search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #DuraiMurugan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திமுக பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் பெற்றேன். இந்த பாஸ்போர்ட்டு வருகிற 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

    ஆனால், பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள் காலியாகி விட்டதால், புது பாஸ்போர்ட் வழங்க கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டனர்.

    என் மீது ரூ.1.40 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணமும் கூறுகின்றனர். ஆனால், என்னை இந்த வழக்கில் இருந்து கீழ் கோர்ட்டு விடுவித்து விட் டது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டப்படி சரியானது இல்லை. பாஸ்போர்ட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    துரைமுருகன் பாஸ்போர்ட் கேட்டு கொடுக்கும் புதிய விண்ணப்பத்தை 4 வாரத்துக்குள் பரிசீலித்து, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHC #DuraiMurugan
    தி.மு.க. பொருளாளர் துரை முருகனையும், தன்னையும் பக்திதான் ஒரே மேடையில் இணைத்துள்ளது என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். #DuraiMurugan #LaGanesan
    சென்னை:

    லஷ்மன் ஸ்ருதி சார்பில் சாமியே சரணம் அய்யப்பா என்ற தலைப்பில் 29-ம் ஆண்டு பக்தி இசை பூஜை என்ற பக்தி பாடல் இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு இயக்குனர் கங்கை அமரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. பொருளாளர் துரை முருகன், முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசியதாவது:-

    இந்த விழாவுக்கு தி.மு.க.வை சேர்ந்த துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். தி.மு.க. பொருளாளர் துரை முருகனையும், தன்னையும் பக்திதான் ஒரே மேடையில் இணைத்துள்ளது.


    இதன் முலம் பக்திதான் என்றைக்கும் நம் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நன்றாக தெரிகிறது. அது மாத்திரமல்ல அரசியல் ரீதியாக எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த பக்திதான் நம்மை ஒற்றுமைப்படுத்தும் என்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

    அசைக்க முடியாத இறை நம்பிக்கை இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அய்யப்பன் இசை பூஜைக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை லஷ்மன் ஸ்ருதி நிர்வாகிகள் ராமன், லஷ்மன் செய்திருந்தனர். #DuraiMurugan #LaGanesan
    எந்த கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல என்றும் தொகுதி பங்கீடு செய்தால்தான் கூட்டணி என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். #DMK #DuraiMurugan

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் தோழமை கட்சிகளே” என்று கருத்து தெரிவித்தார்.

    துரைமுருகனின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் கடும் சலசலப்பையும், சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது. ம.தி.மு.க.வையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தி.மு.க. சற்று தொலைவில் வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைமுருகனின் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினோ மற்ற மூத்த தலைவர்களோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் மன வேதனையை உண்டாக்கி இருக்கிறது.

    நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தொடர்ந்து மவுனமாக உள்ளார்.

    என்றாலும் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி வருகிற 3-ந்தேதி கவர்னர் மளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ள ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் கூறியிருப்பது ம.தி.மு.க.வினரிடம் நிம்மதியைக் கொடுத்துள்ளது.


    இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து தான் தெரிவித்த கருத்து சரியானது தான் என்பதை வலியுறுத்தி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பொதுநல நோக்கத்துடன் பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும் மணமகனாகவும் இருக்கிறோம்.

    ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்- மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திரு மணபந்தம் ஏற்படவில்லை.

    தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன. அந்தத் தோழமைக் கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல.

    ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan

    கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்துக்கு முக ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #MKStalin #Duraimurugan
    புதுக்கோட்டை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இப்போது தி.மு.க.வுடன் உள்ள கட்சிகள் கடைசி நேரத்தில் விலகலாம். தி.மு.க.வை இதுவரை எதிர்த்து வருபவர்கள் கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்றும் , ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் நட்புடன் உள்ளனர் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

    இது தி.மு.க. கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் முன்பு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது வைகோவிடம் நிருபர்கள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ கூறியதாவது:-

    கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து ம.தி.முக.வினருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு கூற வேண்டும். நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.



    இந்தியாவை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் ரத்த களரியாக்கப்பார்க்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளராக நிதின் கட்காரியை அறிவிக்க உள்ளது.

