search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மாணவி.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

    மயிலாடுதுறை,

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், பராமரிக்கப்பட்டு வந்த லக்ஷ்மி என்ற 2 கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

    இதனை சசிகலா இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி ஆகியோரிடம் உரையாடினார்.

    லட்சுமியிடம் பேசிய அவர் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததோடு விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த வாழ்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக லட்சுமி என்ற மாணவி தெரிவித்துள்ளார்.

    • பொதுக்குழுவுக்கு வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் கட்சி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • பொதுக்குழுவில் கால அட்டவணை மற்றும் நிகழ்ச்சி தொடர்பாக 26 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

    இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 2,600 பேர் கலந்து கொள்கின்றனர்.

    எனவே இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கடந்த 7 மற்றும் 15-ந்தேதி மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆவடி போலீஸ் கமிஷனர், திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவின் கால அட்டவணை போலீஸ் தரப்புக்கு இதுவரை வழங்கவில்லை. பொதுக்குழு தொடர்பாக 26 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். அதற்கு இதுவரை அ.தி.மு.க. பதில் அளிக்கவில்லை.

    கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் கருதினால் அவர் எப்போது வேண்டுமானாலும் போலீசாரை நாடலாம் என்று கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    எனவே போலீஸ் பாதுகாப்பு கேட்டு இவர்கள் இருவரால் தான் மனு கொடுக்க முடியும்.

    3-வது நபரான மனுதாரர் பெஞ்சமின் இதுபோல போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடியாது.

    எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவில் அவர் பொதுக்குழு கூட்டத்தில் யாரோ பிரச்சினை செய்வார்கள். அல்லது கலவரம் செய்வார்கள் என்று கூறி உள்ளார். இது கற்பனையான குற்றச்சாட்டு.

    எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி மனுதாரர் பெஞ்சமின் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் மனுதாரர் அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர் தான். ஆனால் கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு இது போல வழக்கு தொடர முடியாது.

    பொதுக்குழுவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருந்தால் நாங்களே போலீசாரை அணுகுவோம் என்று கூறினார்.

    பெஞ்சமின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய நாராயணன் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு 2,600 பேர் வரை வருகிறார்கள். அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்கள் வாகனங்களுக்கு பாஸ் ஆகியவை வழங்கப்படும். இருந்தாலும் ஏதேனும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுதார் வழக்கு தொடர உரிமை உள்ளது என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி பொதுக்குழுவுக்கு வருகை தரும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் கட்சி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    போலீசாரும் இந்த விஷயத்தில் நடுநிலையாக செயல்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். பொதுக்குழுவில் கால அட்டவணை மற்றும் நிகழ்ச்சி தொடர்பாக 26 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர். அதற்குரிய விளக்கத்தை மதியம் 1 மணிக்குள் அ.தி.மு.க. போலீசாருக்கு அளிக்க வேண்டும்.

    இந்த வழக்கை முடித்து வைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

    • அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது.
    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகளின் கருத்தும் ஒற்றை தலைமையை நோக்கியே இருக்கிறது. அ.தி.மு.க.வில் உள்ள 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒற்றை தலைமையை விரும்புகிறார்கள்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமையை விரும்பவில்லை. தற்போது இருப்பது போல தனக்குரிய அதிகாரங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    இதனால் அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வாரமாக பெரும் குழப்பம் நிலவுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    இந்த பரபரப்புக்கிடையே அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

    அதோடு சில முக்கிய தீர்மானங்களும் பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளது. சில விதிகளை மாற்றி புதிய அம்சங்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒற்றை தலைமை குறித்தும் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வி.ல் தனது கையெழுத்து மற்றும் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். ஆனால் தீர்மானங்கள் கொண்டு வரவும், நிறைவேற்றவும் ஓ.பி.எஸ். கையெழுத்து தேவையில்லை என்பது சட்ட நிபுணர்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளது.

    அப்படி கொண்டுவரும் பட்சத்தில் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டு அதற்கு தேர்தல் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

    ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கை மிக எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.

    அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அவர் தனது வீட்டில் இருந்தபடி மூத்த தலைவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் தலைவர்கள் யார், யார் என்று தகவல்கள் சேகரித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.

    நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சந்தித்து பேசினார். இதற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோன்று சசிகலா ஆதரவாளர்களும் மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இதுபற்றியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனவே அ.தி.மு.க.வில் சில அதிரடி நடவடிக்கைகள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

    • ஒற்றை தலைமையை ஓ. பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும்
    • அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

    பரமக்குடி:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கோஷம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையில் ஒற்றை தலைமையை ஓ. பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சுவரொட்டி ஒட்டினர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ.‌பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றுகூடி ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அ‌தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளனர். ஒற்றை தலைமை கோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்ததால் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? என்று தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும்.
    • பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியான கட்சி நிர்வாகிகள் தேர்தல் சட்ட திட்ட விதி 30 பிரிவு 2-ன் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தபட வேண்டும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019-ம் ஆண்டு கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அந்த கால கட்டத்தில் கொரோனா பரவியதால் தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்கட்சி தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

    முதலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

    அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் கமிஷனிலும் அ.தி.மு.க. தலைமை சமர்ப்பித்தது.

    கட்சி சட்ட திட்ட விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கட்சி நிர்வாகிகள் பட்டியலுக்கு செயற்குழு, பொதுக் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.

    இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சிறப்பு அழைப் பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    சிறப்பு அழைப்பாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி இது வரை ஒத்துக்கொள்ளவில்லை. கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களை வைத்து செயற்குழு, பொதுக்குழுவை நடத்தி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார்.

