search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
    • மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5- வது வார்டு பகுதியில் உள்ளது. வி.ஐ.பி நகர் குடியிருப்பு . இந்த பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த புதிய குடியிருப்பு பகுதி முறையான சாலை வசதி இல்லாத தாழ்வான இடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இடுப்பளவிற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நிற்கும். பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து,மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் தார் சாலைகள் மற்றும் 6 சிறு பாலங்களை அமைக்க பணிகள் செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது . 90 நாட்களுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என திட்ட காலம் தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.

    அதன்படி,டெண்டர் விடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    மேலும், தற்பொழுது தான் ஒரு சாலையின் சந்திப்பு பகுதிகளில் மற்றும் சாலையின் முகப்பு பகுதியில் மழை நீர் செல்லும் 6 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் திட்டமிட்டபடி கால்வாய்கள் அமைக்காமல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைப்பதால் வரும் மழை காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்து முழுவதும் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் உடனடியாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கும். தண்ணீர் செல்ல வழி இல்லாததால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மழை காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    எனவே இந்த பகுதியில் கால்வாய் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்னும் முடிக்கப்படவில்லை.

    மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வி.ஐ.பி. நகர் பகுதியில் முதலில் சாலைகளும், சிறு பாலங்களும் அமைப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி. ஐ பி நகரில் குடியிருப்பு பகுதிகளின் தேவைக்கேற்ப கால்வாய் அமைத்து சாலைகள் அமைத்த பின்னர் சிறு பாலங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    • பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
    • பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வாலிபர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    மழைக்காலத்தில் விளை யாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவதால் வாலிபர்கள் மண் போட்டுள்ளனர். இந்நிலை யில் மழைநீர் வழிந்து ஓட நேற்று வாலிபர்கள் மைதா னத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவலறிந்த ஊர் மக்கள் வாலிபர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, சைமன்காலனி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு சைமன்காலனி பங்குத்தந்தை ஜிம் மற்றும் ஊர் நிர்வா கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று ஓடை அமைக்க கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் என தாசில்தார் மற்றும் போலீசார் கூறினர். இதை வாலிபர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏற்க மறுத்தனர். இதற்கிடையே தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும், இது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.
    • கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும், அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகங்களில் ரூ 6.77 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் அருகே மழை நீர் குளம் போல் தேங்குவதை தடுக்கும் வகையில் தாழ்வான பகுதியில் மண் கொட்டும் பணி நேற்று நடைபெற்று வந்தது.

    அப்போது அங்கு வந்த சிலர் பள்ளி வளாகத்தில் மண் கொட்டி சமன் செய்யும் பணியை தடுக்கும் வகையில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்களையும், தலைமை ஆசிரியர் காவேரி மற்றும் ஆசிரியர் பெருமக்களை தரக்குறைவாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஹேமபூசனம்,எஸ்.எம்.சி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ராஜேந்திரபாபு,கருணாகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்து மண் கொட்டும் பணியை தடுத்தவர்களிடம் நியாயம் கேட்டனர். மேலும், 1990-ல் ஆரணி பேரூராட்சிமன்ற தீர்மானத்தின்படி இப்பள்ளிக்கு தானம் வழங்கிய இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் தாசில்தாரின் அறிவுறுத்தலின்படி சர்வேயர் அந்த இடத்தை அளந்து எல்லை கற்களை நட்டார். அந்தப் பகுதியில் மண் கொட்டக்கூடாது என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு என்று தானம் வழங்கிய இடத்தை வருவாய்த் துறையினர் குளம் என்று இருப்பதை ஆரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று மாற்றாததே பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறினர்.

    எனவே, இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்,பொன்னேரி கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் ஜல்லிக்கற்கள் முற்றிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
    • சாலையில் மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் போகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் நடுக்கடை-தண்டாளம் இடையே திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.

    இந்த சாலையை கட்டுமாவடி, தண்டாளம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து அடிக்கடி காயம் அடைகின்றனர்.

    இது குறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
    • வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியான மருந்து வாழ்மலை வைகுண்ட பதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தெருக்களில் தேங்கி வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி பொதுமக்கள் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறுவதற்கு வசதியாக தெருவில் அலங்கார தரை கற்கள் பதித்து மழை நீர் வடிகால் ஓடை அமைத்து தரும்படி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கொட்டாரம் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருந்த சரிபா விடுத்த கோரிக்கையை ஏற்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து கொட்டாரம் அருகே உள்ள பொத்தையடி வைகுண்ட பதியில் மழைநீர் வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதைத்தொடர்ந்து கொட்டாரம் வைகுண்டபதி பகுதியில் உள்ள தெருவில் மழைநீர் வடிகால் ஓடையுடன் அலங்கார தரைதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடை மற்றும் அலங்கார தரைத்தளத்தை திறந்து வைத்து பேசினார்.

