search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    2010-ம் ஆண்டு தலித் தந்தை - மகள் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ்கோர்ட்டு விடுவித்த 20 பேரை குற்றவாளி என அறிவித்த ஐகோர்ட் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #MirchpurDalitKilling #DelhiHC
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜாட் இனத்தவர்களுக்கும் தலித் இனத்தவர்களுக்கும் நடந்த மோதலில், மிர்ச்பூர் கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு ஜாட் பிரிவினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில், 70 வயது நபர் அவரது 16 வயது மாற்றுத்திறனாளி மகள் எரித்து கொல்லப்பட்டனர்.

    சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 103 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் 5 பேர் சிறுவர்கள். வழக்கு விசாரணையின் போதே ஒருவர் இறந்து விட்டார்.

    கடந்த 2011 செப்டம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி விசாரணை கோர்ட், மொத்தமுள்ள 97 பேரில் 15 பேரை தண்டித்தும், 82 பேரை விடுவித்தும் உத்தரவிட்டது. தண்டிக்கப்பட்ட 15 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட், திட்டமிட்டே தலித் குடியிருப்புகள் எரிக்கப்பட்டுள்ளது என கூறி 15 பேரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கீழ்கோர்ட் விடுவித்த 82 பேரில் 20 பேரை குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள் அதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.
    சாமியார் பேச்சை கேட்டு மாற்றுத்திறனாளி மகளை கொன்று தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த பெற்றோர் அடுத்த குழந்தை நன்றாக பிறக்கும் என காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.

    இதனை அடுத்து, சாமியார் ஒருவர் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என ஆனந்தாபாலிடம் கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை கேட்டு, 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் தனது மகளை ஆனந்தாபால், அவரது மனைவி கொன்றுள்ளனர்.

    இதனை அடுத்து, தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி மகளின் சடலத்தை புதைத்துள்ளனர். தற்போது, போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய உள்ளனர். 
    ஒரு மகன் இருக்கும் நிலையில், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து ஆண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தாயே கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிரம்மில் மூழ்கியபடி சடலமாக அக்குழந்தை கிடந்துள்ளது.

    இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் விசாரிக்கும் போது, ஏற்கனவே மூத்த குழந்தை ஆண் என்பதால், அடுத்த குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஆண் குழந்தை பிறந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, வேதிகாவை போலீசார் கைது செய்தனர்.
    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார்.

    சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

    போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

    இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த பரசுராம் என்பவரை சிறப்புப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GauriLankesh
    பெங்களூர்:

    பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரது வீட்டு சிசிடிவி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய புள்ளியான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

    புலனாய்வு குழுவினர் விசாரித்தபோது அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வலதுசாரி பங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர்.

    நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். 4 பேரும் இந்தி பேசும் வாலிபர்கள் என்றும் தெரிவித்தார். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மும்பை மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். பரசுராம் வாக்மரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவருக்கு கொலையில் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். #GauriLankeshmurder
    காங்கயம் அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக்கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் நாயக் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் நாயக்குடன் அவரது நண்பர்கள் 2 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். 3 பேருக்கும் குடிபழக்கம் இருந்துள்ளது. போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தோஷ் நாயக்கை அவரது நண்பர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறார்கள்.
    குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் திருடன் என எண்ணி தலித் தொழிலாளி தூணில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொன்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GujaratIsNotSafe4Dalit
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலை முகேஷ் வனியா என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் சேர்ந்து தேவையற்ற பொருட்களை எடுக்க சென்றனர். அப்போது அங்கிருந்த தொழிற்சாலை நிர்வாகிகள் அவர்களை தடுத்தனர். திருடர்கள் என எண்ணி முகேஷ் வனியாவை கயிற்றால் கட்டினர்.  அதனை தடுக்க முயன்ற முகேஷின் மனைவியையும் தாக்கினர்.

    இதையடுத்து அவர் தனது உறவினர்களை அழைத்துச் செல்ல சென்றுவிட்டார். அவர் வருவதற்குள் முகேஷை அவர்கள் இரும்புக்கம்பியால் கொடூரமாக அடித்தனர். அவர் வலியால் துடித்த போதும் நிறுத்தாமல் தாக்கினர். படுகாயமடைந்த முகேஷை அவர் மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மவானி இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல தலைவர்கள் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GujaratIsNotSafe4Dalit

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடும்பப்பிரச்சனை காரணமாக 16 வயது சிறுமியை வளர்ப்புத்தாய் கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #stepmother #Minorgirl
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷோகின். இவருக்கு ஷாமின் என்ற 16 வயது மகள் உள்ளார். ஷோகின் சிதாரா பேகம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
          
    இந்நிலையில், நேற்று ஷாம்னுக்கும், அவரது வளர்ப்புத்தாய் பேகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்துக்கொண்டனர். சண்டை முற்றிய நிலையில், பேகம் தனது வளர்ப்பு மகளை கொடூரமாக அடித்துக்கொன்றார். இதற்கு ஷோகினும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இக்கொலை குறித்து ஷாம்னியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேகம் மற்றும் அவரது கணவர் ஷோகின் இருவரையும் கைது செய்தனர். இக்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #stepmother #Minorgirl
    திருப்போரூரில், புதிதாக கட்டப்படும் வரும் அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் தொட்டிக்குள் காவலாளி பிணமாக மிதந்ததால், அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    நாவலூரை அடுத்த தாழம்பூரில் 28 மாடி கொண்ட புதிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 34) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியின் மேல் நாற்காலியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் குடிநீர் தொட்டிக்குள் சிவக்குமார் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு காவலாளி தாழம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி காவலாளி சர்க்கரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும் போது, ‘நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவக்குமார் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் அவரை மீட்ட போது இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    சிவக்குமார் காவல் பணியில் இருந்த போது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குடிநீர் தொட்டியில் தள்ளி விட்டனரா? என்பது குறித்து தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குழந்தை கடத்தல் பீதியில் பழவேற்காட்டில் மேலும் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகளை கடத்தி செல்வதற்காக வட மாநிலங்களில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் ஊடுருவி இருப்பதாக “வாட்ஸ்-அப்”பில் சமீபத்தில் தகவல் பரவியது.

    முதலில் இது வதந்தி என்று மக்கள் நினைத்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இந்த தகவல் பெரிய அளவில் பகிரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

    கோடை விடுமுறை காரணமாக சிறுவர்-சிறுமிகள் வீட்டை விட்டு வெளியில் வந்து விளையாடுவார்கள் என்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட மாநில கும்பல்கள் கண்காணித்து கடத்தலில் ஈடுபட உள்ளனர் என்று மக்கள் மத்தியில் பீதி பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இந்த பீதியின் தாக்கம் அதிக அளவு உள்ளது.

    இதனால் தமிழக கிராமங்களில் உள்ளவர்கள், வட மாநில மக்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். வட மாநிலங்களைச் சேர்ந்த பிச்சை எடுப்பவர்கள், மன நோயாளிகள், திருநங்கைகள் மீது மக்களின் பார்வை கோபத்துடன் திரும்பியுள்ளது.

    பீதி, சந்தேகம் காரணமாக ஊருக்குள் வரும் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் மீது கடந்த சில தினங்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் வட மாநிலத்தவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்தன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    ஆனால் குழந்தை கடத்தல் பீதிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட பரிதாபம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட சென்றபோது தம்புகொட்டான்பாறை என்ற ஊரில் வழி கேட்ட போது அந்த ஊர் மக்களால் “குழந்தையை கடத்த வந்திருப்பவர்” என்று தவறாகக் கருதப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

    உறவினர்களுடன் கோவிலுக்கு சென்ற அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் நெஞ்சை பதறச் செய்யும் வகையில் உள்ளது. வாட்ஸ்அப் பீதியை உண்மை என நினைத்து ஒரு ஊரே காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டது தமிழக மக்களிடம் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ருக்மணி அம்மாள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓயும் முன்பே நேற்று குழந்தையை கடத்த வந்தவர் என்ற பீதி காரணமாக மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-


    பழவேற்காடு பகுதிக்கு நேற்று காலை அடையாளம் தெரியாத ஒரு நபர் வந்தார். அவர் பல்வேறு தெருக்களில் சுற்றித் திரிந்தார். இதனால் அவர் குழந்தையை கடத்திச் செல்ல வந்து இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அந்த மர்ம நபரைப் பிடித்து மக்கள் விசாரித்தனர். அதற்கு அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. சரமாரியாக அவரை அடித்து உதைத்தனர்.

    ஏற்கனவே பலவீனமாகக் காணப்பட்ட அந்த நபர் அடி தாங்காமல் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவரது உடலை கயிற்றில் கட்டி பழவேற்காடு ஏரி குறுக்கே கட்டப்பட்ட மேம்பால சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

    இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. அவர்கள் பழவேற்காடு ஏரி பாலம் பகுதிக்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர் கடந்த சில தினங்களாக பழவேற்காடு பகுதியில் சுற்றித் திரிந்ததாக தெரிய வந்தது.

    மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சிலர் கூறினார்கள். அவர் சரியான பதிலை சொல்லாததால்தான் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பாலைவனம் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    பழவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் பொன்னேரிக்குள் சில வட மாநில குழந்தை கடத்தல்காரர்கள் புகுந்து இருப்பதாக பீதி பரவியது. பொன்னேரியில் சில குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் பதுங்கி இருப்பதாகவும் வதந்தி பரவியது. இது பொன்னேரியில் உள்ளவர்களிடம் பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது.

    பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள தேவமாநகர் வாணியங்குளத்தில் அப்பகுதி மக்கள் புதர் மறைவில் குழந்தை கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக பரவிய தகவலால் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். குளத்தினுள் இறங்கிய இளைஞர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போக்கஸ் லைட் கட்டி தேடினார்கள். மேலும் குளத்தை சுற்றிலும் பெட்ரோல் ஊற்றி செடிகள் புதருக்கு தீ வைத்து தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து கிராமத்திற்குள் வரும் புதியவர்களை அடித்து உதைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

    இதையடுத்து குழந்தை கடத்தல் பீதி பரவியுள்ள மாவட்டங்களில் மக்கள் மத்தியில் வட மாநிலத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வட மாநில மக்கள் ஊருக்குள் வந்தால் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கும்படியும் போலீசார் வாகனங்களில் ஒலிபெருக்கி கட்டி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    என்றாலும் சமூக வலைத் தளங்களில் பரவியுள்ள குழந்தை கடத்தல் பீதி இன்னும் ஓயவில்லை.
    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×