    கஜா புயல் பாதிப்பால் ஏராளமான விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு வெறும் 4 சதவிதம் மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. பட்டேல் சிலையை அமைக்க 3 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க தயங்குகிறார்கள். மத்திய அரசு தூக்கி எறியப்படவேண்டிய அரசு இவ்வாறு வைகோ கூறினார்.

    முன்னதாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்திற்குட்பட்ட முள்ளூர், பெருங்களூர், ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை, சொக்க நாதப்பட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

    கந்தர்வக்கோட்டை பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொதுமக்களை சந்தித்து ஆறுதல்கூறிய போது எடுத்தப்படம்

    கஜா புயலால் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு ஒன்று தெரியாது. எட்டு வழிச்சாலைக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து விட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.1100 அறிவித்தால் நியாயமா?. ஒரு ஏக்கர் வாழை மரத்திற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரமும், மரத்தை அகற்ற ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயலில் வீடு இழந்தவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேக்கு மரத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீட்பு பணியில் உயிரை கொடுத்து பணியாற்றி கொண்டிருக்கும் மின்சார ஊழியர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நாங்கள் தனி அறிக்கையை தயாரித்து வருகின்றோம். நான் யாரையும் குறை சொல்லவும், விமர்சனம் செய்யவும் வரவில்லை. தமிழகத்திற்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்குள் எந்த பகுதிக்கு பிரதமர் மோடி வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம். தற்போது புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் மத்திய குழு ஒரு அயோக்கிய குழு. தமிழக அரசிற்கு முதுகெலும்பு போய் 2 ஆண்டுகள் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #MKStalin #Duraimurugan
    கஜா புயல் பாதிப்பை தி.மு.க. அரசியலாக்கவில்லை என துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Gajastorm #Storm #DuraiMurugan

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எதிர்கட்சி துணை தலைவரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பயிர், கால்நடைகள், வீடுகள் சேதத்தால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும், மக்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை எல்லாம் அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது என்பது சாதாரணமான வேலையில்லை.


    அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஒட்டுமொத்த கணக்கீடு குறித்து தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ சேத மதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இவைகளை எல்லாம் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது.

    மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை. தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். தமிழகத்தை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ, நிதி மந்திரியோ எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.

    நிவாரண நிதி கேட்பதை தமிழக அரசு தைரியமாக கேட்க வேண்டும். கஜா புயலை தி.மு.க. அரசியலாக்கவில்லை. பாதிப்பு இடங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முதலில் சென்று பார்வையிட்டார். ஆனால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்து விட்டு வந்துவிட்டார். அவர் கீழே இறங்கி நடந்து சென்று பார்த்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #Storm #DuraiMurugan

    மத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டினால் தேவையான நிதி கிடைக்காது என்றும் தைரியமாக கேட்டால் நிதி கிடைக்கும் என்றும் துரை முருகன் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #Centralgovt #GayaCyclone
    சென்னை:

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து பேசினார்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் துரைமுருகன் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

    அரசின் நிவாரணப் பணிக்கு ஓத்துழைப்போம் என்ற எண்ணத்தில் தான் முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கினோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக திமுக நிவாரண நிதி வழங்கியுள்ளது.


    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற முதலில் சென்று வந்தவர் மு.க.ஸ்டாலின். பாதிக்கப்பட்ட இடத்தில் அரசியல் செய்யக்கூடாது.

    மத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டினால் தேவையான நிதி கிடைக்காது, தைரியமாக கேட்டால் நிதி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DMK #DuraiMurugan #Centralgovt #GayaCyclone
    சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக அறிவித்த ரூ. 1 கோடியை துரை முருகன் வழங்கினார். #GajaCyclone #TNCM #Edappadipalaniswami #DMK #DuraiMurugan
    சென்னை

    கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க. பொருளாளர் துரை முருகன் சந்தித்து பேசினார்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத்தை முதல்வரிடம் துரைமுருகன் வழங்கினார்.  #GajaCyclone #TNCM #Edappadipalaniswami #DMK #MKStalin #DuraiMurugan
    பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami
    சென்னை:

    தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்சனை பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்சனைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை சுப்ரீம் கோர்ட்டில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த தி.மு.க. அரசுதான் என்பது ஏனோ முதல்-அமைச்சருக்குத் தெரியவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-7-2016 அன்றே வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது.

    தன் மீதுள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதே அக்கறையுடனும், வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடை உத்தரவு பெறவில்லை?. இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம்மாறும் செயல் என்று கூற வேண்டும்.

