search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம்"

    கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவில். இங்குள்ள மலைமேல் முருக பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் முருக பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து, அஷ்டமாசித்திகளை வழங்கி, திருப்புகழ் பாட சொல்லி அதன்படி, அருணகிரிநாதர் முருகனை பற்றி பாடியதும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த கோவிலாகவும் விளங்குகிறது.

    இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவானது கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருக பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோவில் கீழ ரதவீதியில் நேற்று மாலை 6 மணியளவில் எழுந்தருளினார்.

    அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து முருகனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பால், லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை முருக பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் புரிந்து அவர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். இந்த நிகழ்வே முருகப்பெருமான் எழுந்தருளிய கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா முருகனின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் 6-ம் திருநாளான நேற்று கந்தசஷ்டி விழாவாகும். இதையொட்டி மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விளாபூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி பூஜைகள் நடந்தன.

    பின்னர் பகல் 11.30 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி அடையும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சின்னக்குமாரருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வில்-அம்பு, கேடயம், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதையடுத்து உச்சிகால பூஜைக்கு பிறகு மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 2.45 மணியளவில் அசுரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமியிடம் பராசக்திவேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சக்தி வேலை மலைக்கொழுந்து அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து பின்னர் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னக்குமாரர் வில்-அம்பு, கேடயத்துடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் இருந்து சூரனை வதம் செய்வதற்காக புறப்பட்டார். அவருடன் வீரபாகு தேவர், நவ வீரர்கள் புடைசூழ புறப்பட்டனர்.

    விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் விசேஷ அலங்காரத்தில் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், பாதவிநாயகர் கோவில் வந்தடைந்தார்.

    சூரசம்ஹாரத்தை காண திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    அதையடுத்து பராசக்தி வேல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பராசக்தி வேலுக்கு மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வழிபட்டனர். பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் சர்வசாதகம் செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தி, தீபாராதனைகள் செய்து அனுமதி பெற்று போருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்கின. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன் ஆகியோரும் நான்கு ரதவீதிகளில் போர் முரசு கொட்டியபடி புறப்பட்டு பழனி அடிவாரம் கிரி வீதியை வந்தடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள்கள் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு ‘அரோகரா’, வீரவேல் முருகனுக்கு ‘அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. அதன் பின்னர் இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும், வெற்றி விழாவும் நடைபெற்றது. பராசக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷண பூஜைக்கு பின்பு கோவில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

    விழாவில் இன்று (புதன் கிழமை) மலைக்கோவிலில் காலை 9 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. #Soorasamharam #ThiruchendurMurugan
    தூத்துக்குடி:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.
     
    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

    முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். அதன்பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள் செய்தார்.

    ஒவ்வொரு உருவமாக மாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. கடல் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டன. 

    சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். 



    சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்களும் இயக்கப்பட்டன.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 

    இன்று இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Soorasamharam #ThiruchendurMurugan
    ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபதுமனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.
    ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபதுமனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

    சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது, சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது.

    சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காணலாம்...!

    முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபதுமனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

    வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அம்மலைக்கு அதிபதியான சூரபதுமனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

    முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபதுமன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான்.

    அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபதுமன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபதுமன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபதுமன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். சர்வசங்கார கால மூர்த்தியான உருத்திரமூர்த்தியின் வேற்படை சூரபதுமனை தேடி சென்று, செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.

    பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.

    தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.

    திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்- பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீலமயில் மீது ஏறி, குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.

    முருக பெருமானது வரலாறுகளையும், சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டி அன்று அவனது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவான்.
    சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.


    கோவில் முன் திரண்ட பக்தர்கள்.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார்.

    பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிஅம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.

    கடலில் புனித நீராட கடற்கரையில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 300 துப்புரவு பணியாளர்கள் பணியில் உள்ளனர். 100 தற்காலிக கழிப்பறைகள், 8 தற்காலிக தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    கோவில் கிரிபிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருச்செந்தூர் - பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடிரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #Soorasamharam #ThiruchendurMurugan
    வயலூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்கராவேலர் கேடயத்தில் வீதி உலா வந்தார்.

    பின்னர் சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முறையே சிங்கார வேலர் சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளி மயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நேற்று இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா- சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
    சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

    ஐந்து நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான இன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    இன்று காலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானுக்கு பூ போட்டு சஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்க  வேண்டும். இன்று முழுவதும் மௌன விரதம் இருந்து உணவு அருந்தாமல் மாலையில் முருகன் கோவிலில் நடக்கும் சூரசம்ஹாரத்தை கண்டு வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களின் வேண்டுதல்களை முருகப்பெருமான் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் அசைக்க கூடியாத நம்பிக்கை.
    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 60-வது கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    8-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விழா நாட்களில் கிரிவலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    5-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு பஜனை, 11 மணிக்கு அபிஷேகம், 11.30 மணி முதல் ஒரு மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, பகல் ஒரு மணிக்கு தீபாராதனை நடந்தது.

    மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இரவு 7.45 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை (13-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கந்தபுராண தொடர் விரிவுரை, 12.30 மணி முதல் மாலை 2 மணி வரை நாதஸ்வர கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்துக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம், 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    மருதமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். மருதமலை முருகன் கோவிலில் நாளை (செவ்வாய்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. விழா மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. பச்சை நாயகி அம்மன் சன்னதியில் சக்தி வேல் வாங்கி சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்கிறார். பின்னர் பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள். சூரசம்ஹார விழாவில் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை மறுநாள் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் அங்குள்ள மண்டபத்தில் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் குடிநீர், உணவு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. வடவள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவில் சேர்ந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடமிருந்து இன்று சக்திவேலை வாங்குகிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை தலா 2 மணிநேரம் சண்முகார்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு. சண்முகருக்கு (ஆறுமுகத்திற்கும்) 6 வகை சாத படையல் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று மயில் சேவையாக வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) கோவிலில் உள்ள ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் இரவு 7 மணிக்கு வேல் வாங்குதல், நடக்கிறது. இதில் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் வாங்கு கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சட்டத் தேர் பவனி நடக்கிறது. இதில் தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளுகிறார். காப்பு கட்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத் தேரை வடம் பிடித்து இழுத்து கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதே போல கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை முருகப் பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆகவே ஆண்டிற்கு 2 முறை கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலின் கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது.

    முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உக்ரத்தில் (கோபம்) இருந்து தணிவதற்காக 100 படி அரிசியில் சாதம் படைத்து அதில் சுமார் 15 லிட்டர் தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதை பாவாடை தரிசனம் என்று அழைக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சி ஆண்டிற்கு ஒரு முறை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். பின்னர் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.



    தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு வரும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து, கோவிலுக்கு சென்றனர்.

    குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    11-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

    12-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். #Kulasekarapattinam #Dasara #Soorasamharam

    ×