search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின.
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் விரைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இதற்கான பாலாயபணிகள் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் தொடங்காமல் இருந்தது. இதனைதொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு செய்து பழனி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனைதொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கான கும்பாபிஷேக குழுவும் அமைக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது வருகிற ஜனவரி 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷான சிலையை ஆய்வு செய்ய இன்று ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் வந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உள்ளே சென்ற அவர்கள் நவபாஷான சிலையின் எடை, உயரம் மற்றும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சிலை ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
    • நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.

    சுவாமிமலை:

    ஆடுதுறை மருத்துவ க்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோயில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதனை முன்னிட்டு நாளை ( 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு கங்கை, யமுனா, கோதாவரி,சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள் உள்ளிட்ட 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.

    13-ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18-ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலமும், தொடர்ந்துநான்கு கால யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாச ந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரம்மாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கசுவாமி தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பேரூராதீனம் சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் துறவியர்கள், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்துறவியர்கள் உள்ளிட்ட சைவ, வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட துறவியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கிராம நாட்டான்மைகள், செயல் அலுவலர்கிருஷ்ண குமார், பக்தர்கள் செய்து ள்ளனர்.

    • மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • இன்று நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் மேட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.

    திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் கோவிலில் குடமுழுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.25-க்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 12 மணி வரை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.

    மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது.

    10 மணி அளவில் விமான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. 10.15 மணி அளவில் மூலஸ்தான மகா குடமுழுக்கு நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    • மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பர்வதவர்த்தினி உடனமர் இராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1919-ம் ஆண்டிற்கு முன்பு நூற்றாண்டு காலம் சிறிய சிவாலயமாக இருந்து பின்னர் பரம்பரை அறங்காவலர்களால் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேசுவரம் கோவிலின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் கோவையின் ராமேஸ்வரம் என இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்த கோவிலில் புதியதாக மூன்று நிலை ராஜகோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு சுமார் 3000 சதுரடியில் கோவிலுக்கு என்று நிரந்தர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி 27 குண்டங்கள் அடங்கிய யாகசாலையும், ஆகம விதிகளின்படி மந்திரங்கள் ஓதப்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 9-ந் தேதி காலை முதல் கால யாக வேள்வி பூஜை, தீபாராதனையும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தொடர்நது 10-ந் தேதி (இன்று) விசேஷ சாந்தி, பூத சுத்தி, 108 த்ரவ்யாஹூதி, கோபுர விமான கலச பிரதிஷ்டையும், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர ஸ்தாபனமும், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. மாலை விநாயகர் பூஜை, மண்டப பூஜை, யாக குண்ட பூஜை உடன் சிவபெருமானுக்கு எந்திர ஸ்தாபனமும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை 11-ந் தேதி காலை நான்காம் கால வேள்வி பூஜை மகா சங்கல்பம், கும்ப கலச புறப்பாட்டு உடன் காலை 9.15 - 10.15 மணியளவில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி காலை 9 மணி முதல் மஹா அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையையொட்டி மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • கும்பாபிஷேக விழா நாளை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது.
    • 11-ம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    குறிஞ்சிப்பாடி அருகே திருத்தினை நகரில் பிரசித்தி பெற்ற சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தனபூஜை, பூர்ணாஹீதி ஆகியவை நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், முதல் காலயாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஆஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.

