search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    காங்கிரசுடன் கூட்டணி பற்றி இப்போது சொல்லமுடியாது என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #kamalhaasan #congress #rahul

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். இது எனக்கான அடையாளம் இல்லை. ஏற்கனவே சினிமா மூலம் மக்களுக்கு என்னை தெரியும். தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறிந்து இருக்கிறோம்.

    தமிழகத்தில் வருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. தற்போது இல்லை. அது கூட்டணியா? என்று இப்போது சொல்ல முடியாது.

    சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, ஏனென்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில் சபரிமலையில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.

    கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதுபற்றி கேட்டதற்கு அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.


    துரைமுருகன் உங்களைப் பற்றி கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு கமல் பதில் அளிக்கையில் துரை முருகன் நடிப்பு பிடிக்க வில்லை என்றார்.

    ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை தலைவர் துரைமுருகன், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் இப்போது கூறியிருப்பதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #DuraiMurugan
    சென்னை:

    சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் திமுக திமுக துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுப்போட திட்டமிடப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது என கூறியுள்ளார்.

    முன்னதாக 2 துணை வேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து பேசாத ஆளுநர், தற்போது திடீரென துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகவும், விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DuraiMurugan
    வருகிற சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு என்று வேலூரில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMK #DuraiMurugan
    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    வேலூர் மேற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க. பின்தங்கிய நிலையில் உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.

    இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு இங்குள்ள 4 தொகுதிகளையும் மீட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணா, கருணாநிதி போல ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பார்கள், தோல்வியடைந்தால் தி.மு.க. கதை முடிந்துவிட்டது என பேசுவார்கள்.

    இது வாழ்வா? சாவா? பிரச்சினை வரும் தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு கட்சிக்கு உழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.

    குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஸ்டாலினை பார்த்து பயப்படுகின்றனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொண்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆகிய 3 பேரின் முகங்களை ஸ்டாலின் வடிவில் பார்க்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆடிக்காற்றில் வந்தவர் காற்று நின்றதும் தானாக கவிழ்ந்து விடுவார் என்றார்.  #DMK #DuraiMurugan


    தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று கூறும் தமிழிசை சவுந்தரராஜன் எலிசபெத் ராணியா என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். #DMK #DuraiMurugan #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசை கண்டித்து சென்னை பெருங்குடியில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தலைமை தாங்கி பேசிய கழக பொருளாளர் துரைமுருகன் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என மேடையில் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

    எச்.ராஜா மீது உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, எச்.ராஜா ஒரு நாகரீகமற்ற அரசியல்வாதி என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.


    டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுனர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியதற்கு அருகில் இருந்த பா.ஜனதா தொண்டர்கள் ஆட்டோ ஒட்டுனரை தாக்கினர்.

    தமிழிசை சவுந்தரராஜனுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்போதும் அவர் குழந்தையாகவே உள்ளார். தாக்குவதும், கைது செய்வதும் இந்த ஆட்சியில் தொடர் கதையாகி வருகிறது.

    கேள்வி கேட்பவர்களை தாக்குவதா? அவர் என்ன எலிசபெத் ராணியா என கேள்வி எழுப்பினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan #BJP #TamilisaiSoundararajan
    பதவி கொடுக்கவில்லை என்றால் காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் விமர்சித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK #Vijayabaskar
    பீளமேடு:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக உள்ளதே?

    பதில் : மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசிய பின்னர் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்


    கே: குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதே?

    ப : பதவி கொடுக்கவில்லை என்றால் யார்- யாரை காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் தான் அமைச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கலாம்

    கே : இலங்கையில் இறுதிப் போரின் போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?

    ப : அதுபற்றி எனக்கு தெரியாது.

    கே : 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?

    ப : தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் துரைமுருகன் ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். #DMK #DuraiMurugan #TNMinister #Vijayabaskar
    பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39 காசு, டீசல் ரூ.30.26 காசு என்று வரியை உயர்த்தி கொண்டே இருக்கும் மத்திய, மாநில அரசுக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், பெட்ரோல்-டீசல் விலையை ஏற்றுவதே தங்களின் நித்தியகடன் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

    மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு இணையாக தங்களால் முடிந்த அளவிற்கு விலையை உயர்த்துகிறது.

