search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    • ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    மேலூர்

    மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்விழி.
    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்விழி (வயது 52).

    இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு வங்கி ஏ.டி.எம். -மில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப்பாக வந்த நபர் ஒருவர் மலர்விழிக்கு பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்த போது பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மலர்விழி திரும்பி சென்றார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.21 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் தெரிவி்த்தார். இதைத் தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். அறையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ததில் மலர்விழியிடம் பணத்தை 'அபேஸ்' செய்த நபர் அடையாளம் தெரிந்தது.

    அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு உடனடியாக சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.
    • நான் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டேன்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள முள்ளிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 25). இவர் மதுரை தல்லாகுளம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்போது அனந்தகிருஷ்ணன், தனசேகரன், வைரவஜெயபாண்டி, மணிபாரதி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்தனர்.அவர்கள், ஆவின் நிறுவனத்தில் பணம் கொடுத்தால் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக ரூ.15 லட்சம் வரை கொடுக்க வேண்டி வரும் என்று ஆசை காட்டினர்.

    அவர்களிடம் ரூ.12 லட்சம் கொடுத்தேன். இதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள், வாக்குறுதி கொடுத்தபடி வேலை வாங்கித் தரவில்லை. நான் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டேன். அவர்கள் எனக்கு ஆவின் நிறுவனத்தில் பணி கிடைத்ததாக, போலி ஆணை கொடுத்தனர். நான் வேலையில் சேருவதற்காக ஆவின் நிறுவனத்துக்கு சென்றேன். அப்போது தான் அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, என்னிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த அனந்த கிருஷ்ணன், தனசேகரன், வைரவ ஜெயபாண்டி, மணிபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    அப்போது அருணாசலம், 4 பேரிடமும் பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்தில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை குடிநீர் மோட்டார் பம்ப் , குழாய் உள்ளிட்ட பொருட்கள் 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.

    இதில் அரசின் வழிகாட்டுதல் மீறப்பட்டு தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மோட்டார் பம்ப் பராமரிக்கப்பட்டதாக போலி ரசீது மூலம் நிதி கையாளப்பட்டுள்ளது. அப்போதைய சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்தார்.

    அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கந்தசாமி சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இது குறித்து விசாரித்தார்.

    இதையடுத்து அப்போதைய நங்கவள்ளி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணியாற்றிய மேகாநாதன், உதவி பொறியாளர்கள் மணிமாறன், செல்வராஜ், மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்பு, அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி அரசு பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு மாற்றுதல் ஆகிய பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    • அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (32). இவர் அரசு வேலை தேடி வந்தார்.
    • அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குருதேவ் மற்றும் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சிந்தகவுண்டன்பாளையம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (32). இவர் அரசு வேலை தேடி வந்தார்.

    இவரின் நண்பர் பூபதி மூலம் ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் தனது கல்லூரி நண்பரான ராஜேஷ் குமார் என்பவரை அங்க முத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

    இதில் ராஜேஷ்குமார் தான் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பதாகவும், என்னால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தர முடியும் என்று அங்கமுத்துவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய அங்கமுத்து கடந்த ஆண்டு 28.8.2021 முதல் 2.9.21 வரை உள்ள காலகட்டத்தில் அந்தியூரில் உள்ள தனியார் வங்கிகள் மூலம் ராஜேஷ்குமார் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணையாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

    ஆனால் ராஜேஷ்குமார் கூறியபடி அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அங்கமுத்து சென்னை உள்ள தலைமை செயலத்திற்கு சென்று விசாரித்த போது ராஜேஷ்குமார் அங்கு வேலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்கமுத்து ராஜேஷ்குமார் மற்றும் குருதேவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் 2 பேரும் போனை எடுக்கவில்லை. மீண்டும் அங்கமுத்து அவர்களுக்கு போன் செய்த போது அவர்கள் தங்களை நேரிலோ அல்லது போன் மூலமோ தொடர்பு கொண்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதையடுத்து அங்கமுத்து இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த மனுவை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    அதன் பேரில் அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குருதேவ் மற்றும் ராஜேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    • கோவை காந்திபுரத்துக்கு பணத்துடன் வந்தால் நகைகளை தருவதாக கூறினர்.
    • நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க நகைகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    கோவை:

    திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு ( வயது 45). இவர் அந்த பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளர் பாலுவிடம் தங்களை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து வந்துள்ளதாக அறிமுகப்படுத்தினர்.

