search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரபிரதேசம்"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக சனிக்கிழமை மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார்.

    இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பிரசாரம் செய்ய உள்ளார். முதல் கட்டமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது 4 மெகா பிரசார கூட்டங்களில் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த மாத இறுதிக்குள் 20 கூட்டங்களில் அவர் பேச திட்டமிட்டுள்ளார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தை பரபரப்பாக பிரபலப்படுத்த பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக பிரதமர் அலுவலகம் அனைத்து அமைச்சகத்துக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் அடுத்த 6 மாதத்தில் எந்தெந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. எந்தெந்த திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது? என்ற விவரத்தை கேட்டு உள்ளது.

    மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைய புதிய நலத்திட்டங்களை அறிமுகம் செய்யவும் பா.ஜ.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. #BJP #Modi
    உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.

    உத்தரபிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாத காலத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் வெறிநாய் கடித்து உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    உத்தர பிரதே சமாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. #UPPlasticBan
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கும்படி அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. முழுமையாக இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், மீண்டும் 2017ம் ஆண்டு அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் புழக்கத்தையும், பயன்பாட்டையும் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரபங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.


    ‘மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நமது இலக்கை எட்டுவதற்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்ப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முதல் முறை மீறுவோருக்கு 5000 ரூபாயும், இரண்டாவது முறை மீறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறுசெய்யும்பட்சத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையைப் பின்பற்றி உ.பி. அரசும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UPPlasticBan
    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்யான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    இங்கு 8-ம் வகுப்பு மாணவன் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் நோயாளிக்கு கம்பவுண்டரே மயக்க ஊசி செலுத்துகிறார். பின்னர் 13 வயது சிறுவன் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்கிறான். அதை அருகில் நின்று அவனது தந்தை மேற்பார்வையிடுகிறார்.

    இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக் குமார் ஹண்டா கூறுகையில், இங்கு சிறுவன் அறுவை சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல, அந்த ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் முன்னிலையில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. நர்சுகளும் கூட மயக்க மருந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

    இதற்காக ஆர்யான் மருத்துவமனைக்கு 3 முறை சீல் வைக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி நிறுவனர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஆஸ்பத்திரியை திறந்து விடுகிறார்.

    கடந்த 1 ஆண்டில் மட்டும் இங்கு 24 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் 3 குடும்பத்தினர் இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த அர்ஷ் அலி என்ற 17 வயது சிறுவன் 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறையில் பணியாற்றி வருகிறார். #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் அர்ஷ் அலி. இவருக்கு சிறுவயது முதல் தொல்லியல் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.

    இதையடுத்து அர்ஷ் அலி தனது திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம், 2015-ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் தொல்லியல் பணியை துவக்கினார். அதன்பின் டெக்கான் கல்லூரியைச் சேர்ந்த வசந்த் சிண்டேவுடன் இணைந்து சிந்து பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டார். இவர் சமீபத்தில் எகிப்தில் புத்த மதம் பரவியது குறித்து ஆய்வு செய்து, அதனை பற்றி, தேசிய அருங்காட்சியகத்திலும், உலக விரிவுரை தொகுப்பு நிகழ்ச்சியிலும் பேசியுள்ளார்.

    இந்நிலையில், இவர் தற்போது இந்திய வேதங்களை ‘ஹியரோக்ளிஃப்ஸ்’ எனப்படும் குறியீடு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்து வருகிறார். அர்ஷ் அலி குறித்து பேசிய தேசிய அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் பி.ஆர். மணி, 2015-ம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் முதல்முறை சந்தித்ததாகவும், அப்போதே முழுமையாக ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், அர்ஷ் அலி ஒரு ஆச்சரியமான சிறுவன் எனவும் பி.ஆர். மணி தெரிவித்துள்ளார். சிறுவர்களும், இளைஞர்களும் செல்போன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நேரத்தை வீணடித்து வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உலக அளவில் தொல்லியல் துறையில் முன்னேறி வருவது நாட்டை பெருமையடையச் செய்கிறது. #ArshAli #NationalMuseum #ArchaeologyDepartment
    உத்தரபிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். #NarendraModi #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீர், அங்குள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் மெகர் நகரில் உயிர்நீத்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட கபீரின் நினைவாக கோவில் ஒன்றை இந்துக்களும், நினைவிடம் ஒன்றை முஸ்லிம்களும் மெகர் நகரில் நிறுவியுள்ளனர்.

    இந்த நகர் முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கபீரின் போதனை விளக்க மையம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மிகப்பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மெகர் நகருக்கு செல்கிறார். அங்கு கபீரின் நினைவிடம் மற்றும் தர்காவில் மரியாதை செலுத்தும் அவர், பின்னர் அங்கு ரூ.2½ கோடியில் கட்டப்படும் கபீர் அகாடமிக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.



    மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள இந்த பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் 2½ லட்சம் பேரை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதாவினர் கருதுகின்றனர். நெசவாளர்களின் ஆதரவை பெறும் நோக்கில், நெசவுத்தொழிலை செய்து வந்த கபீரின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக கூறும் அவர்கள், சுவாமி ராமானந்தாவின் சீடராக கபீர் கருதப்படுவதால், வைஷ்ணவ பக்தர்களின் ஆதரவையும் இதன் மூலம் பெற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கும் நிலையில், பிரதமரின் மெகர் நகர பொதுக்கூட்டம் பா.ஜனதாவினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மெகர் நகருக்கு செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் மெகர் நகர் முழுவதையும் சிறப்பு கமாண்டோ படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள இந்தியா-நேபாள எல்லைப்பகுதி மூடப்பட்டு உள்ளதுடன், உளவுத்துறையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டால் கோரக்பூரில் இருந்து மெகருக்கு காரில் செல்ல நேரிடும். எனவே இதற்காக 30 கி.மீ. தொலைவுக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.  #NarendraModi #UttarPradesh  #Tamilnews
    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக தர வலியுறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் டி.பி. நகரை சேர்ந்த விகாஸ்குமார். இவரது மனைவி அனு.

    விகாஸ் குமாரின் சகோதரிக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.

    இதற்காக விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுவிடம் கிட்னியை தானமாக கொடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கு அனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் விகாஸ் குமார், அனுவின் பெற்றோருக்கு போன் செய்து தங்களது மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுவின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் விகாஸ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. அனுவின் உடலும் அங்கு இல்லை. அவரது உடலுடன் கணவர் விகாஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அனுவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில், கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக கொடுக்க அனுவை வற்புறுத்தி கொடுமை படுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகிறார்கள். #Tamilnews
    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் அடுத்த ஆண்டில் உ.பி. சட்டசபை தேர்தலை நடத்த தயாரா? என பா.ஜ.க.வுக்கு உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார். #SPdaresBJP #UPassemblyandLSpollstogether
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் ஆகிய இரு பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் மத்தியிலும், அம்மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

    இதில் கோரக்பூர் தொகுதி உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்தின் சொந்த ஊருக்கு உட்பட்ட பகுதியாகும், மேலும், புல்பூர் தொகுதி அம்மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா முன்னர் எம்.பி.யாக பதவி வகித்த தொகுதியாகும், எனவே, இந்த தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதனால், அம்மாநிலத்தில் முன்னர் ஆட்சி செய்த கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் அடுத்த ஆண்டில் உ.பி. சட்டசபை தேர்தலை நடத்த தயாரா? என பா.ஜ.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்போதே அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும், பஞ்சாயத்து, நகராட்சி போன்ற உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. இதை பிரதமர் மோடியும் முன்னர் வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக ஆலோசித்து உ.பி. அரசுக்கு கருத்து தெரிவிக்க அம்மாநில சுகாதார மந்திரி சித்தார்த் நாத் சிங் தலைமையிலான குழுவை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அமைத்திருந்தார்.

    அந்த குழு தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. இந்நிலையில், பிரதமரின் இந்த யோசனையை பின்பற்றி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் அடுத்த ஆண்டில் உ.பி. சட்டசபை தேர்தலை நடத்த தயாரா? என பா.ஜ.க.வுக்கு உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆதார் எண்களுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பதிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதிலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, வரும் 2019-ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலையும் நடத்துவதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் நடைமுறையை அவர்கள் (பா.ஜ.க.) தொடங்க வேண்டும் என இன்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். #SPdaresBJP #UPassemblyandLSpollstogether 
    மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சம்பவங்களை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறோம். அதுபோல் உண்மையிலேயே உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
    கான்பூர்:

    லக்னோவில் கோசைன் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது. ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சாந்தி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கணவரை சந்திக்க வரவில்லை. இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    ஏன் என்று கேட்ட போது சாந்தி ரவியுடன் காதல் வலையில் வீழ்ந்ததை தெரிவித்தார். ஆனால் தனது கருத்தை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். காதலனை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்று நிலைமையை எடுத்துக் கூறினார்.


    இதைக் கேட்ட சுஜித் மனம் இறங்கினார். மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது முடிவை தெரிவித்தார். போலீசார் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டனர்.

    நேற்று சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார். அவர்களது உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர். #Tamilnews
    பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 6 பேர், ரேபரேலி, கோன்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதேபோல், பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த பெருமழைக்கு 19 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர். #tamilnews
    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு கடந்த 2 நாட்களில் வாட்ஸ் அப்பில் ஒரே மாதிரியான குறுந்தகவல் வந்தது.

    அதில், எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் உடனடியாக இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் சிறப்பு தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் எம்.எல்.ஏ.க்களின் வாட்ஸ் அப்புக்கு வந்த மிரட்டல் குறுந்தகவல்கள் அனைத்தும் துபாயில் இருந்து வந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தற்போது போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளனர். 
    ×