளாவில் முந்திரி ஆலைத் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. வேலை இழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில், முந்திரி தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, இன்று கொல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த தொழிற்சங்க தலைவர் இ.காசிம் (வயது 69), திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவரது மறைவினால் கூட்டத்தில் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். முதல்வர் பினராயி விஜயன் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

    ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினரான காசிம், தற்போது சி.ஐ.டி.யு.யுடன் இணைந்த கேரளா முந்திரி தொழிலாளர்கள் மைய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். இதுதவிர கேரள மாநில முந்திரி வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

    அவரது மறைவுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KeralaUnionLeader

    கேரளா மாநிலத்தில் மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காவுமடம் பாலா பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ஆனி அம்மா (வயது 65). இவர்களது மகன் பெபி மேத்யூ (48). திருமணமாகவில்லை.

    நேற்று மாலை பெபி மேத்யூக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி பெபி மேத்யூ பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தசெய்தியை அங்கு நின்ற தாய் ஆனி அம்மாளிடம் டாக்டர் கூறினார். இதைகேட்டு அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே ஆனி அம்மாளை அதே ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆனி அம்மாளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    தென்மேற்கு பருவமழை தொடர்பாக கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Rain
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதாக கடந்த 29-ந்தேதியே தொடங்கிவிட்டது.

    இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கிறது. திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    திருவனந்தபுரம் பகுதியில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து உள்ளது. இங்கு 48.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொச்சியில் 51.8 மில்லி மீட்டர் மழையும், கண்ணூரில் 30.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதனால் கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் மழைக்கு ஒரு வாலிபர் பலியாகி உள்ளார். அவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மழை காரணமாக மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் உயிரிழந்தார்.

    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மிக அதிகபட்சமாக சில இடங்களில் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கொச்சி வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

    விழிஞ்சம், சிறையின்கீழ், கோவளம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு, வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் ஆகிய 5 மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், இதன் காரணமாக பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆறுகளில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இந்த மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. #rain
    ×