search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பெருமழை பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் குளங்கள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.

    இந்நிலையில், வெள்ளம் வடிந்தாலும் தங்கள் வாழ்வாரத்தை பெருமழை அழித்து சென்று விட்டதால், பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.

    ஆழ்வார்திருநகரி கண்டி குளம் பகுதியில் 40 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 5 தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்வது உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து கொடுத்து வரும் இவர்கள் தயாரிக்கும் மண்பானைகள், மண்அடுப்புகள் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.


    தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே ஆயிரக்கணக்கான மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் தான் எதிர் பாராதவகையில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பேய்மழை இவர்களின் வீடுகளை மூழ்கடித்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக தயார் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மண்பானை, அடுப்புகள் என அனைத்தையும் சேதப்படுத்தி விட்டன.

    உயிர் பிழைத்தால் போதும் என கருதி குழந்தைகளுடன் நிவாரண முகாம்களுக்கு சென்ற இவர்கள் தற்போது வெள்ளம் வடிந்தாலும் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து தொழிலாளி மாயாண்டி கூறியதாவது:-

    நாங்கள் 5 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். ஆழ்வார்திரு நகரியில் 40 குடும்பங்கள், தென்திருப்பேரையில் 25 குடும்பங்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 10 குடும்பங்கள் நாங்கள் அனைவருமே மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அணுமதி பெற்று குளங்களில் இருந்து மண் எடுத்து மண்பானை, மண் அடுப்பு செய்து வருகிறோம்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்து கொடுக்கிறோம். மேலும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கான பானைகள் செய்து கொடுப்போம்.

    ஆனாலும் பொங்கல் பண்டிகை காலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும் காலம். பொது மக்கள் மண்அடுப்புகளை வைத்து, பானைகளில் பொங்கலிடுவார்கள் என்பதால் அதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    மேலும் வழக்கமான மீன் சட்டிகளும் செய்து வைத்திருந்தோம். ஆனால் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் ஆறு மட்டுமின்றி குளத்திலும் உடைப்பு ஏற்பட்டு, திடீரென நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினோம்.

    சில மணி நேரத்திற்குள் வீடுகளை மூழ்கடித்த வெள்ளத்தில் நாங்கள் செய்து வைத்திருந்த அனைத்து பானைகள், அடுப்புகள் உடைந்து சேதம் ஆனது. மேலும் நவநாகரீக காலத்திற்கு ஏற்ப மண்பானைகள் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த 6 எந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டது.

    இதேபோல பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கு பானைகள் செய்வதற்காக மண்லோடு அடித்து வைத்திருந்தோம். 5 டன் விறகு வாங்கி வைத்திருந்தோம். அனைத்தும் நாசமாகி விட்டது. ஒரேநாளில் ரூ.8 லட்சத்திற்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதால் இதில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என்றே தெரியவில்லை.

    பொங்கல் காலத்தில் கிடைக்கும் வருமானம் தான் எங்கள் குடும்பங்களுக்கு 6 மாத செலவுக்கு வசதியாக இருக்கும். தற்போது அது கிடைக்காமல் போனதோடு, அடுத்த 3 மாதத்திற்கு தொழில் செய்ய முடியாத அளவுக்கு அனைத்து மூலப் பொருட்களையும் இழந்து விட்டோம். அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் அய்யப்பன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அருகன்குளம், மேலப்பாளையம் குறிச்சி, வண்ணார்பேட்டை, வீரவநல்லூர், கொழுமடை, களக்காடு, ராதாபுரம் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர கூனியூர் காருக்குறிச்சி பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அதிக அளவு மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்திருநகரி, செய்துங்கநல்லூர், ஏரல், வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், அதற்காக மண்பாண்டங்கள் உற்பத்தி பணியில் தொழிலாளர்களாகிய நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்வோம்.

    இந்த ஆண்டு பொங்கலுக்காக பானைகள் தயாரிக்க தேவையான மண், விறகு, அடுப்பு, எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் கூனியூரில் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. மேலப்பாளையம் குறிச்சியில் மண்பாண்டங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதுதவிர மண், விறகு உள்ளிட்டவையும் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீளா துயரில் நாங்கள் கண்ணீர் வடித்து வருகிறோம்.

    நெல்லை மாவட்டத்தில் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் வரை வெள்ளத்தால் எங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களால் இந்த மழையால் ஏற்பட்ட நிவாரணத்தை கூட சரிசெய்ய முடியவில்லை. இந்த மழை வெள்ளத்தால் நெல்லையில் 6 ஆயிரம் தொழிலாளர்களும், தென்காசியில் 4 ஆயிரம் மற்றும் தூத்துக்குடியில் 7 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது.