    பின்னர் 9 மணிக்கு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர், காத்தவராயன், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கருப்பனூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில் மகா கும்பாபிஷேகம் நகராட்சி கவுன்சிலர் குட்டி என்கிற சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்துபுண்யாஹம், வாஸ்து சாந்தி, கலசஸ்தாபிதம், அங்குரார்பனம், முதல் கால கலச பூஜை, விசேஷ திரவ்ய ஹோமங்கள். பூர்ணாஹுதி, வேதம், கீதம் தீபாராதனை, 2, கால பூஜை, புண்யாஹம், 3 ம் கால கலச பூஜை, மஹா சாந்தி ஹோமங்கங்கள தம்பதிகள் சங்கல்பம், மஹா பூர்ணாஹுதி, மேளதாளங்களுடன் கலசம் புறப்பாடு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிக ழ்வாக கோபுரகலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அப்போது கூடி இருந்த பக்தர்கள் நாராயணா, கோவிந்தா, என கோஷமிட்டனர், நிகழ்ச்சியில் எம் எல்ஏ க்கள், ஏ. நல்லதம்பி, மதியழகன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் லட்சுமி நாராயணர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சாமி திருக்கல்யாணம் வானவேடிக்கைகள் நடைபெற்றது.

    • அலங்காநல்லூர் அருகே நயினார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்னனம்பட்டி கிராமத்தில் நயினார் சுவாமி, நொண்டிசுவாமி, ஆண்டிசுவாமி, பட்டவர் சுவாமி, அக்காயிசுவாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 4 கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி பீடத்தின் மீது அமைந்துள்ள நயினார் சுவாமி மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.
    • கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    வீரபாண்டி:

    திருப்பூர் தெற்கு வட்டம் வீரபாண்டி கிராமம் ஏ. பி. நகர் கிழக்கில் ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூர்த்திகளாக விளங்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்க்கை அம்மன், ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நாளை 7-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இன்று 6ந்தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஷ்வர பூைஜ, தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. 9 மணிக்கு மூஷிகவாகனனுக்கு முளைப்பாரி எடுத்து உலா வருதல் , காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி கணேசருக்கு கோபுர கலசம் நிறுவுதல், விநாயக பெருமானுகுகு பிம்ப சுத்தி, அதிவாச கிரியைகள், சயனாதி வாசம் ,மதியம் 2மணிக்கு கரியுருவான அண்ணலுக்கு யந்திர பிரதிஷ்டை நடைபெற்றது.

    மாலை 4மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரஹணம், முளைப்பாரிக்கு பாலிகாஸ்தாபனம், சோமகும்ப ஆவாஹனம், ரக்‌ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்பஸ்தாபனம், கணபதிக்கு கலாகர்ஷனகனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    மாலை 6மணி முதல் யாகசாலபிரவேசம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், ஆனைமுகனுக்கு அக்னி பிரதிஷ்டை, பிள்ளையாருக்கு முதல் கால ஹோமம், மூலமந்த்ர,தத்வ,நியாச, ஹோமங்கள், திரவியா ‌குதி,பூர்ணா‌ஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், த்வஜ, த்வார, தோரண, கும்ப ஆராதனம், நான்மறைகள் போற்றும் நாயகனுக்கு இரண்டாம் கால ஹோமம், பிராண பிரதிஷ்டா ஹோமம், நாடிசந்தானம், ஸ்பர்ஸாஹூதி, மகா பூர்ணா ஹூதி, க்ரஹப்ரீதி, யாத்ராதானம் நடக்கிறது.

    காலை 9மணி முதல் ஸ்ரீசெல்வசித்தி விநாயகர் மூலவர், விமானம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, மூஷிகர், பலி பீடம் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அபிஷேகம், மகா தீபாராதனை, தசதரிசனம், சங்கடங்கள் தீர்க்கும் சங்கரன் புதல்வனுக்கு சதுர் அன்ன மகா நைவேத்யம்,கஜகர்ணனின் திருச்செவிகளுக்கு கற்கண்டு ,தமிழில் திருமறை விண்ணப்பம், மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10-30மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும். யாகசாலை பூஜைகளை தொட்டம்பட்டி ஜெகநாத அய்யங்கார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர்.

