search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்தார். #PonManickavel

    திருவொற்றியூர்:

    சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சிலைகள், பிரதான கல்தூண்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ‌கைப்பற்றி வைத்துள்ளனர்.

    சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பிரதான பாதுகாக்கப்படவேண்டிய கற்கள் உள்ளன. இந்த கற்களை பாதுகாப்பாக வைக்க சிலை கடத்தல் தடுப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் உட்பட சில கோவில்களை தேர்வு செய்துள்ளனர்.

    இதையொட்டி இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் உயர் அதிகாரிகள் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இங்கு பிரதான கற்களை பாதுகாப்பாக வைக்க முடியுமா என்பது குறித்து வருவாய்த் துறை, அறநிலைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #PonManickavel

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

    இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

    நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பியதில் மோசடி செய்தவர், தம்பி திருமணத்துக்கு வந்தபோது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னைநகர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் செல்வகுமார் (வயது 35).

    இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பணியில் இருந்து வந்தார். இதற்காக அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவது வழக்கம். மேலும் இவர் பலரிடம் பணம் பெற்று சிலரிடம் மோசடி செய்ததாக தெரிகிறது.

    இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், செல்வகுமாரை தேடி வந்தனர். ஆனால் அவர் கடந்த 6 மாதமாக தலை மறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று செல்வகுமாரின் தம்பி மணிகண்டனுக்கு மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.

    இதில் செல்வகுமார் கலந்து கொள்வதற்காக மன்னார் குடிக்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்து கடைவீதிக்கு அவர் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், திடீரென செல்வகுமாரை அரிவாளர் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கடத்தி சென்றனர்.

    பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் டி. எஸ்.பி. கார்த்தி உத்தரவின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் செல்வகுமாரை கடத்திய கும்பல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனால் கடத்தல் கும்பல் பற்றி போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் சிசிடிவி காமிரா காட்சியின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews

    மதுரை அருகே போலி தங்க கட்டிகள் கொடுத்து ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மருது பாண்டியன். மத்திய ரிசர்வ் போலீஸ்காரர். மங்கலப்பபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுமதி.

    மருதுபாண்டியனும், சுமதியும் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சந்திரமோகனின் மனைவி சுதர்சனா (27) என்பவருக்கு 4 தங்கக்கட்டிகளை ரூ. 13 லட்சம் விலை பேசி விற்றனர்.

    இதற்காக முதற்கட்டமாக ரூ.9 லட்சம் பணத்தை சுதர்சனா, மருதுபாண்டியனிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 லட்சத்தை தரும்படி சுதர்சனாவிடம், மருதுபாண்டியன் கேட்டதால் அந்த தங்கக்கட்டிகளை விற்பனை செய்ய சுதர்சனா சென்றுள்ளார்.

    அப்போது அந்த தங்கக்கட்டிகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுதர்சனா, மருதுபாண்டியனிடம் ரூ.9 லட்சத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் மருதுபாண்டியனும், சுமதியும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மருது பாண்டியன், சுமதி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ஏ.டி.எம். மையங்களில் வைத்த பணத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிறுவனம் பணம் நிரப்பிய பாண்டியன் நகர் மற்றும் ராமமூர்த்தி ரோடு பகுதி ஏ.டி.எம். மையங்களை ஆடிட்டர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது 2 மையங்களிலும் சேர்த்து ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, பணம் நிரப்பும் மையத்தில் பணியாற்றிய விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சக்தி கண்ணன் (வயது 28) தான் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே பணத்தை எடுத்துக் கொண்டதை ஒப்புக் கொண்ட சக்திகண்ணன் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டாமல் இழுத்தடித்தார்.

    இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கிருஷ்ண நாராயணன், விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பணம் மோசடி விவகாரத்தில் சக்தி கண்ணனின் தந்தை ஆண்டவர் (53) சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

    அதன் பேரில் தந்தை- மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    களக்காடு அருகே நிலத்தை எழுதிவாங்கி விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமணி (வயது 55). விவசாயி. கடந்த 2015-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக படலையர்குளத்தில் உள்ள துளசிமணிக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். 

    கோவில்பத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (49) என்பவர் அந்த இடத்தை ரூ.32 லட்சத்திற்கு விலைபேசி முதலில் ரூ.12 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.20 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி துளசிமணி, பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.

    ஆனால் ஆறுமுகம் ரூ.20 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துளசிமணி, களக்காடு போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்த ஓசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    ஓசூரில் உள்ள ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தமிழரசன். இவர் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வசதி வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஓசூர் பகுதியை சேர்ந்த சவுந்திரன், நியாமத்துல்லா, பிரவீன்குமார், ஸ்டெல்லா மற்றும் நந்தினி ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார்.