    எனவே எங்களுக்கு பொங்கல் நிவாரணமாக அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க வேண்டும். வெள்ளத்தால் நாங்கள் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை இழந்துவிட்டோம். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் மண்பாண்ட சக்கரம் உள்ளிட்ட எந்திரங்களை இலவசமாக வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான மழை கால நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. எனவே உடனடியாக ரூ.5 ஆயிரம் மழை கால நிவாரணத்தை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.
    • வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சங்கரலிங்க புரம். இங்குள்ள 2-வது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரும் கண்பார்வை இழந்தவர்கள்.

    ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளி தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது.

    இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு ஏற்கனவே லேசாக சேதம் அடைந்து காணப்பட்ட நிலையில் தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. தொடர் மழையின் போது வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர்.

    தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விழக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதி வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    தொடர்மழை காரணமாக ஏற்கனவே தங்களுடைய ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி விற்பனை செய்ய முடியாத நிலை ஒருபுறம் உள்ளது. மறுபுறம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வீடு என தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர் மாரிமுத்து - அடைக்கம்மை தம்பதியினர்.

    தொடர் மழையின் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து, வீட்டையும் இழந்து பரிதவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மாற்றுத்திறனாளி தம்பதியினர்.

    • அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 122 அடியை எட்டிய நிலையில் இன்று 3/4 அடி உயர்ந்து 122.70 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டிவிடும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 134.81 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 135.83 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை பகுதியில் 31 மில்லிமீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    காக்காச்சி பகுதியில் 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதி மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் நிரம்பி விட்டன.

    இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு வானம் மேக மூட்டமாக காட்சியளிக்கிறது.

    சிற்றாறு கால்வாய் மூலமாக குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பி வருகிறது.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் குற்றாலம் நீர்வரத்து குளங்கள் நிரம்பி விட்ட நிலையில் தற்போது ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சாத்தான்குளம், கயத்தாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. குலசேக ரன்பட்டினத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.
    • மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு விரைந்த போலீசார் உடனடியாக பள்ளம் விழுந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அந்த வழியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா? அருகில் எதுவும் குழி உள்ளதா? என பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பரபரப்பான இந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெல்ல மெல்ல சாலை மண்ணுக்குள் செல்வதை அறிந்து தகவல தெரிவித்தோம். உடனடியாக பள்ளத்தை பார்த்ததால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.

    • மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
    • மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையை ஒட்டியுள்ள நேரு தெரு மிகவும் பள்ளமான தெருவாகும். சென்னை சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இந்த தெருவில்தான் வந்து சேருகிறது. இதனை சுற்றியுள்ள தெருக்கள் சற்று மேடாக காணப்படுவதால் இங்கிருந்து வெள்ளம் வெளியேறவில்லை.

    இந்த பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் வெள்ளம் வடியாமல் 4 நாட்களாக தேங்கி கிடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்தனர்.

    மழை ஓய்ந்து 3 நாட்களாக வெள்ளத்தை அப்புறப்படுத்திய நிலையில் நேரு தெருவில் வெள்ளத்தை அகற்ற நேற்று காலை வரை யாரும் வரவில்லை. இதனால் நேற்று காலை வரை ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அந்த பகுதியில் வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் 4 நாட்களாக அந்த பகுதி மக்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.

