search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • இந்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததால் பட்டாசு விற்பனை அதிகரித்தது.
    • தீபாவளியை முன்னிட்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதேபோல் 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது.

    மேலும் இந்த ஆண்டு பட்டாசு விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்தது. நடப்பு ஆண்டு சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பட்டாசு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததால் பட்டாசு விற்பனை அதிகரித்தது. தீபாவளியை முன்னிட்டு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மகராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. அங்கு அனுப்பப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகிவிட்டன.

    தமிழகத்தில் சென்னையில் மட்டும் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு நடைபெற்ற பட்டாசு விற்பனை தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கணேசன் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதிகளவு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு ரூ.6ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டாசு கடைகள் சங்கம் பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகமாக விற்பனை நடந்துள்ளது. ஏற்கனவே இருப்பு இருந்த பட்டாசுகளும் விற்பனையாகி உள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் வரும் ஆண்டில் மேலும் அதிக அளவில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.
    • மக்கள் பஸ், ரெயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வசதியாக மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

    அரசு பஸ்கள், ரெயில்களில் வரும் மக்கள் வீடுகளுக்கு எளிதாக செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் அதிகாலை முதல் இயக்கப்படுகிறது.

    நேற்று பகல் நேரத்திலும் வெளியூர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்பிய வண்ணம் இருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுவதால் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    தென் மாவட்டங்களில் இருந்து ரெயில்களில் வரும் மக்கள், தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இறங்கி வீடுகளுக்கு செல்ல ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குறைந்த அளவிலான தூரத்திற்கு ரூ.200-ம் கோயம்பேடு-சென்ட்ரலுக்கு ரூ.300-ம் வசூலிக்கின்றனர். இதே போல பெருங்களத்தூரிலும் ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக 300 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பஸ் நிலையங்களுக்கு மட்டும் 100 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் 120 பஸ்கள் வெளியூர்களில் இருந்து வரும் கூட்டத்தை சமாளிக்க அதிகாலையில் இருந்து முக்கிய பஸ் நிலையங்கள்-ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது:-

    தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வசதியாக மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இரவு நேர சேவைக்கு 85 பஸ்கள் பயணிகள் கூட்டம் குறையும் வரை இயக்கப்படுகிறது.

    இதுதவிர தீபாவளிக்கு பஸ் தேவை அதிகரித்ததால் விழுப்புரம், கும்பகோணம், திருச்சி ஆகிய நகரங்களுக்கு 170 மாநகர பஸ்கள் கூட்ட நெரிசலை குறைக்க இயக்கப்பட்டன.

    இந்த வாரம் முழுவதும் வெளியூர்களில் இருந்து பயணிகள் வருவதால் மாநகர பஸ்கள் தேவையான அளவிற்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது.
    • காற்று மாசுவை பொறுத்தமட்டில் சவுகார்பேட்டையில் அதிகளவு பதிவாகி இருந்தது.

    சென்னை :

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை கண்டறிய சென்னை பெசன்ட்நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இந்த இடங்களில் தீபாவளி தினத்தன்று குறைந்தளவு ஒலி மாசு பெசன்ட்நகரிலும், அதிகளவு ஒலி மாசு திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டது.

    பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களிலும் பதிவான ஒலி மாசு, தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை விட மிக அதிக அளவானதாகும்.

    காற்று மாசுவை பொறுத்தமட்டில் அன்றைய தினம் பெசன்ட்நகரில் குறைந்தளவும், சவுகார்பேட்டையில் அதிகளவும் இருந்தது பதிவாகி இருந்தது.

    பெசன்ட்நகர், தியாகராயநகர் ஆகிய இடங்களில் மிக மோசமான அளவும், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 5 இடங்களில் அபாயகரமான அளவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

    தீபாவளி பண்டிகைக்கு முன்பு 17-ந்தேதி பெசன்ட்நகர் உள்ளிட்ட 7 இடங்களில் காற்று மாசு பதிவிடப்பட்டது. அதன்படி, தீபாவளி தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 7 இடங்களில் குறைந்தளவு காற்று மாசு பதிவான பெசன்ட்நகரில் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாகவும், அதிகளவு காற்று மாசு பதிவான சவுகார்பேட்டையில் 11 மடங்கு அதிகமாகவும் காற்று மாசு பதிவாகி இருந்தது.

    காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மை, காற்றின் மிகக்குறைந்த வேகம் ஆகிய வானிலை அமைப்பு பட்டாசுகளை வெடித்ததால் ஏற்பட்ட புகையை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாக அமையவில்லை. இதுவே, சென்னை மாநகர பகுதியில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகமானதற்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாநகரில் 550 டன் தீபாவளி குப்பை குவிந்தது.
    • அகற்றும் பணியில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

    திருச்சி:

    திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையால் சுமார்550 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

    திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த ஐந்து மண்டலங்களில் சுமார் 2.45 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள், கடைகள் ஏராளமாக உள்ளன.

    550 டன்

    இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் என்எஸ்பி ரோடு மற்றும் மலைக்கோட்டை, முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலி பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என இன்று மாநகரில் சுமார் 550டன் குப்பை குவிந்தது. இதனால் பெரிய கடை வீதி, என்எஸ்பி ரோடு மற்றும் சிங்காரத்தோப்பு பகுதிகளில் ஆங்காங்கே குப்பை குவியல்கள் மலை போல காட்சியளித்து வருகிறது.

    1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

    தீபாவளி மறுநாளான இன்று, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கடை வீதிகளில் வீசப்பட்டிருந்த குப்பைகளை மற்றும் பட்டாசு வெடித்த பேப்பர்களை கூட்டி சுத்தம் செய்து ஆங்காங்கே குவித்து வைக்கும் பணியில் 1200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகரில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து மாநகராட்சி குப்பை வாகனத்தில் குப்பைகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் குப்பை குவியல்கள் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    அதே நேரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகளை அள்ளும்போது பயன்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு கையுறை மற்றும் காலணிகள் வழங்கப்படாததால் தூய்மை பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    • தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
    • அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.

    தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேரக் கட்டுப்பாட்டை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக்கொண்டே இருந்தனர்.

    இது தொடர்பாகவும், பட்டாசு உரிமம் தொடர்பாகவும் சென்னை மாநகர் முழுவதும் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் நேரக் கட்டுப்பாட்டு அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 271 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் தீபாவளி அன்று ரோந்து சென்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 271 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இது தவிர அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாகவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 14 பட்டாசு விற்பனை யாளர்கள் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையால் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் இடைவிடாமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு 12 மணி வரையில் தமிழகம் முழுவதும் 284 இடங்களில் பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே பட்டாசு விபத்தில் தமிழகம் முழுவதும் 525 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 11 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். 25 பேர் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளில் 345 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையால் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பேரிடர் காலம் என்பதால் பாதிப்பு குறைவாக இருந்தது. தீக்காயம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே அரசின்நோக்கம், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 10 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.

    ஸ்டான்லி மருத்துவமனையில் திருவண்ணாமலை, பண்ருட்டி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்தும் சிகிச்சை பெற்றுள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்றுள்ளது.

    ஒருவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கண்பார்வை பறிபோகும் நிலையில் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?.
    • எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்?

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தீபாவளி திருநாளை உறவுகள், நட்போடு சேவை மனப்பான்மையுடன் எல்லோருக்கும் கொடுத்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆகியோர் வாழ்த்து கூறினர்.

    மொழிக்கடந்து மாநிலம், நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும். தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க. தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்?

    கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தை, நேரில் ஆய்வு செய்த காவல்துறை இயக்குநர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்.

    தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?.

    எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி தினமான நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் ரூ.255 கோடியே 60 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
    • பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குறைந்த ரக மதுபானங்கள் இல்லாததால் சாமான்ய மக்கள் நடுத்தர மதுபானத்தை வாங்கினார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை காலத்தில் மது விற்பனை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வந்ததால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

    கடந்த காலங்களை விட இந்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த வருடம் தான் பழைய உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

    எல்லா தொழில்களும் ஏற்றம் பெற்று தனிநபர் வருவாய் அதிகரித்து அனைத்து தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது போல் டாஸ்மாக் மது விற்பனையும் அதிகரித்துள்ளது.

    தீபாவளி தினமான நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் ரூ.255 கோடியே 60 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கம் போல் மதுரை மண்டலமே மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.54.87 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    அடுத்ததாக சேலம் மண்டலத்தில் ரூ.53.21 கோடியும், 3-வது இடத்தில் திருச்சி 52.30 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்துள்ளன. சென்னை மண்டலத்தில் ரூ.48.80 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.46.42 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

    23-ந்தேதி (ஞாயிற்று கிழமை) ரூ.258.79 கோடிக்கும், 22-ந்தேதி (சனிக்கிழமை) ரூ.205.42 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களின் மொத்த விற்பனை ரூ.719 கோடியே 81 லட்சத்திற்கு மேல் நடந்துள்ளன.