    முதல்-அமைச்சரான பிறகு ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை கடிதம் எழுதினார்?. பொதுப் பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திரமோடியை பலமுறை சந்தித்துள்ள முதல்-அமைச்சர் பாலாற்று பிரச்சினை குறித்து எத்தனை முறை பேசினார்?. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை எழுப்புவது ஆட்சியில் இருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    தி.மு.க.வை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது திடீர் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சருக்கு தெரியாது. குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றதே தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அ.தி.மு.க. பிரிவு போல் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் மோடிக்கும் கைகட்டி வாய்பொத்தி நின்று அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை.

    தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் பழனிசாமி, “அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?. ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை.

    ஆகவே சந்தர்ப்பவாதத்துக்கு சரியான அடை யாளம் பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஒரு பிரிவின் இணை ஒருங்கிணைபாளராக இருக்கும் முதல்-அமைச்சர்தானே தவிர, துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் பா.ஜ.க.வையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தீரமுடன் நிமிர்ந்து நின்று எதிர்க்கும் தி.மு.க. தலைவரோ, தி.மு.க.வோ அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி இப்போதாவது புரிந்துகொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami
    மு.க.ஸ்டாலினும்-தினகரனும் சந்தித்ததாக கூறுவது கற்பனை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MKStalin #DMK #TTVDhinakaran

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மு.க.ஸ்டாலினும்-டி.டி.வி. தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த போது அரசியல் சம்பந்தமாக முக்கிய ஆலோசனை மேற் கொண்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா? ஓட்டலில் கூட தங்கக்கூடாதா? உடனே சதியா?

    கே:- ஜெயலலிதா- கருணாநிதி காலத்தில் கூட இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியது கிடையாது. தொண்டர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி வெவ்வேறு இடங்களில் தான் தங்கி இருப்பார்களே தவிர ஒரே ஓட்டலில் தங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    ப:- எங்கும் மோதல் ஏற்படாது. அடிதடியும் ஏற்படாது. அவர் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக கற்பனைக்காக சொல்லி இருப்பார்.


    கே:- 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 18 தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இப்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா? ம.தி.மு.க. புதிதாக உங்களிடம் வந்துள்ளதே அந்த கட்சிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா?

    ப:- முதலில் தேர்தல் வருகிறதா? என்று பாருங்கள். தேர்தல் வந்ததற்கு பிறகு உட்கார்ந்து பேசுவோம். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்பதை எங்களுடன் கூடி பேசி தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவை அறிவிப்பார்.

    கே:- இப்போது இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லையா?

    ப:- மழை கொட்டோ கொட்டும் என்று சொன்னார்கள். மழையே வரவில்லை. நான் எப்படி தேர்தல் வரும், வராது என சொல்லமுடியும். வானிலை அறிக்கையே பொய்த்து போகிறது. அரசியல் நிலை என்னவாகும்.

    கே:- டெங்கு, சிக்குன் குனியா 100 சதவீதம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் இருந்தது. இப்போது 25 சதவீதம் தான் வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

    ப:- எங்கள் ஆட்சியில் டெங்கும் தெரியாது. பங்கும் தெரியாது. வருடத்துக்கு ஒரு முறை வரும் டெங்கு இப்போது விதவிதமாக வருகிறது. எலி காய்ச்சல் முதல் எல்லா காய்ச்சலும் இவர்கள் ஆட்சி காலத்தில் தான் வருகிறது. அரசியல் காய்ச்சல் இவர்களுக்கு வந்ததால் இந்த காய்ச்சல் எல்லாம் வருகிறது.

    கே:- எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தூய்மைப்பணி, ஆய்வு போன்றவற்றை நடத்துவதாக அமைச்சர்கள் குறைகூறுகிறார்களே?

