search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளி பண்டிகையையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்தியர்களின் முதன்மை பண்டிகையான தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அரசின் சார்பில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்திய பிரமுகர்களுடன் தீபாவளி விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சியை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொடங்கி வைத்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் தடபுடலான விருந்துடன் தீபாவளி பண்டிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.



    இந்நிலையில், தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பில் தபால்தலை வெளியிட வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

    இதன் அடிப்படையில், அமெரிக்கப் பணமான 1 டாலர் 15 சென்ட் விலைமதிப்பில் தீபங்களுடன் கூடிய முதல் தபால்தலை வரிசையை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தபால் சேவைத்துறை  தீபாவளியை சிறப்பித்துள்ளது. #Diwali #UN #stamp
    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் 336 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    கோவை:

    கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை மாநகரில் மத்திய சரகத்தில் 44, கிழக்கு சரகத்தில் 27, மேற்கு சரகத்தில் 32, தெற்கு சரகத்தில் 22 என மொத்தம் 125 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 29 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்), 285 (எளிதில் தீப்பற்றும் பொருட்களை கையாளுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் 14 பேர், பேரூர் சரகத்தில் 10, கருமத்தம்பட்டி சரகத்தில் 8, பொள்ளாச்சி சரகத்தில் 12, வால்பாறை சரகத்தில் 15 என மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல திருப்பூர் மாநகரில் தெற்கு சரகத்தில் 47, வடக்கு சரகத்தில் 73 பேர், புறநகர் பகுதிகளில் 32 பேர் என மொத்தம் 152 பேர் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். #tamilnews
    சென்னை தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீபாவளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மொத்த விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்கே நடந்தது. #Diwali #Crackers #TheevuThidal
    சென்னை:

    பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கடும் கட்டுப்பாடு விதித்த காரணத்தால் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பட்டாசு விற்பனை படுமந்தமாக காணப்பட்டது.

    சென்னை தீவுத்திடல், நந்தனம், ராயப்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீபாவளிக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மொத்த விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்கே நடந்தது. 75 சதவீத பட்டாசுகள் விற்காமல் தேங்கிவிட்டது.

    தி.நகர், மயிலாப்பூர், வேப்பேரி, அண்ணாநகர், முகப்பேர், தாம்பரம், பழவந்தாங்கல், வேளச்சேரி பகுதிகளில் ஓரளவுக்கு விற்பனை நடந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வியாபாரம் குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து தீவுத்திடலில் பட்டாசு கடை வைத்திருக்கும் இஸ்மாயில் கூறுகையில், கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகையால் பட்டாசு தொழில் நலிந்தது. இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பட்டாசு விற்பனை 25 சதவீத அளவுக்குத்தான் நடந்துள்ளது.



    பட்டாசு தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து வருகிறது. இந்த தொழிலை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்க்கை இனிமேல் கேள்விக்குறியாகி விடும்.

    திருவல்லிக்கேணி மொத்த வியாபாரி வி.பி. மணி கூறுகையில், தீபாவளிக்கு மழை பெய்யாத நிலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு பட்டாசு விற்பனை நடக்காதது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை காரணம் காட்டி வெடி வெடித்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்று போலீஸ் மிரட்ட தொடங்கியதால் பட்டாசு விற்பனை வெகுவாக பாதித்துவிட்டது. நிறைய கடைகளில் பட்டாசு கையிருப்பு உள்ளதால் அடுத்த ஆண்டு சிவகாசியில் அதிகம் பட்டாசு வாங்க மாட்டார்கள்.

    எனவே பட்டாசு விற்பனை பழையபடி நடைபெற, வேண்டுமானால் பட்டாசு வெடித்தால் மாசு வராமல் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களை கண்டறிய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு வி.பி.மணி கூறினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

    பட்டாசு கடை போட்டவர்களுக்கு இந்த ஆண்டு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் பணம் போட்டு கடை நடத்தியவர்களுக்கு ரூ.2 லட்சம் அளவுக்குத்தான் வியாபாரம் நடந்துள்ளது. ரூ.20 லட்சம் முதலீட்டில் பட்டாசு கடை நடத்தியவர்கள் ரூ.10 லட்சம் கூட எடுக்க முடியாத சூழலில் உள்ளனர்.

    இதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, போலீஸ் மிரட்டல், தான் காரணம். அடுத்த ஆண்டு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

    சிவகாசியில் அடுத்த வருடம் உற்பத்தி வெகுவாக பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Diwali #Crackers #TheevuThidal

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு 7 லட்சம் 37,489 பேர் பயணம் செய்துள்ளனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 3, 4 மற்றும் 5-ந் தேதிகளில் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2-ந் தேதி முதலே சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த வருடம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    11,367 பஸ்கள் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் கூடுதலாக 2267 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. சிறப்பு பஸ்கள் மற்றும் வழக்கமான பஸ்கள் என சேர்த்து மொத்தம் 13,634 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    சென்னையில் மட்டும் 4 நாட்களில் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு 7 லட்சம் 37,489 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் முன்பதிவு செய்த பயணிகள் 56 ஆயிரம் பேர் ஆவர். பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்ப வசதியாக 1500 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    மேலும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறையுடன் இணைந்து போலீசார் செய்துள்ளனர்.


