search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    X

    மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

    • மழைநீர் சேரிக்கும் திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • 10 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் சேரிக்கும் திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புற வீடுகள் மற்றும் நகர்புற மாடி வீடுகளில் இயற்கை நமக்கு தரும் மழைநீரினை வீணாக்காமல் நிலத்தடியில் சேகரிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாகவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள் வாயிலாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில், கல்குளம் அரசு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சார்பில் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ரூ.1.5 லட்சம் மதிப்பில் நிலத்தடியில் சுமார் 6000 லிட்டர் அளவில் மழைநீர் சேகரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் சேகரிப்பின் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படவுள்ளது.

    மேலும், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 10 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்களும் தங்களது வீடுகளில் கிடைக்கும் மழைநீரினை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்பு தொட்டியினை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டம் உயரவும், நமது மாவட்டம் பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றவும், நீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சா லை –நில மெடுப்பு) ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×