    ப:- நிலவேம்பு கசாயம் கொடுப்பது நல்லது தான். அதை வரவேற்க வேண்டியது தான். அரசாங்கம் செய்ய முடியாததை தானே நாங்கள் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK #TTVDhinakaran

    கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடக்கவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரை முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். . #ADMK #Jayakumar #DuraiMurugan
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “கிருஷ்ணாநீரைத் தேக்கி வைக்க தனியார் நிலம் கையகப்படுத்தாததால் நீர்த்தேக்கம் அமையாமல் 186 கோடி ரூபாய் பாழ்” என்ற ஒரு பொய்யான அறிக்கையை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் நடைபெற்ற 400 கோடி ரூபாய் ஊழலை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கினை திசை திருப்பும் நோக்கில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

    சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கும்மிடிப்பூண்டி கண்ணன் கோட்டை கிராமத்தின் அருகே தேர்வாய்கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய இரண்டு கண்மாய்களை இணைத்து ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்க கடந்த ஜனவரி 2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

    நில உரிமையாளர்கள், கூடுதல் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததால், பணி தாமதமானது.

    ஆனாலும் வழக்குகள் முடிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதமும், நீர்தேக்க கட்டுமானப் பணிகள் 65 சதவீதமும் முடிந்துள்ளது. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இந்த திட்டங்கள் முடிக்கப்படும்.

    2015-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை கொசஸ்தலை ஆற்றில் சுமார் 83,000 கன அடி வெள்ள நீர் சென்ற போது அருகில் உள்ள பட்டா நிலங்கள் வழியாக உபரி நீர்புகுந்து மண் அரிப்பு ஏற்படுத்தி மீண்டும் ஆற்றின் வழியே சென்றது.

    துரைமுருகன் கூறுவது போல 1966-ல் கொசஸ்தலையாற்றில் 92,260 கன அடிவெள்ள நீர் சென்றது என்பது தவறாகும். 59,760 கன அடி மட்டுமே வெள்ள நீர் சென்றது.

    65000 கன அடி வெள்ள நீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தடுப்பணையில், 2015-ல் வரலாறு காணாத மழை பெய்து, மிக அதிக அளவான வெள்ள நீர் விநாடிக்கு 83,000 கனஅடி சென்றதாலும், 100 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் இந்த தடுப்பணை சேதமடைந்தது.


    வெள்ளத்தில் சேதமடைந்த இந்த தடுப்பணையினை சரி செய்ய ஏற்கனவே ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக துரைமுருகன் தெரிவித்த செய்தி தவறானதாகும். இந்த பெருவெள்ளத்தில் சேதம் அடைந்த இந்த தடுப்பணையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரூ.18.17 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 1,20,000 கனஅடி வெள்ள நீர் செல்லும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    1971-1976-ல் தி.மு.க. ஆட்சியிலிருந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணை கட்டப்பட்டு அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் அணை உடைந்தது.

    அதே போல் 1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பில் உள்ள காவேரி கதவணையில் ஒரு தூண் சேதமடைந்து பின்னர் தி.மு.க. அரசால் சரி செய்யப்பட்டது.

    நிலைமை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சியின் தவறுகளை மறைக்க, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #Jayakumar #DuraiMurugan
    இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #admk #byelection

    பீளமேடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    18 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த காலதாமதமாகும்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் , உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சொல்லி தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார், இதன் மூலம் இடை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்பது தெளிவாகிறது.

    மு.க.ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசியிருப்பதை கண்டிக்கிறேன்.


    இது போன்ற தரம் தாழ்ந்த தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது.

    எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரீகமாக பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #admk #byelection

    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    சென்னை:

    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    திமுக பொருளாளர் துரைமுருகன்:-

    தென் தமிழகத்தின் பாசனத்திற்கு ஜீவாதாரமாக விளங்குகிற முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, இரு மாநில நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


    தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும். தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும். எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

    புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இரு மாநில மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு புதிய அணை முயற்சியை கைவிட வேண்டும் என முதல் பினரயி விஜயனை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நதிநீர் சிக்கல்களில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

    முல்லைப் பெரியாற்று வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை மதிக்காமல் புதிய அணை கட்ட கேரள அரசு பலமுறை முயன்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது. அப்போதெல்லாம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இப்போது புதிய அணைக்காக ஆய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெறும் அளவுக்கு கேரள அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இத்தகைய அனுமதியை அளித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளது.

    எனவே, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வுகளை நடத்த கேரள அரசுக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    புதிய அணை கட்டுவதற்கு கேரளா தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அதற்கு மத்திய பாஜக அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கி இருப்பதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். தமிழகத்திற்கு தொடர்ந்து மன்னிக்க முடியாத பச்சை துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.


    முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட முனைவதும், அதற்கு மோடி அரசு துணை போவதையும் தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    ×