    அப்போது ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது. ஒரு குடுவையில் தங்க நகைகள் இருந்தன. அதனை குறைந்த விலையில் விற்க உள்ளோம் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து ஒரு தங்க கட்டி துண்டை கொடுத்தனர். அதனை வாங்கிய ஓட்டல் உரிமையாளர் பாலு பரிசோத்த போது அது சுத்தமான தங்கம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட ஓட்டல் உரிமையாளர் பாலு உங்களிடம் எவ்வளவு தங்க நகை உள்ளது என கேட்டார். அதற்கு அவர்கள் மொத்தம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான 1¾ கிலோக தங்க நகைகள் இருப்பதாகவும், இதனை ரூ.5 லட்சத்துக்கு தருவதாகவும் கூறினர்.

    மேலும் கோவை காந்திபுரத்துக்கு பணத்துடன் வந்தால் நகைகளை தருவதாக கூறினர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பினார். பின்னர் தனது நகைகளை அடகு வைத்து ரூ. 5 லட்சம் பணத்தை திரட்டினார்.

    பின்னர் கடந்த மாதம் 20-ந் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை வந்தார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன்பு தங்க நகைகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

    அங்கு சென்ற பாலு அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்து தங்க நகைகள் என நினைத்து தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார்.

    பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். பட்டதாரியான இவர் அரசு வேலையில் சேருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

    சோமசுந்தரம் வேலை தேடுவதை அறிந்து கொண்டு, பணம் கொடுத்தால் ஆவின் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளில் நிரந்தர வேலை வாங்கிவிடலாம் என்று அருண்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சோமசுந்தரம், அவர் கேட்டது போல் ரூ.58 லட்சத்து 28 ஆயிரத்து 500 பணத்தை அருண்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் கடந்த நிலையில் வேலை வாங்கித் தராமல், சோமசுந்தரத்திடம் பேசுவதையும், அருண்குமார் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசுந்தரம், வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அருண் குமார், பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை கேட்ட சோமசுந்தரம் உடனடியாக அரியலூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான அருண்குமாரை தனிப்படை அமைத்து தேடி விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அப்பகுதிக்குசென்ற தனிப்படை போலீசார், அங்கு தனியார்விடுதியில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் அருண்குமார் பலரிடம் ஆவின்நிறுவனத் தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மிளகு வியாபாரியிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்ததாக வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் பலசரக்கு சாமான்களை மொத்த கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா என்பவர் அருணாசலத்திடம் தனக்கு 2 ஆயிரத்து 310 கிலோ மிளகு வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் இங்கிருந்து மொத்தமாக மிளகை அனுப்பியுள்ளார்.

    சரக்குகளை பெற்றுக் கொண்ட பின் சர்மா அதற்கான தொகை ரூ. 8 லட்சத்து 79 ஆயிரத்து 900 தர வேண்டியிருந்தது. ஆனால் பணத்தை தராமல் சர்மா காலம் கடத்தி வந்தார். மேலும் உரிய பதிலும் அளிக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணாசலம், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்க மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் நடந்த மாபெரும் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. #America #InsuranceFraud
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவ இன்சூரன்ஸ் வழங்குவதற்காக 1960-ல் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் என 11 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவடைந்துள்ளது.

    எனினும் இந்த இன்சூரன்ஸ் முறையில் மறைமுகமாக மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்காகவே கடந்த 2007-ம் ஆண்டு மருத்துவ மோசடி தடுப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 4 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் துறையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதை அந்நாட்டு நீதித்துறை கண்டுபிடித்துள்ளது.

    நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 ஆயிரத்து 309 கோடி) மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த மோசடி தொடர்பாக 24 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ பொதுக்காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள உடலின் மற்ற பாகங்களை தருவதாக திட்டம் அறிவிக்கப்பட்டது.

    பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச டெலிமார்க்கெட்டிங் சந்தையின் மூலம் இத்திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டது. இதில் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான நோயாளிகள் இத்திட்டத்தில் இணைந்தனர்.

    இந்த மோசடிக்காரர்கள் பணத்திற்காக டாக்டர்கள், நோயாளிகளை நேரடியாக சந்திக்காமலே தேவையான உறுப்புகளைப் பரிந்துரைத்ததாக தெரிகிறது. இந்த மோசடியில் இருந்து கிடைத்த முழு வருமானமும் சர்வதேச அளவில் நடத்தப்படும் போலி நிறுவனங்களுக்கு சென்றன.

    இந்த மோசடியை அரங்கேற்றிய நபர்கள் தங்களுக்கு கிடைத்த பணத்தை கொண்டு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஏராளமான ஆடம்பர சொகுசு பங்களாக்கள், விலை மதிப்புமிக்க கார்கள், உல்லாச கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்கி குவித்தனர்.

    பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருந்து நிறுவன நிர்வாகிகள், மருத்துவ உபகரண கருவிகளை தயாரிக்கும் பெருநிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பல டாக்டர்கள் இந்த மோசடியில் அங்கம் வகித்துள்ளனர். இந்த மோசடியால் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8 ஆயிரத்து 309 கோடி) தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வு போலீஸ்துறையின் உதவி இயக்குநர் ராபர்ட் ஜான்சன் கூறுகையில், “அமெரிக்க வரலாற்றில் ஒரு மாபெரும் மருத்துவ முறைகேடு இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது” என கூறினார்.

    தெற்கு கரோலினாவைச் சேர்ந்த அரசு வக்கீல் ஷெர்ரி லிடன், “இந்த மோசடியின் காரணமாக, மருத்துவக் காப்பீட்டின் தொகை மேலும் உயரும். இந்த சுமை வரிசெலுத்துவோரின் தலையில் தான் விழும்” என்றார்.  #America #InsuranceFraud 
    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப் போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் டேவிட் பீட்டர் (வயது47), பாக்கியலட்சுமி (36). இவர்கள் கொடைக்கானலில் நர்சிங் கல்லூரி அமைக்கப்போவதாக கூறி பரணிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி உள்ளனர்.

    பரணி குமாரின் மனைவி மீனாகுமாரியை கல்லூரியின் முதல்வராக நியமிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி கட்டாமல் மோசடி செய்துள்ளனர்.

    மேலும் சிலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், சொகுசு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொசைட்டி அமைக்கப்போவதாக கூறி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    தேனி அருகே வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44) மற்றும் அருண்குமார், செல்லமுத்து மற்றொரு விஜயகுமார், குமரவேல், பாலமுருகன் ஆகியோர் உள்பட 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பெரியகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சாம்சுல்ரகுமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறி 7 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் 7 பேரும் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் பணத்தை திருப்பி தர முடியாது. மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து 7 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தென்கரை போலீசார் மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்துள்ள கீழப்பூங்குடியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு போக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த காட்டுவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் (36) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் தாங்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி வந்தனர்.

    இதை அறிந்த கதிர்வேல், 2 பேரிடமும் வெளிநாட்டில் வேலை வாங்கி தர கூறினாராம். இதையடுத்து அவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய கதிர்வேல் கடந்த ஆண்டு ரூ.2¾ லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட 2 பேரும், வெகுநாட்கள் ஆகியும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பாமல் இருந்தனராம். இதுகுறித்து கேட்ட போது, முறையாக பதில் கூறாமலும், பணத்தை திருப்பி தர கேட்ட போது, அதை கொடுக்காமலும் இருந்து வந்தனராம். அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கதிர்வேல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார்.

    அவரது உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தினார். மேலும் நாச்சியப்பன், முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நாச்சியப்பனை கைது செய்தனர்.
    ×