    தேர்ந்தெடுக்கப்படாத பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை பங்கேற்க வைத்தால் அதில் சசிகலா ஆதரவாளர்கள் யாராவது கட்சிக்கு விரோதமாக கருத்துக்களை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயலக்கூடும் என நினைப்பதால் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா ஆதரவாளர்கள் போலி உறுப்பினர்கள் போர்வையில் பங்கேற்று ஒற்றை தலைமை கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் இதுபற்றி விவாதிப்பதற்கும், செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை இறுதி செய்வதற்காகவும் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர்.

    மேலும் தமிழகத்தில் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவது, ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    செயற்குழு, பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள். அது மட்டுமல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    மாவட்ட கழக செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

    தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்க படக்கூடும் என தெரிகிறது.

    உயர் மட்டக்குழுவின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், செயல் தலைவராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

    இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 9 பேர், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 9 பேர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவாக உயர்மட்டக்குழு மாற்றி அமைக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தின்போது நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மத்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசியதாவது:-

    வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றியும், பொதுச்செயலாளர் பதவி பற்றியும், சசிகலா பற்றியும் யாரும் பேசக்கூடாது. குரல் எழுப்பவும் கூடாது. இதை மாவட்ட செயலாளர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கட்சியை நாங்கள் இருவரும் சேர்ந்து நடத்தி செல்வோம்.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு முழுமையான ஆதரவு கொடுக்க வேண்டும். அமைதியான முறையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இன்று நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் செல்போன் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதுபற்றிய தகவல்கள் வெளியே கசிவதாக புகார் எழுந்த நிலையில் இன்று செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    கட்சி நிர்வாகிகளின் செல்போன்களை வாங்கி வெளியே வைத்திருப்பதற்காக தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கூட்டத்துக்கு சென்ற நிர்வாகிகளிடம் இருந்து செல்போன்களை வாங்கிய பிறகே உள்ளே அனுப்பினார்கள்.

    • சசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    • அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற கட்சி இருக்காது.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் இன்று கையெழுத்து போட்டு விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை மீட்டு எடுப்பேன் என்று சசிகலா கூறி இருக்கிறார். சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் ஒருபோதும் இடமில்லை. பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சசிகலா நினைக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளன.

    சசிகலாவின் கருத்தை தொண்டர்களும் தமிழக மக்களும் பொருட்படுத்தவில்லை. அவர் கூறுவதை உதாசீனப்படுத்தும் கருத்தாகத்தான் அனை வரும் பார்ப்பார்கள். அவர் கூறும் கருத்து பெரிய அளவில் தாக்கமும் ஏற்படுத்தாது.

    அ.ம.மு.க.வில் இருந்து பலர் அ.தி.மு.க.வில் வந்து இணைகிறார்கள். கூடிய விரைவில் அ.ம.மு.க. என்ற கட்சி இருக்காது. தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் பணத்தை வைத்து மட்டும் அரசியல் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.
    • ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    திண்டிவனம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திண்டிவனம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    சுமார் 600-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு காரணம் காவல்துறையை 3 பிரிவுகளாக பிரித்ததுதான். ஒரே தலைமையின் கீழ் காவல்துறை இருந்தால் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் நெல் விதை இல்லாமல் தவிக்கிறார்கள். இது பற்றி உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்வதாக அந்த கட்சியினர்தான் கூறுகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாக வளரவில்லை.

    தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவர்கள் குறுக்கீடு ஏராளமாக உள்ளது. இதனை கண்டிக்கிேறாம்.

    எனக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே, அ.தி.மு.க. கொடி மற்றும் கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.
    சென்னை :

    அரசியல் களத்தில் பரபரப்பு காட்டி வரும் நபராக சசிகலா மாறிவிட்டார். அ.தி.மு.க. கொடி கட்டிய காரிலேயே வலம் வருகிறார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. என்ற இந்த பேரியக்கம் எம்.ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம்பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழிவந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

    என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னிடம் மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், நீங்கள் வாழும் இடத்துக்கு அருகே உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டவர்கள், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே, அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

    மேலும், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைகோள் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையையும் இந்திய அரசின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் டாலர்களாக பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
      
    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

    பின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பர்ப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு கடந்த 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு கடந்த 13-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி எஸ். மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் அளித்தார்.

    இன்றைய விசாரணைக்கு பாஸ்கரன் வந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அரசுதரப்பு வழக்கறிஞர் சசிகலாவிடம் முன்வைக்கும் கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து கேள்விகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மறுவிசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்கும் என நம்புவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #JayaDeathProbe #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன? என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.

    அப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.

    நாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. 

    குறுக்கு விசாரணை முடிந்ததும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சம்மன் அனுப்பப்பட்ட 11 பேரில் 9 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்தார் என  அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன் .

    மருத்துவர் சிவகுமார் கொடுத்த ஜெயலலிதாவின் ஆடியோ அப்போலோ மருத்துவமனையில்தான் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ஆடியோ விவகாரத்தை மருத்துவர் அர்ச்சனா உறுதி செய்துள்ளார். என கூறினார்.
    தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என திவாகரனுக்கு சசிகலா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Sasikala #Divakaran
    சென்னை:

    டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனி அணி தொடங்கியுள்ள திவாகரன், முதல்வர் - துணை முதல்வர் அணிக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால், தினகரன் - திவாகரன் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். உடன்பிறந்த சகோதரி என சசிகலா என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸ் குறித்து திவாகரன் தரப்பில் எந்த கருத்தும் இதுவரை கூறப்படவில்லை. #Sasikala #Divakaran
    ×