    நாளை அதிகாலை முதல் சென்னைக்கு வரும் பஸ்களை முறையாக கண்காணித்து ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களை கோயம்பேடுக்கு விடாமல் தாம்பரம் சானிட்டோரியம் (மெப்ஸ்) பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இதே போல வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து வரும் பஸ்களை பூந்தமல்லியிலேயே நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர வண்டலூர் பாலத்தின் மீது பஸ்களை ஏற்றி இறங்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம் வரை சாலையோரமாக கொண்டு சென்று பயணிகளை இறக்கி விடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் செல்ல இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அரச விரைவு பஸ்களில் பயணம் செய்ய வருகின்ற 11-ந் தேதி வரை முன்பதிவு நடைபெறுகிறது. #Diwali #SpecialBuses
    தீபாவளியை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று இனிப்பு வழங்கி கொண்டாடினார். #Diwali #Modi #HarsilinUttarakhand
    கேதார்நாத்:

    நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்

    2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு வருகை தந்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2015ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

    2016 ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். 2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். இந்த ஆண்டு தீபாவளியை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடப் போவதாக தெரிவித்தார்.



    அதன்படி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மோடி, அவர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார். முன்னதாக கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் கேதார்நாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், வட இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Diwali #Modi #HarsilinUttarakhand
    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். #ChandrababuNaidu #Diwali #BJP
    அமராவதி:

    ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.

    அதன் பிறகு அவர் பா.ஜனதா அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.



    பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த நிலையில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று சந்திர பாபுநாயுடு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு ஒரு பைசா கூட நிதி உதவி செய்யாமல் மனித நேயமற்ற தன்மையுடன் இருக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. புயலால் பாதித்த மக்களுக்கு நாங்கள உதவி செய்தோம்.

    தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல. மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #Diwali #BJP
    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #CrackersBursting #Diwali #CrackersCase
    தஞ்சாவூர்:

    தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல இடங்களில் அரசு அறிவித்த நேரத்தை மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.

    காலை முதல் இரவு முழுவதும் பட்டாசு வெடி சத்தத்தை கேட்க முடிந்தது. குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும் தெருக்களில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே அரசு அறிவித்த தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தீபாவளியையொட்டி பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.

    இதில் மாவட்டம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவாரூர் நகரில் தம்பித்துரை (வயது 24), சூர்யா (25), வெங்கடேஷ் (18), கொரடாச்சேரியில் வினோத் (22), சுதாகர் (30), கூத்தாநல்லூரில் சண்முகவேல் (32), வடபாதிமங்கலத்தில் பாப்பையன் (26), வைப்பூரில் பரரதி மோகன் (38), ரகுநாத் (28), நன்னிலத்தில் சக்திவேல் (40), பேரளத்தில் வேல்குமார் (20), வலங்கைமானில் பழனிவேல் (30), கார்த்தி கேயன் (25), வடுவூரில் விமல் (24) மன்னார்குடியில் நவீன்(24) உள்பட மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.

    இதில் தஞ்சை சாலைக்கார தெருவில் நள் ளிரவு 12 மணிக்கு வெடி வெடித்ததாக மாயக்காளை (50), மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்கி (24), உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் நாகை மாவட்டத்திலும் அரசு தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #CrackersBursting #Diwali #CrackersCase

    விருதுநகரில் பட்டாசு வெடித்ததில் ஓட்டல் உள்பட 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali
    விருதுநகர்:

    விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று பண்டிகை என்பதால் ஓட்டல் மூடப்பட்டு இருந்தது. ஓட்டல் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி, விறகுகளை வைத்திருந்தார்.

    நேற்று இரவுஅந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு விறகு மீது விழுந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து விறகு எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஓட்டலுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு மணி நேரம் போராடி அவர்கள், தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஓட்டலின் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் விருதுநகரில் ஒருமணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    விருதுநகர் வாடியான் தெருவில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு பழைய அட்டை, பேப்பர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேப்பர்கள், அட்டைகள் எரிந்து நாசமானது.

    இதேபோல் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவில் உள்ள ஆதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிட்டங்கியிலும், சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. #Diwali

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Diwali #Tasmac
    சென்னை:

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.



    அதற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.

    இந்நிலையில், கடந்த மூன்று  நாட்களாக தமிழகத்தில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு 70 கோடி ரூபாய் அதிகம் விற்பனை ஆகி உள்ளது. #Diwali #Tasmac
    உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்ததாக 2100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #CrackersBursting #Diwali #CrackersCase
    சென்னை:

    பட்டாசு புகையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது.

