search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதால் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.    

    • 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது.
    • 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் ரெயில்வே சுரங்க நடைபாதை உள்ளது. இந்த பாதை நகரின் வடக்கு, தெற்கு பகுதி மக்களை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 15 அடி உயரமுள்ள பாலத்தில் முழுவதுமாக மழைநீர் நிரம்பியுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தோல்வியடைந்ததால் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் வெகு தொலைவு சென்று தேவையான இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பழநியாண்டவர் நகர், ஜீவா நகர், தாண்டாகவுண்டன்தோட்டம், காந்திபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாதை முடக்கப்பட்டுள்ளதால், நகருக்குள் சென்று போக்குவரத்து நெரிசலை சந்தித்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.
    • மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போடவில்லை.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து ஏ.பி.நகர் வரை செல்லும் ரோடு கடந்த ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது. தற்பொழுது தெற்கு வட்டார போக்குவரத்து வாகனங்கள் ஆய்வு செல்லும் இடத்திற்கு செல்லும் வழியில் நேற்று பெய்த மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை புதுப்பிக்கும் முன் எப்படி மழைநீர் தேங்கி நிற்குமே அப்படி சாலை புதுப்பித்த பின்பும் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    மழைநீர் தேங்கும் இடத்தில் சாலையை உயர்த்தி போட வில்லை. மழை நீர் செல்ல வழியும் ஏற்படுத்தவில்லை. இதனால் சாலை விரைவில் பழுதடைந்துவிடும். மேலும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றார்கள். எனவே சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது.
    • வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் 136 கி.மீ நீளம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ரூ.941 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டம் 2008-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தது. இதில், உடையாபட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 38 கி.மீ. இரு வழி புறவழிச்சாலைச் சாலையாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி பகுதியில், நான்கு வழிச்சாலை மற்றும் இணைப்புச் சாலையில் வழிந்தோடி வரும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தப்படவில்லை. இணைப்புச்சாலைக்கும், நான்கு வழிச் சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள குறுகிய வாய்க்கால்களும் தூர்வாரி சீரமைக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், மழை பெய்யும் நேரத்தில் ஒட்டுமொத்த மழை நீரும் வெளியேற வழியின்றி சாலையிலேயே ஏரி போல தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சேசன்சாவடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

    சேசன்சாவடியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

    எனவே, சேசன்சாவடியில் நான்கு வழிச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் வாய்க்கால்களை சீரமைக்கவும், மழைநீர் வழிந்தோடும் அளவிற்கு விசாலமான புதிய வாய்க்கால்களை அமைக்கவும், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சேசன்சா வடியை சேர்ந்த ஜெய வேல் கூறுகையில், சேசன்சா வடியில் நான்கு வழி சாலை மற்றும் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை பகுதியிலும், மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே உள்ள குறுகலான வாய்க்காலையும் தொடர்ந்து பராமரிக்காததால் தூர்ந்து போய்விட்டது. எனவே, வாய்க்கால்களை தூர்வாரி புதுப்பிக்கவும் , விசாலமான புதிய வாய்க்கால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.‌

    இரவு 8 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் 10 மணி அளவில் சாரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரி த்தது. கன மழையாக கொட்டி பெய்ய தொடங்கி யது.

    தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து இடி - மின்னல் அடித்து கொண்டே இருந்தது.

    பின்னர் சில மணி நேரம் மழை தெறித்தது. மீண்டும் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

    இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இரவு நேரம் என்ப தால் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக அச ம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

    இருந்தாலும் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    அதில் பெட்டிகடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம டைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் பூதலூர் ,வல்லம், திருவையாறு ,மதுக்கூர், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    தஞ்சாவூர் -31, வல்லம்-31, குருங்குளம்-21, மதுக்கூர்-17.20, நெய்வாசல் தென்பாதி-12.80, பூதலூர்-8.40.

    • நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது.
    • தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் தூய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர், துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது

    ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து அளிக்க கேட்டுக் கொண்டதோடு சுற்றுப்புறத் தூய்மை உடல் நலக்கு நன்மை பயக்கும் திறந்த நிலையில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக முற்றிலும் மாற வேண்டும்.

    ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். 2025ம் ஆண்டில் தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்

    இதனால் ஐம்பது சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொருவரும் கடைக்கு செல்லும் பொழுது தமிழக முதல்அமைச்சரின் உத்தரவுபடி மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக்கை முற்றிலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், முத்துக்குமார், அப்பு, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
    • அப்பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ- மாணவிகளும், வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால், மழை நீர் சாலைகளில் ஆறு போல ஓடியது.

    கனமழையின் காரணமாக, சாலைகளில், உள்ள பள்ளங்களில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

    நல்லமாங்குடி, அக்ரஹாரத்தில் தெருவிற்கு செல்லும் சாலை முன்பாக, மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    சாலை வழியாக, அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும், அரசு மாணவர் விடுதிக்கும், செல்ல வேண்டும்.

    மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையில் பள்ளம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    பள்ளி குழந்தைகள், தேங்கி நிற்கும் மழை நீரில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது, சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதும், அதனால் அந்தப் பகுதியை கடப்பதற்கு பள்ளி மாணவ மாணவிகளும் வயதானவர்களும் சிரமப்படும் நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.

    இந்தச் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் உடனடியாக வடியும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
    • மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சியில், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆசாத் மார்கெட் கட்டுமானப் பணி மற்றும் மகாலெட்சுமி நகரில் ரூபாய் 1.675 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை.

    ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஒருங்கிணைந்த அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 5.30 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் அக்கரைக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியினையும் நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின்போது பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு என முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது. இதேபோல சில பள்ளிகளின் வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு, போதிய வடிகால் வசதி இல்லாததே காரணமாகும். சில பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல், கழிவுநீரோடு சேர்ந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.குடியிருப்பு மற்றும் ரோடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் அப்பகுதிகளை கடக்க முடியாமல் மக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- நகரின் பிரதான ரோடுகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதேபோல சில பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுப்பதில்லை. மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறுகிறது.மழையால், நகரில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமக்கள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர்.
    • மழைநீர் தேங்கி நின்று சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராமுத்திரகோட்டை கீழத்தெரு, கீழ அம்பலகாரதெரு மற்றும் கள்ளிமேடு கிராம சாலைகள் கப்பி சாலையாகவும், மண் சாலையாகவும் உள்ளதால் கிராமவாசிகள் பல ஆண்டுகளாக அவதியுற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் தெரு சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக உள்ளதால் தெருவாசிகள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது.
    • தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூருக்கு தென்புறம் மற்றும் ஊருக்கு வடபுறம் மழைநீர் செல்லும் ஓடை உள்ளது. இங்குள்ள மலர் குளத்தின் மறுகால் தளத்தில் இருந்து ராஜாவின் கோவில்குளம் வரை உள்ள ஓடை 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதுபோல் திருச்சிற்றம்பலபேரி குளத்திலிருந்து சாமி நத்தம் குளம் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

    இந்த 2 ஓடைகளிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் மலர்குளம் மற்றும் திருச்சிற்றம்பல பேரிகுளத்தின் மறுகால் மழைநீர் ஓடையில் வழியாக செல்லும் போது முட்செடிகளின் ஆக்கிரமிப்பால் மழைநீர் ஓடைகளின் பக்கவாட்டு சுவரில் அரிப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியே செல்கிறது.

    தற்போது புஞ்சை நிலங்களில் இடையே உள்ள சிறு வாய்க்கால்களை தூர்வாரும் பணி வேளாண்துறை மூலம் நடந்து வருகிறது. எனவே இந்த 2 ஓடைகளில் உள்ள முட்செடிகளை வேளாண்துறை நிதி அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • கபிஸ்தலம் ஊராட்சியில் நர்சரி பகுதியில் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் பெருமாள்கோவில் மற்றும் கபிஸ்தலம் ஆகிய ஊராட்சிகளில் ஜல் சக்தி அபியான் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பெருமாள் கோயில் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் நர்சரி பகுதியில் சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டனர்.

    அதிக அளவில் மரக்கன்றுகள் பயிர் செய்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.பயிர் செய்த கன்றுகளை அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குமாறு அறிவுறுத்தினர்.

    மத்திய குழுவினருடன் தஞ்சை மாவட்ட துணை கலெக்டர் ஸ்ரீகாந்த், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ரமேஷ் பாபு, ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சுமதி குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், தட்சிணாமூர்த்தி, பணி மேற்பார்வையாளர்கள் செல்வராணி, ரமேஷ், மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் சென்றனர்.

    ×