    பெட்ரோல் - டீசல் விலையை இப்படி நாள்தோறும் உயர்த்தும் நிலைக்கு என்ன காரணம்? கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது, எனவே நாங்கள் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துகிறோம் என்கிறது மத்திய அரசு.

    இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் கதை என்ன? கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2014-ம் ஆண்டில் 145 டாலர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.45.

    இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்தான். ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.75.

    கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 145 டாலராக இருக்கும்போது பெட்ரோல்- டீசலின் விலை குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருக்கும்போது பெட்ரோல்-டீசலின் விலை உயர்வாக இருக்கிறது. இது என்ன பொருளாதாரம்?

    கச்சா எண்ணெய் விலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அது ஒரு சர்வதேச பிரச்சினையாகவே இருக்கட்டும். பெட்ரோல்-டீசல் விலை அளவில்லாமல் உயர்ந்துக் கொண்டே போனால் பாதிக்கப்படுவது மக்கள் அல்லவா?

    அந்த மக்களை இப்படிப்பட்ட இன்னல்களிலிருந்து காப்பாற்றுவது மத்திய-மாநில அரசுகளின் கடமையல்லவா?

    இன்றைக்கு இருக்கும் மத்திய-மாநில அரசுகள் இதை செய்திருக்கிறார்களா? ஆனால், 2014-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்த போது, வாகனங்களை உபயோகிப்போர் நலன் கருதி, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயினை மானியமாக வழங்கியது.

    அ.தி.மு.க. அரசு பெட்ரோல் மீது விதித்திருந்த 30 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், 1.6.2006ல் 27 சதவிகிதமாக குறைத்தார்.

    அ.தி.மு.க. அரசு டீசல் மீது விதித்திருந்த 25 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் 1.6.2008ல் 21.43 சதவிகிதமாக குறைத்தார். இன்று 2018-ல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் தான்.


    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை 126 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரியை 330 விழுக்காடும் உயர்த்தியுள்ளது. ஆக மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், டீசலுக்கு ரூ.15.53-ம் வரி விதித்துள்ளது.

    இந்த வரி விதிப்பின் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு ரூ.16.50 லட்சம் கோடி வருவாயாக பெற்றுள்ளது.

    பண மதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவினை சந்தித்திருப்பதை அடுத்து வரி வருவாய் குறைந்திருக்கிறது.

    இதனை சரிகட்ட, எரி பொருள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பது அறமற்ற செயலாகும்.

    மத்திய அரசின் செயல் இதுவென்றால், நமது மாநில அரசின் நிலை என்ன? 6.5.2017 அன்று பெட்ரோல் மீதான வரியை 27 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. டீசல் மீதான வரியை 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

    இதனால் இன்று எடப்பாடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20.91-ம், டீசலுக்கு ரூ.19.48-ம் வரியாக விதித்துள்ளது. மத்திய-மாநில அரசுகள் கூட்டாக, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39-ம் டீசல் மீது ரூ.30.26-ம் வரியாக விதித்திருக்கிறது. இந்தியா ஒரே நாடு, ஆகையால் ஒரே வரி என்கிறது மத்திய அரசு.

    மத்திய அரசு மிக அதிகமாக ஜி.எஸ்.டி. வரியினை 28 விழுக்காடு என்பதை எரிபொருள் மீது விதித்திருந்தால் கூட ஒரு லிட்டர் பெட்ரோல்-டீசல் ரூ.50க்கு கிடைத்திருக்கும்.

    நமக்கே பெட்ரோல்-டீசல் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும்போது, ரிலையன்ஸ் கம்பெனி உற்பத்தி செய்யும் எரிபொருளை, ஒரு லிட்டர் ரூ.35 வீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எந்த வகையான அரசு தர்மம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PetrolDieselPriceHike
    தி.மு.க.வுக்கு தேர்தல் நிதி திரட்டுவதில் துரைமுருகன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முதல்கட்டமாக துரைமுருகன் தனது சொந்த மாவட்டமான வேலூரில் தேர்தல் நிதியை திரட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளார். #DuraiMurugan #DMK
    சென்னை:

    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    தேர்வு செய்யப்பட்ட அன்றே “தி.மு.க.வுக்கு அதிக நிதி சேர்க்க வேண்டும். அதற்கு தி.மு.க.வினர் முன் வரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். தற்போது தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    இதையடுத்து, தேர்தல் நிதி திரட்டுவதில் துரைமுருகன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட கழகங்கள் சார்பில் தேர்தல் நிதி திரட்டும் பணியை தொடங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



    தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் பதவி ஏற்ற பிறகு நேற்று ரெயில் மூலம் வேலூர் சென்றார். அவருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு விழாவில் வேலூர் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்கள் சார்பிலும், வேலூர் நகர தி.மு..க சார்பிலும் முதல் கட்டமாக ரூ.1 கோடி தேர்தல் நிதி துரைமுருகனிடம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர்கள் காந்தி எம்.எல்.ஏ., நந்தகுமார் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்டமாக துரைமுருகன் தனது சொந்த மாவட்டமான வேலூரில் தேர்தல் நிதியை திரட்டும் பணியை தொடங்கி வைத்துள்ளார். இதுபோல மற்ற மாவட்டகளிலும் தேர்தல் நிதியை தி.மு.க. திரட்டி வருகிறது.

    இதுவரை திரட்டப்பட்ட தேர்தல் நிதியை விட இந்த முறை அதிக நிதியை திரட்ட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தை மற்றொரு மாவட்டம் மிஞ்ச வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். என்று தி.மு.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். #DuraiMurugan #DMK
    மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    வேலூர்:

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று அவரது சொந்த ஊரான காட்பாடிக்கு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்கதக்கது.


    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் எப்படியாவது அணை கட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றைகாலில் நிற்கிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் அதனை தடுத்து நிறுத்தினோம். மேகதாதுவில் அணைகட்டினால் காவிரியில் வரும் கொஞ்ச தண்ணீரும் நின்று விடும். இது மிகப்பெரிய ஆபத்து. தமிழக அரசு இதனை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும்.

    பாலாற்றில் தந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தற்போது ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களிலும் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தோடு தான் இது நடக்கிறதா. பொதுப் பணித்துறை அமைச்சர் விஜயவாடாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அணைகட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றார். #DMK #MKStalin #DuraiMurugan
    சென்னை:

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று காலை குரோம்பேட்டையில் உள்ள மூத்த கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா வீட்டுக்கு சென்றார்.

    96 வயதாகும் சங்கரய்யா முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சங்கரய்யாவின் உடல் நலம் குறித்தும் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.

    கோப்புப்படம்

    அவருடன் தி.மு.க. பொருளாளர் துரை முருகனும் சென்று சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்றார். #DMK #MKStalin #DuraiMurugan
    திமுகவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-

    உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார்.

    தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர்.



    தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    கருணாநிதியை இழந்து வாடும் தி.மு.க. தொண்டர்களையும், கட்சியையும் செயல் தலைவர் ஸ்டாலினே வழி நடத்த வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசினார். #DMK #Karunanidhi #DuraiMurugan #MKStalin
    வேலூர்:

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேலூரில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடந்தது.

    பேரணியில் தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் எம்.பி முகமதுசகி, எம்.எல். ஏக்கள் காந்தி, நந்தகுமார், கார்த்திகேயன், நல்ல தம்பி உள்பட கலந்து கொண்டனர்.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. மாநகர அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டு போனதாக கருதுகிறேன். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருக்கு முன்பு நான் இறப்பேன் என நினைத்தேன். ஆனால் என்னை அவர் முந்திக் கொண்டு சென்றுவிட்டார்.

    என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. (அப்போது அவர் மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழுதார். உடன் அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.)

    எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருதுகளை கருணாநிதி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு நாங்கள் அந்த விருதை கேட்பதைவிட தோழமை கட்சிகள் கேட்பதே சிறந்தது. இதற்கு மத்திய அரசு மனசு வைக்க வேண்டும்.

    கருணாநிதியின் உடல் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் ஊட்டிய உணர்வு சொல்லிக் கொடுத்த சுயமரியாதை கருத்துக்கள், தமிழுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள், எல்லாவற்றுக்கும் மேலாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை.


    கருணாநிதியை இழந்து வாடும் தி.மு.க. தொண்டர்களையும், கட்சியையும் செயல் தலைவர் ஸ்டாலினே வழி நடத்த வரவேண்டும். அதற்கு தொண்டர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    அமைதி பேரணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். #DMK #Karunanidhi #DuraiMurugan #MKStalin

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #KauveryHospital
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.

    அவ்வாறு கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு நபர்களுக்கும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.  

    இந்நிலையில், காவேரி மருத்துவமனியில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிகிறது. ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்தார். #Karunanidhi #KauveryHospital
    ×