    மதுபானங்கள் விலை உயர்ந்த போதிலும் மக்கள் பண்டிகையையொட்டி அதிகளவு மதுவை பயன்படுத்தி உள்ளனர். உயர் ரக மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள் அதிகளவில் இந்த பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குறைந்த ரக மதுபானங்கள் இல்லாததால் சாமான்ய மக்கள் நடுத்தர மதுபானத்தை வாங்கினார்கள். இதுவே மதுபான விற்பனை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட இந்த வருடம் விற்பனை சுமார் 50 கோடிக்கு மேல் அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.

    • தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீபஒளி நாளன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம். இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

    தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகர் முழுவதும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • போலீசார் அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.

    தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேரக் கட்டுப்பாட்டை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டே இருந்தனர்.

    இது தொடர்பாக சென்னை மாநகர் முழுவதும் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் தீபாவளி அன்று ரோந்து சென்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 163 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர்.
    • இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர். கடந்த வாரம் 20-ந்தேதி முதல் வெளியூர் பயணத்தை தொடங்கினார்கள்.

    சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பஸ்கள் வழியாக 1½ லட்சம் பேர் சொந்த ஊர் சென்றனர். இதுதவிர ரெயில்கள் மூலம் 12 லட்சம் பேர் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.

    மேலும் கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணமாகி உள்ளனர். கடந்த 2 வருடமாக முடங்கி கிடந்த மக்கள் இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் சென்றனர். சிறப்பு ரெயில், பஸ் போன்றவற்றில் சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளியை நேற்று இரவு முடித்துவிட்டு இன்று பணிக்கு திரும்பக்கூடியவர்கள் பயணத்தை உடனடியாக மேற்கொண்டனர். இன்று அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுவதால் நேற்று இரவே பயணம் செய்தனர்.

    இதனால் சிறப்பு ரெயில், பஸ்கள் மூலம் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கோயம்பேடு பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நாளை திறக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது.

    பகல்நேரம் மற்றும் இரவு நேர பயணத்தை மேற்கொண்டு பணிகளை தொடர திட்டமிட்டு பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்கிறார்கள். அதன் அடிப்படையில் வெளியூர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,678 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,778 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை (26-ந்தேதி) 2,954 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சென்னைக்கு விடப்பட்டுள்ளது.

    இன்று பயணம் செய்வதற்காக 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கூலி வேலை, தனியார் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடியவர்கள் தங்களது பணியை இன்று முதல் தொடர்கின்றனர். அதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் விடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் நாளையும் சென்னை திரும்புவார்கள் என்ற அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தாம்பரம், பெருங்களத்தூர், கோயம்பேடு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து செயல்படுகின்றனர். ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி உள்ளன.

    சென்னை தவிர பிற நகரங்களும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 3,790 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது.
    • தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம்.

    சென்னிமலை:

    தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பட்டாசு தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். ஆனால் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கிராம மக்கள் பறவைகளுக்காக கடந்த 19 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

    சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்து பகுதியில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. இந்த பறவைகளை கண்டு களிப்பதற்காக ஈரோடு மட்டுமன்றி சேலம். கோவை, நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக வெள்ளோடு பறவை சரணாலயம் விளங்கி வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த பறவை சரணாலயத்தை சுற்றி வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன் கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர் கருக்கங்காடு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடிப்பதால் இங்கு உள்ள பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் இந்த பகுதி மக்கள் ஒன்று கூடி தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த 18 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 19-வது ஆண்டாக நேற்றும் இந்த கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

    இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

    பறவைகள் சரணாலயம் அருகில் உள்ளதால் தீபாவளி பண்டிகையை வெடி வெடிக்காமல் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி கடந்த 19 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகிறோம். இதற்கு எங்கள் பகுதி குழந்தைகள், இளைஞர்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். பறவை இனங்கள் எப்போதும் அமைதியை விரும்பும் இனமாகும். இதனால் நாங்கள் வெடி வெடிப்பதில்லை.

    தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்கள் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×