    மேலும் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்திற்கு நேர்முக தேர்வுக்கு செல்லும்படி போலியாக தயார் செய்த அரசு முத்திரையிட்ட கடிதத்தையும் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையின் அடையாள அட்டையையும் கொடுத்துள்ளார். இது அனைத்தும் போலி என்றும், மோசடி என்றும் தெரிந்த சவுந்திரன், நியாமத்துல்லா உள்ளிட்டோர் ஓசூர் டவுன் போலீசில் தமிழரசன் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தமிழரசனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் அனைவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.
    வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகாசி பெண் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

    இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    சேலத்தில் இன்று உதவித்தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் காந்திஸ்டேடியம் அருகே வசித்து வருபவர் மாரிமுத்து (85). இவரது மனைவி பாப்பாத்தி (75). இவர்களது வீட்டிற்கு இன்று காலை மர்மநபர் ஒருவர் சென்றார்.

    பின்னர் அங்கிருந்த பாப்பாத்தியிடம் நடக்க முடியாமல் உள்ள உனது கணவர் மாரிமுத்துக்கு அரசு உதவி தொகை பெற்று தருகிறேன், 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கூறினார்.

    இதனை நம்பிய பாப்பாத்தி தற்போது 800 ரூபாய் தான் என்னிடம் உள்ளது என்றார். உடனே அந்த மர்ம நபர் 800 ரூபாயையும், சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து கொடுங்கள், செக் வாங்கியதும் மீதி பணத்தை கொடுங்கள்,

    தற்போது என்னுடன் வாருங்கள் என்று ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மூதாட்டியை இறக்கி விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறிய படி அந்த பகுதியில் நின்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக கல்வித்துறையில் புத்தகங்கள் அச்சடிப்பில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அதிகாரி அறிவொளி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Arivoli
    சென்னை:

    தமிழக கல்வித்துறையில் “கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்” என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார்.

    இந்த மையத்தின் சார்பில் கல்வி துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வியில் எத்தகைய புதுமைகளை கொண்டு வரலாம் என்பது பற்றி இந்த மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.

    அந்த வகையில் ‘உலகமெல்லாம் தமிழ்’ என்ற திட்டமும் மாணவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. கனவு ஆசிரியர், சிட்டு ஆகிய 2 பெயர்களில் தனியாக புத்தகம் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கும், மொழித்திறனை மேம்படுத்தவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டன. ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்டத்தின் கீழ் அனிமே‌ஷன் வீடியோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும், இசை மற்றும் நடனம் மூலம் எளிதாக கற்கும் வகையில் இந்த வீடியோ சி.டி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில்தான் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

    இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவொளியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உலகமெல்லாம் தமிழ் திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்கள் அச்சடித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்வியியல் ஆராய்ச்சிக்காக வல்லுனர் குழுவை கூட்டாமல் போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி நடந்திருப்பதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து இயக்குனர் அறிவொளி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் லதா, உதவி பேராசிரியை சங்கீதா, பட்டதாரி ஆசிரியை சித்ரா, இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு போடப்பட்டிருப்பதால் அனைவரும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.பி.ஐ. வளாகத்தில் சோதனை நடத்தியபோது கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அறிவொளியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  #Arivoli
     


    கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக 4 மாநிலங்களில் மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். #Gomtiriver #ED
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு வளர்ச்சி திட்டம் கடந்த சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,500 கோடியில் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போதைய மாநில பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.



    இதையடுத்து கடந்த ஆண்டு இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதே சமயம் அமலாக்க துறையும் பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடியில் தலைமை என்ஜினீயர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய 4 மாநிலங்களில் இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் ஆவணங்கள் ஏதும் உள்ளதா? என அமலாக்க துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். #Gomtiriver #ED
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட விருதுநகரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    விருதுநகரை சேர்ந்தவர்கள் மாரிராஜ், பெரியசாமி. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வசூல் செய்தனர்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தாங்கள் உதவியாளராக வேலை பார்ப்பதாகவும், எனவே அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என்றும் பணம் வசூலித்தனர். அரசு வேலை வி‌ஷயமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

    இதை நம்பி அவரிடம் பலர் பணம் கொடுத்தனர். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

    இந்தநிலையில் மாரி ராஜும், பெரியசாமியும் மீண்டும் அபிராமபுரம் பகுதிக்கு வந்தனர். இதே போல் பணம் வசூலில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் இதை அறிந்து அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் மாரிராஜ், பெரியசாமியிடம் அரசு வேலை தொடர்பாக கேட்டனர். அப்போது இருவரும் மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.

    திடீரென்று அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதில் மாரிராஜை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பெரிய சாமி அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட மாரிராஜை பொதுமக்கள் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரும் லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் அபிராமபுரம் பகுதியில் மட்டும்தான் மோசடியில் ஈடுபட்டார்களா அல்லது தங்கள் சொந்த ஊரான விருதுநகர் பகுதியிலும் மோசடியில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

    தப்பி ஓடிய பெரிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ×