search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்த உடன் மது பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
    திருச்சி:

    தமிழகத்தில் நேற்யை தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தில் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகையை குதூகலத்துடன் கொண்டாட மது பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு மதுபானக்கடை திறந்த உடன் மது பிரியர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

    இதனால் மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் சற்றும் ஓய்வற்ற நிலையில் மது பிரியர்களுக்கு தொடர்ந்து மது பாட்டில்களை எடுத்து கொடுத்த வண்ணம் இருந்தனர்.

    சிலர் மதுவை அதிகம் குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதை மறந்து சாலைகளில் விழுந்து கிடந்தனர். ஒருசிலர் மது பாட்டில்களை பெட்டிகளில் வாங்கி கொண்டு பரபரப்பாக அங்கும் இங்குமாய் உலாவிக் கொண்டிருந்தனர். திருச்சி மண்டலத்தை பொருத்தமட்டில் 12 மாவட்டங்கள் ஒருங்கிணைந்துள்ளது. இந்த திருச்சி மண்டலத்தில் நேற்றைய தினம் மது விற்பனை அமோக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    தொடர்ந்து இயல்பான நாட்களில் திருச்சி மண்டலத்தில் சுமார் ரூ.30 கோடி அளவில் மதுபானம் விற்பனை செய்யப்படும். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை என்பதால் மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் 2 தினங்களுக்கு முன்பே மதுபானங்கள் அதிகமாக விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் இரவு 8 மணி வரையில் திருச்சி மண்டலத்தில் ரூ.56 கோடியே 82 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
    மழை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் உருவாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொட்டிய மழையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையினை கொண்டாடினார்கள்.

    தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் நகரில் குப்பைகள் குவியும். இதனை உடனே அகற்றுவதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி செய்து இருந்தார்.

    மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பட்டாசு குப்பைகளை உடனே அகற்றுவதற்கான விரிவான ஏற்பாடுகள் மண்டல அதிகாரிகள் தலைமையில் நடந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை தூறல் இருந்த போதிலும் குப்பை அகற்றும் பணிகளில் தொய்வில்லாமல் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை நகர் முழுவதும் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் 1,000 ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு தெருக்களிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசு குப்பைகள் இரவோடு, இரவாக அகற்றப்பட்டன.

    நள்ளிரவு வரை 48 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.

    மழை மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் உருவாகும் குப்பைகளை அகற்ற சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரம் முழுவதும் 1,000 பேர் இந்த பணியில் ஈடுபட்டதால் குப்பைகள் தேங்காமல் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

    இன்றும் சாலையில் உள்ள குப்பைகளை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமாக வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் ஊழியர்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அதன் அளவு இன்று பிற்பகல் தெரிய வரும்.

    கட்டிடக்கழிவுகளும் பெருமளவு அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் தேங்காத வகையில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் உடனடியாக மூடப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதிகபட்சமாக 13.43 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை 9-வது மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
    நாகர்கோவில்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டது மதுப்பிரியர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. குமரி மாவட்டத்திலும் மதுக்கடை பார்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய தொகையை ஏராளமான பார் உரிமையாளர்கள் செலுத்தவில்லை.

    அவ்வாறு ஏலத்தொகையை செலுத்தா பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி 9 பார்கள் மட்டுமே செயல்பட்டன. மற்ற கடைகளில் இருந்த பார்கள் அனைத்தும் அடைக்கப்பட்டே இருந்தன. 100-க்கும் மேற்பட்ட பார்கள் திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 1-ந்தேதி ரூ. 3கோடியே 5 லட்சத்து 99 ஆயிரத்து 860-க்கும், 2-ந்தேதி ரூ.2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 250-க்கும் மது பானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம்(3-ந்தேதி) ரூ.4கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 660-க்கு மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகையன்று ரூ.4கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 880-க்கு மதுபானங்கள் விற்றிருக்கிறது.

    கடந்த 4 நாட்களிலும் மொத்தம் ரூ.15 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 650-க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை குறைவு தான் என்றும் கூறியிருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் மதுபான விற்பனை கடந்த ஆண்டை விட குறைவதற்கு பார்கள் முழுமையாக செயல்படாததும், தொடர் மழையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நாட்டு பட்டாசு வெடித்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலை நேசன் (வயது 37). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தீபாவளி பண்டிகையின் போது அரியாங்குப்பத்தில் தயாரிக்கப்படும் நாட்டு பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்வது வழக்கம்.

    இதற்கிடையே மரக்காணம் அருகே கூனிமேட்டில் மாமனார் வீட்டில் நாட்டு பட்டாசுகளை விற்பதற்காக கொடுத்திருந்தார்.

    நேற்று மாலை மாமனார் வீட்டில் தனது மனைவி ரூபணாவை (34) பார்த்து விட்டு கலைநேசன் தனது மகன் பிரதீசுடன் (7) அங்கு விற்பனை செய்யப்படாத மீதி இருந்த பட்டாசுகளை 2 மூட்டைகளில் கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    புதுவை எல்லையான முத்தியால்பேட்டையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் கலைநேசன் அவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார். இதில், கலைநேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கீழே சாய்ந்தது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கலைநேசன் மற்றும் அவரது மகன் பிரதீஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.

    அந்த பகுதியில் அருகே வந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளின் கூரைகளும் சேதமடைந்தன. அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் பட்டாசு ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பல்வேறு துண்டுகளாக சிதறியது.

    இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெறும் போது அந்த சாலையில் வாகனங்களில் தனித்தனியே வந்த ‌ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் 2 மாநில எல்லைகளில் நடந்ததால் 2 மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் விபத்து நடந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதி என்பதால் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தார்.

    வெடி விபத்தில் பலியாகி சிதறிய உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பட்டாசு விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தர்மபுரி:

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

    அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த பட்டாசுகளான சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களின் அருகேயும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. குடிசைகள் அதிகம் உள்ள பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதி போன்ற இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தர்மபுரி மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதனிடையே அரசு வைத்துள்ள விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி உட்கோட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 27 பேர் மீதும், அரூர் உட்பட்ட பகுதியில் 18 பேர் மீதும், பென்னாகரம் உட்பட்ட பகுதியில் 13 பேர் மீதும், பாலக்கோடு உட்பட்ட பகுதியில் 8 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தீபாவளி பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா? நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது32), அஜ்மல் (24), கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த பசுபதி (26), மகாராஜ கடை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (58), ஓசூர் சானசத்திரம் பகுதியைச் சேர்ந்த பயாஸ் (32), முகமது முபாரக் (23), ஓசூர் டவுன் பகுதியைச் சேர்ந்த பூவரசன் (21), சாரதி (19) உள்பட 17 பேர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 67 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி அன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

    இதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கோர்ட்டு தெரிவித்திருந்தது.

    இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்த சுப்ரீம் கோர்ட்டு சரவெடிகளை வெடிப்பதற்கும் தடை விதித்தது.

    இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் தெரிவித்து இருந்தனர். அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நேற்று பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடினர். பொதுமக்கள் கோர்ட்டு விதித்திருந்த தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் பட்டாசுகளை வெடித்தனர்.

    இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 2,400 பேர் மீது நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து வெளி மாவட்டங்களில் 1,614 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் திரண்டு பட்டாசுகளை வெடித்தனர்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்ட சரவெடிகளும் சரமாரியாக வெடிக்கப்பட்டன. இது தொடர்பாக சென்னை முழுவதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழக அரசின் வழிகாட்டு விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வழக்கு பதிவு


    இது தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி அன்று மட்டும் விதிகளை மீறி பட்டாசு கடை நடத்திய 32 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 பேர் மீதும், நாகையில் 7 பேர் மீதும், மயிலாடுதுறையில் 14 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 60 பேர் மீதும், திருப்பத்தூரில் 44 பேர் மீதும், ராணிப்பேட்டையில் 21 பேர் மீதும், திருவண்ணாமலையில் 42 பேர் மீதும் பட்டாசு தொடர்பான வழக்குகள் பாய்ந்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 67 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் 29 பட்டாசு வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 27 வழக்குகளும், கடலூர் மாவட்டத்தில் 11 வழக்குகளும் பதிவாகி உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர பகுதியில் 27 பேர் மீதும், தென்காசி மாவட்டத்தில் 35 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 97 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை போன்றே புதுவை மாநிலத்திலும் தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 32 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தடையை மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும், அவர்கள் கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
    வாஷிங்டன்:

    தீபாவளி பண்டிகை இந்தியாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதேபோல  அமெரிக்காவில் பணி நிமித்தமாக ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களும் நேற்று தீபாவளியை கொண்டாடினர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவியும் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

    மேலும் அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

    ஜோ பைடன்  வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை உள்ளது என்பதை தீபாவளியின் ஒளி நமக்கு நினைவூட்டட்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார்.

    ஜோ பைடன் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

    இதே போல  துணை அதிபர் கமலா ஹாரிசும்  டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நம் தேசத்தின் மிகவும் புனிதமான மதிப்புகளை நினைவூட்டி, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபத் திருநாளாம், தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
    சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்குகிறார்கள்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாகவும் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 9,319 சிறப்பு பஸ்கள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு தினமும் 2,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் 8,400 பஸ்கள் உள்பட சிறப்பு பஸ்கள் 9,319 சேர்த்து மொத்தம் 17,719 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 643 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி முடிந்து ஒரு சிலர் இன்று வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் குறைந்த அளவில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது.

    சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்குகிறார்கள்.

    நாளை (சனிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு 913 பஸ்களும், சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 900 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை (7-ந் தேதி) சென்னைக்கு 1,729 சிறப்பு பஸ்களும், பிற நகரங்களுக்கு 2,180 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. திங்கட்கிழமை பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    8-ந் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 1,034 பஸ்களும், சென்னையை தவிர பிற நகரங்களுக்கு 1,190 பஸ்களும் விடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக பெருங்களத்தூரில் விரிவான ஏற்பாடுகளை போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் செய்துள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அதிகாலைக்குள் வந்து சேரும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் வரக்கூடிய பஸ்கள், வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி, கோயம்பேடு செல்கிறது.

    இன்று முதல் 4 நாட்களும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பெருமளவில் வாகனங்கள் வரும் என்பதால், நெரிசல் இல்லாமல் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போக்குவரத்து போலீசார் எடுத்து வருகிறார்கள்.



    கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசு முக்கிய அங்கமாக இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.

    தீக்காயத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்போது சென்னையில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவார்கள். கை, கால், முகம் போன்றவற்றில் லேசான காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்திமலர் கூறியதாவது:-

    நேற்று இரவு வரை 15 பேர் தீக்காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டனர். இதில் புறநோயாளிகளாக 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    சேலம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி காற்று மாசு ஏற்படுவதை தடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    சேலம் மாவட்டத்தில் அனுமதியில்லாத நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் புறநகர் மாவட்டத்தில் நேற்று அனுமதியில்லாத நேரத்தில் பட்டாசு வெடித்த 32 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் சேலம் மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல்கோடா உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது மாநகரில் அனுமதி அளித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த 35 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுவை:

    புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×