    இதில் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன், பேரூர் செயலாளர்கள் ராஜபாண்டியன், மணிகண்டன், மனோகரன், தாமரை தினேஷ், வீரபத்திரன் ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் தங்கவேல், ஜெபா செல்வின், வக்கீல் பாலன், பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் இல.கி.கணபதி, சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் சுதா பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.
    • டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழையளவு பதிவாகி வருகிறது. மாநகரிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிந்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

    குறிப்பாக வீட்டில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தொட்டிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை மூடி போட்டு பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார துறை ஊழியர்கள் தொடர்ந்துகொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் குடியிருப்புகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து அங்கு நீர் தேங்க வழிவகை செய்யும் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.வீடுகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க அதற்கான வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொசு உற்பத்தியாக வழிவகை செய்யும் வீடு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    • இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே சென்றனர்.
    • இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை கோவை புறநகர் பகுதிகளான அன்னூர், பொகலூர், தாளத்துறை, தேரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது.

    இந்த மழையின் போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சுக்குள் மழைநீர் வடிந்து உள்ளே விழுந்து கொண்டிருந்தது.

    இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இருந்த போதிலும் பஸ் முழுவதும் மழைநீர் விழுந்து கொண்டே இருந்ததால் சில பயணிகளை பஸ்சை விட்டு இறங்கி மாற்று பஸ்சிலும் பயணிக்கும் நிலை உருவானது.

    பஸ்சுக்குள் மழை நீர் வடிந்ததை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பழுதடைந்த பஸ்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகளிடம் எழுந்துள்ளது.

    • மழைநீர் சேரிக்கும் திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • 10 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் சேரிக்கும் திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புற வீடுகள் மற்றும் நகர்புற மாடி வீடுகளில் இயற்கை நமக்கு தரும் மழைநீரினை வீணாக்காமல் நிலத்தடியில் சேகரிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள் வாயிலாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில், கல்குளம் அரசு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ரூ.1.5 லட்சம் மதிப்பில் நிலத்தடியில் சுமார் 6000 லிட்டர் அளவில் மழைநீர் சேகரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் சேகரிப்பின் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படவுள்ளது.

    மேலும், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 10 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்களும் தங்களது வீடுகளில் கிடைக்கும் மழைநீரினை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்பு தொட்டியினை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், நமது மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றவும், நீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சா லை –நில மெடுப்பு) ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவுனம்மாள் வீட்டின் சுவர் மழைநீர் இறங்கி நனைந்து இருந்துள்ளது.
    • அக்கம் பக்கத்தினர் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பந்தநல்லூர் அருகே கோவில் ராமாபுரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் தனபால் மனைவி பவுனம்மாள் (வயது 65) கூலி தொழிலாளி. நேற்று இந்த பகுதியில் மழை பெய்தது.

    இதனால் பவுனம்மாள் வீட்டின் சுவரில் மழைநீர் இறங்கி நனைந்து இருந்துள்ளது.

    இந்நிலையில் வீட்டின் பின்பக்கம் இயற்கை உபாதை கழிக்க பவுனம்மாள் வந்தபோது சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    உடுமலை:

    கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-

    கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.

    இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

    சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.

    சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • குடியரசு தின விழாவின் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    நெல்லை:

    நாடு முழுவதும் குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றி தழ்கள் உள்ளிட்டவைகளை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    பரப்பளவு சுருங்கிவிட்டது

    இதற்காக பாளை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள் நடைபெறும் போது வ.உ.சி. மைதானம் திருவிழா போல் காட்சியளிக்கும். அங்கு நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வருவார்கள். வ.உ.சி. மைதானம் முழுவதும் நிரம்பி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

    ஆனால் சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கேலரிகளுடன் மைதானம் அமைக்கப்பட்டு அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. இதனால் தற்போது குறைந்த அளவு மக்களே அங்கு அமர முடியும். அதேபோல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்துவதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    மைதானத்திற்குள் மழைநீர்

    இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் அங்கு குடியரசு தினவிழா நடைபெறுகிறது. அங்கு கடந்த 2 நாட்களாக அணிவகுப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் மைதானத்திற்குள் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளித்தது.

    இதனால் இன்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது. இதற்கிடையே மைதானத்தில் மழை நீர் தேங்காவண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது இன்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே நாளை மறுநாள் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு பள்ளி மாணவ-மாணவிகளின் ஒத்திகை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.


    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் சமன்படுத்தும் பணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் பார்வையிட்ட காட்சி.


     


    ×