search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • பூர்ணாஹீதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மாலாபுரம் அக்ரகாரத்தில்

    ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, ஸ்ரீ பகவத் ப்ராத்தனா அனுக்ஞை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை கும்ப பூஜை, கலாகர்ஷனம்,கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் அங்குரார்பனம், திக்பந்தனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    காலை 4ம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹீதி அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்பு, மங்கல வாத்தியங்கள் முழங்கள், கடங்கள் புறப்பாடு நடைபெற்று அதன் பிறகு பட்டாச்சாரிகள் வேத மந்திரம் முழங்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபி ஷேகம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கைகள் நாதஸ்வர கச்சேரியுடன் கருட சேவை புறப்பாடு திருவீதி உலாவும் நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோபுராஜபுரம், மாலாபுரம், பெருமாங்குடி பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் நாட்டான்மை காரர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
    • பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கோவில் செயல் அதிகாரி முருகையன் தலைமை தாங்கினார். குருக்கள் வினோத் மற்றும் பாலு விழாவுக்கான பூஜையை நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர் பாலகிருஷ்ணன் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் ராஜா, சர்வாலய உழவார பணிக்குழுவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், துரை ராயப்பன், எடையூர் மணிமாறன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முக சுந்தரம், லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் ஸ்ரீனிவாசன், கவுன்சிலர் எழிலரசன், சந்திரராமன் மற்றம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பிடாரி கருப்ப சுவாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்விய பூஜை, மகா கணபதி ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    நேற்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
    • கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.

    மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

    மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.

    தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.

    • தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி யில் தெற்கு எல்கையில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி கோவில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன.

    4-ம்கால பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியானதும் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் புனித நீர் கடங்களை சுமந்து மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    அதன் பின்னர் தர்ம முனீஸ்வரர் மூலவர் விமானக்கோபுர கலசத்தின் மீதும் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீதும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டனர்.

    • வினை தீர்க்கும் வேலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29-ந் தேதி விக்னேசவர பூஜை, தன பூஜை உடன் தொடங்கி கணபதி ஹோமம் வாஸ்து சாந்திகள் நடைபெற்று, நேற்று முன்தினம் அதிகாலை பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை கடம் புறப்பாடாகி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலஸ்தான கும்பாபிஷேகம், மகிஷாபிஷேகம் ஆகியவை நடந்தன.

    இதில் பட்டணம்காத்தான் சேதுபதி நகர் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே சக்கரப்பநாயக்க னூரில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, ஸ்ரீபதி தலைமையில் 2 கால யாகபூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நந்தி, பலிபீடத்திற்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, கோழிப்பட்டி கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • அறந்தாங்கி அருகே அழிஞ்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்பலவானேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ அழிஞ்சி அய்யனார் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக 4 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மோகன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தா னத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.

    கடந்த 30-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதை யொட்டி 4 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் ஸ்ரீசேவுகப் பெருமாள் அய்யனாருக்கு மட்டும் தனியாக 33 குண்டங்களும், பரிவார தேவதைகளுக்கு 8 குண்டங்களும் என 41 குண்டங்கள், 91 சிவாச்சாரியார்களை கொண்டு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. இன்று காலை மங்கள இசை, தமிழ் திருமறை மண்டப சாந்தி,பிம்பசுத்தி,லட்சுமி பூஜை,கோ பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி ஸபர்ஷாகுதி நாடி சந்தானம் மஹா பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றியுள்ள தேரோடும் 4 ரத வீதியில் வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் நவகிரகம் பிடாரி அம்மன் சன்னதி, கணபதி சன்னதி, முருகப்பெருமான் சன்னதி, சுயம் பிரகாஷ்வரர் சன்னதி, அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி உள்ளிட்ட கர்ப்ப கிரகங்களின் விமானங்கள் தங்க கவசங்களால் வேயப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் மதுராந்தகி நாச்சியார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அருகே செல்வவிநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது.

    திருப்பணிகள் முடிந்து கடந்த 30-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை முதலாம் கால பூஜையும், மாலையில் இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று நவக்கிரக ஹோமம், 4-ம் கால ஹோமங்கள், அஷ்டபந்தனம் நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. காலை 3.35 மணிக்கு 5-ம் கால ஹோமங்கள், 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, 7.30 மணிக்கு கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து 7.45 மணிக்கு செல்வ விநாயகர், பாலமுருகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8.30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே ரேஸ்கோர்ஸ் செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் கோவில் அறங்காவலராக எம்.மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையொட்டி மகேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்னை 108 விநாயகர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் கார்த்திக், கோவை மாவட்ட அறங்காவலர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.

    • அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது.

    கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதையடுத்து மகா மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மதியம் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக அக்னி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் செய்தல், மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் காலை யாக பூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி யும், அதனை தொடர்ந்து விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ண சாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • இன்று 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாகபூஜை நடக்கிறது.
    • நாளை 4-ம் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவில். இங்கு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. சிற்பி செந்தில் தலைமையிலான சிற்ப கலைஞர்கள் திருப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, தன பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

    இன்று(புதன்கிழமை) 2-ம் கால யாக பூஜையும், 3-ம் கால யாகபூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நாளை 4-ம் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை 8.5 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கடங்கள் புறப்பாடாகி 8.15 மணி அளவில் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி பகல் 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 2-ந்தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கருப்பையா சுவாமிகளின் குடும்பத்தினர் மற்றும் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

    ×