    • பல்வேறு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் சுண்ணாம்புப்பேட்டையில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபூஜைகள் விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ரோட்டரி சங்க ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாயகேசவலுநாயுடு குடும்பத்தினர்கள், விழா குழுவினர் பிரதர்ஸ் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் வெள்ளிமலை கரட்டு காலனியில் அமைந்துள்ள சிவன், அங்காள ஈஸ்வரி அம்மன், பெருமாள், அனுமார், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டு வரும் அய்யப்ப சாமி கோவிலின் எழில் மிகு தோற்றம்.

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம், துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினரால் புதிதாக அய்யப்ப சாமிக்கு கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், துறவிக்காடு சாலையின் வடபுரத்தில் அய்யப்ப சாமிக்கு கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    அய்யப்ப சுவாமி கோவிலின் திருப்பணி வேலைகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெறும் நிலையை எட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அய்யப்ப சுவாமிக்கும் அதன் பரிவார தெய்வங்களான கன்னி மூல கணபதி, நாகராஜா சாமி, மஞ்சமாதா, கடுத்தசாமி, கருப்பர் சாமி ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ராமநாதன் தலைமையில் திருச்சிற்றம்பலம் துறவிக்காடு அய்யப்ப பக்தர்கள் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது.

    புகழ்பெற்ற சுசீந்திரம் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 18 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து சுசீந்திரம் தெற்கு மண்மடத்தைச் சேர்ந்தவரும், சுசீந்திரம் கோவில் நித்திய யோகஸ்தானியருமான திலீப் நம்பூதிரி (வயது 53) கூறியதாவது:-

    நாங்கள்தான் கோவில் திருவிழாக்களின்போது கொடியேற்றுவோம். யாருடைய அனுமதியும் இன்றி நாங்கள் கோவிலுக்குள் சென்றுவர எங்களுக்கு உரிமை உண்டு. கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஊர்மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இதனால் உருவாகும் தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். களபபூஜை நடத்துவது ஊர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். அதேபோல்தான் கும்பாபிஷேகத்தையும் நடத்த வேண்டும். எனவே அரசு எவ்வளவு சீக்கிரமாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

    சுசீந்திரம் கோவில் வட்டப்பள்ளி ஸ்தானிகரும், ஆயுர்வேத டாக்டருமான சிவபிரசாத் (45) கூறியதாவது:-

    கோவில்களை பொறுத்தவரையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சாதாரணமாக கும்பாபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும்போது மொத்தத்தில் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.

    கோவிலில் உள்ள இடர்பாடுகள், பழுதுபார்க்கும் பணிகள், சுத்தப்படுத்த வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும். இந்த பணி என்பது நமது வீட்டை எவ்வாறு பராமரிப்பு செய்வோமோ அதுபோன்றதுதான் கோவில் கும்பாபிஷேகப்பணியும். 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளை கடந்து அதிகமாக 6 ஆண்டுகளும் ஆகிவிட்டது.

    கடந்த திருவிழாவின்போதே அதிகாரிகள் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்கள். கோவில்கள் ஒவ்வொரு ஊருக்கும் பலன் தரக்கூடியதாகும். கும்பாபிஷேகம் செய்யும்போது ஊருக்கும், மக்களுக்கும் புண்ணியங்களும், நன்மைகளும் கிடைக்கும். எனவே எவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் ஆகிய கோவில்கள் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களாகும். இதற்காக திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும்.

    சுசீந்திரம்தாணுமாலயன்சாமி கோவில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக மாடர்ன் டைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைக்கும் பணி ரூ.76 லட்சத்திலும், உபசன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் பணி ரூ.21 லட்சத்திலும், மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணி ரூ.62 லட்சத்திலும், கருங்கல்லால் ஆன கட்டமைப்புகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, வரிவாளம் அமைக்கும் பணி ரூ.39 லட்சத்திலும், விமானங்களில் வர்ணம் பூசுதல் பணி ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், ராஜகோபுரத்தில் திருப்பணி ரூ.30 லட்சத்திலும், மின் இணைப்பு பணி ரூ.25 லட்சத்திலும் என மொத்தம் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியம் நன்றாக உள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட 3 கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×