    • 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
    • தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மிச்சாங் புயல் சென்னை நகரை புரட்டிப்போட்டு உள்ளது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கொரட்டூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி குடியிருப்புகள் வெள்தத்தால் சூழப்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கொரட்டூர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    குறிப்பாக கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் திக்குமுக்காடினர். பலத்த மழை காரணமாக பட்டாபிராம் ஏரி, ஆவடி ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்து கொரட்டூர் ஏரிக்கு வந்தபோது கொரட்டுர் ஜீரோ பாயிண்ட் நிரம்பி உபரி நீரானது கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது ஏற்கனவே பள்ளமான பகுதி என்பதால் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் இன்னும் குறையவில்லை. மழை நின்று 3 நாட்கள் ஆகியும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடக்கு பகுதியில் 55 முதல் 67 தெருக்கள் மற்றும் மத்திய நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இன்னும் ஒரு அடி கூட குறையவில்லை. 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு பால், உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.அவர்களுக்கு நிவாரண உதவி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழையால் எங்கள் வாழ்வாதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு முழுவதுமே தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வீட்டிற்குள்ளே 5 நாட்களாக அடைபட்டு இருக்கிறோம். கீழே வந்தால் எங்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமாளித்தோம். இனிமேல் என்ன செய்வோம். எங்களுக்கு பால் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாங்கள் இப்படி அவதிப்பட வேண்டுமா? எங்களுக்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாதா? கேட்டால் ஏரியை உடைத்து விட்டோம் என்கிறார்கள். எந்த ஏரியை உடைத்து விட்டார்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் பால், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    பட்டரைவாக்கம் பால்பண்ணையில் மழைநீர் புகுந்துள்ளதால் 3-வது நாளாக அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கொரட்டூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொரட்டூர் வடக்கு அக்கரகாரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிடிபி காலனி, மேனாம்பேடு மெயின் ரோடு, பட்டரைவாக்கம் பிரதான சாலை பகுதிகளில் மழைவெள்ளம் குறைந்ததால் அங்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ தொற்பேட்டை பகுதியான பட்டரைவாக்கம் பகுதியில் சுமார் 1000- மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டறைவாக்கம் கொரட்டூர் சாலையில் பட்டரைவாக்கம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கம் போல் வாகனங்களை இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலையின் உரிமையாளரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல், மண்டலகுழுத் தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    பூந்தமல்லி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக்காடானது. கடந்த 2 நாட்களாக வெள்ளநீரை வெளியேற்றம் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பூந்தமல்லி, மேல்மாநகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அப்பகுதியில் மின் சப்ளையும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வெள்ள நிவாரண பணிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகக் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் எங்கள் பகுதியில் மழைநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சார சப்ளையும் கொடுக்கவில்லை நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள வார்டில் இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளின் நிலை எப்படி இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் வழங்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது.

    இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி மின் வினியோகம் வழங்க கோரி லஸ்கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    • மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.
    • மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிச்சாங் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்று இரண்டாவது நாளாக பால் இலவசமாக வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தாலும் கூட, பெரும்பான்மையான பகுதிகளில் பால் வழங்கப்படவில்லை. மக்களின் விரக்தியும், ஏமாற்றமும் கோபமாக மாறுவதற்கு முன் பால் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
    • என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நேற்று மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்திய படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.


    நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் பாலாஜி நகரைச் சேர்ந்த நேர்மை நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை பார்வையிட்ட பின், பாலாஜி நகர் பிரதான சாலை, குமரன் நகர், திருப்பதி நகர், வளர்மதி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளையும், சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அக்பர் ஸ்கொயர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கினார்,

    இந்த ஆய்வின் போது நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், பா. முரளீதரன், ஏ. நாகராஜன், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
    • கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    சென்னை:

    சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில இடங்களில் மழைநீா் தேங்கி நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவமழை காலத்தில் வெள்ளநீா் தேங்காத வகையில் கழிவுகளை அகற்றுவது அவசியம். மழை நீா் தேக்க மடைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவாக மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை பாதிப்புகள், காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட தனியாா், அரசு மருத்து வமனைகள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
    • போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் துணை மேயர் சாரதா தேவி, கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில் பட்டியலின மக்களுக்கு திருமணம் நடத்த சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேயர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    அந்த மண்டபத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் சேலத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.

    அதற்கு பதிலளித்து மேயர் ராமச்சந்திரன் பேசுகையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கவுன்சிலர் திருஞானம் பேசுகையில் எனது வார்டில் மழை நீர் அதிக அளவில் தேங்குகிறது. மேலும் அம்மாபேட்டையில் இருந்து டவுன் வரை சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் மூர்த்தி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடிகள் வெகு தூரத்தில் உள்ளன. இதனால் அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் சையத் மூசா பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இதற்கு சாக்கடை நீரும், மழை நீரும் அதிகளவில் தேங்குவது தான் காரணம். அதனை சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் பி.எல்.பழனிச்சாமி பேசுகையில் எனது வார்டுக்கு உட்பட்ட மணியனூர் பகுதியில் சுடுகாடு தண்ணீர் மற்றும் கழிவறை தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் மக்கள் தவித்து வருகிறார்கள். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் விபத்தும் அடிக்கடி நடக்கிறது, சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஏ.எஸ்.சரவணன் பேசுகையில் களரம்பட்டி 4-வது தெருவில் சாலை, சாக்கடை வசதி, பாலப்பணி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 45-வது கோட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். 56-வது வார்டு கலைஞர் நகரில் 4-வது வார்டு மற்றும் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். 60 வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும். அப்போது தான் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக திகழும் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில் அம்பாள் ஏரி ரோடு கடந்த 1 1/2 ஆண்டாக மிக மோசமான நிலையில் உள்ளது. தாதகாப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடி தண்ணீர் வசதி வழிப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றார்.

    இதை தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    ×