    2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், திறந்த வெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்தும் கட்டுப்பாடுகள் விதித்தும் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கீடு செய்தது. இந்த உத்தரவை செயல்படுத்துமாறு மாநில போலீசாரும் அறிவுறுத்தப்பட்டனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம், கட்டுப்பாடுகள் குறித்தும் தனித்தனியே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.



    இந்த உத்தரவை மீறுவோருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. எங்காவது ஒரு இடத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் விட்டுவிட்டு 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டே இருந்தது.

    சென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவிலும், அதிகாலையிலும் தூக்கத்தை கெடுக்கும் வகையில் சிலர் பட்டாசு வெடித்தனர்.

    பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவர்களும் சிக்கினர். அவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தல், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடித்தல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தம் ஏற்படுத்தும் மற்றும் அதிக புகை வெளிப்படுத்தும் பட்டாசுகளை வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 288, 285 உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கோர்ட்டு மூலம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரத்தில் 255 வழக்குகள் பதிவாகி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பதிவான வழக்குகள் வருமாறு:-

    சென்னை - 343
    திருவள்ளூர் - 101
    காஞ்சீபுரம் - 63
    கோவை - 184
    நாமக்கல் - 46
    திருப்பூர் - 152
    சேலம் - 60
    திண்டுக்கல் - 11
    திருவாரூர் - 31
    தஞ்சை - 18
    நாகப்பட்டினம் - 27
    கிருஷ்ணகிரி - 34
    தர்மபுரி - 25
    ஈரோடு - 18
    புதுக்கோட்டை - 16
    கரூர் - 11
    பெரம்பலூர் - 11
    திருச்சி - 64
    விழுப்புரம் - 255
    கடலூர் - 29
    நெல்லை - 90
    தூத்துக்குடி - 31
    வேலூர் - 64
    திருவண்ணாமலை - 93
    கன்னியாகுமரி - 23
    மதுரை - 170
    விருதுநகர் - 135

    புதுவையில் மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    தமிழகம் புதுவையில் மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #CrackersBursting #Diwali #CrackersCase
    கயத்தாறு, தூத்துக்குடியில் நடந்த விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் உப்பள தொழிலாளி பலியாகினர். #Accident
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி என்பவரது மகன் சின்னராஜா (வயது 28). கயத்தாறில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதம் தான் ஆகிறது. புதுமண தம்பதியான இவர்கள் நேற்று தலைதீபாவளி கொண்டாட கயத்தாறு அருகே சவலாப்பேரியில் உள்ள சீதாலட்சுமியின் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சின்னராஜா மட்டும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பருத்தி குளத்துக்கு சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சின்னராஜா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலை தீபாவளி கொண்டாடிய புதுமாப்பிள்ளை திருமணமான 2 மாதத்திலேயே பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா (35). குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜா (27). இவர்கள் இருவரும் வேப்பலோடை பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் இருவரும் வேலைக்கு செல்லவில்லை. மதியம் விஜய் நடித்து நேற்று வெளியான ‘சர்கார்’ படம் பார்க்க தூத்துக்குடிக்கு சென்றனர். படம் பார்த்து விட்டு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரவு 8 மணியளவில் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த மற்றொரு ராஜா காயத்துடன் உயிர் தப்பினார்.

    அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குபதிந்து விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.  #Accident




    மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். #Diwali #GroomArrested
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அவரை ஓசூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி (26) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே பள்ளி மாணவியை கடத்தி சென்ற மணி அவரை கோவிலில் வைத்து திருமணம் செய்ததுடன் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி தனிக்குடித்தனம் நடத்திவந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த மாணவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் மணியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அவரை தீபாவளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    மாமானரின் அழைப்பினை ஏற்ற மணி தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பதாசன் காட்டுவளவு பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் தீபாவளி தினமான நேற்று காலை புதுமாப்பிள்ளை மணி மாமனார் வீட்டில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து தலை தீபாவளியினை கொண்டாட தயாராக இருந்தார்.

    அப்போது இளம்பெண்ணை கடத்தி சென்ற மணி வந்திருக்கும் தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் மாமானார் வீட்டில் மகிழ்ச்சிகரமாக தீபாவளி கொண்டாட தயாராக இருந்த மணியை கைது செய்து எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    தீபாவளி பண்டிகையினை கொண்டாட அனுமதிக்கும்படியும் பண்டிகை முடிந்து தானே நேரில் வந்து ஆஜராக தயாராக உள்ளதாகவும் மணி போலீசாரிடம் மன்றாடி கேட்டும் போலீசார் கேட்கவில்லை. மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.#Diwali #GroomArrested
    ×