search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் தராது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #MegathathuDam #Kumaraswamy #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

    காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின் கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார்.



    இதைத் தொடர்ந்து மேக தாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

    மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதிக்கு தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 9.6.2015 அன்று உமா பாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கி யிருந்தார்.

    ‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும்.

    இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #MegathathuDam #Kumaraswamy #TN #Ramadoss
    தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்தி தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதுகின்றனர்.
    சென்னை:

    சமீப காலமாக தமிழகத்தில் பிறமொழிகளை படிக்கும் ஆர்வம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போதே பிற மொழி பாடங்கள் இருக்கிறதா? என்பதை பார்த்தே தங்களின் குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பதை காண முடிகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்தி தேர்வுகளை நடத்தி வரும் இந்தி பிரசார சபை, ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, ஆகஸ்டு) இந்தி தேர்வுகளை நடத்துகிறது. அடிப்படை தேர்வாக பிராத்மிக் முதல் பிரவீண் வரை தேர்வுகளை நடத்துகிறது. இந்த மாதம், 5, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தி தேர்வை சுமார் 1¾ லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் அடிப்படை தேர்வான பிராத்மிக் தேர்வை மட்டும் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

    5-ந்தேதி பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா ஆகிய தேர்வுகள் நடக்க உள்ளது. 11 மற்றும் 12-ந்தேதிகளில் பிரவேஷிகா (3 தாள்), விஷாரத் பூர்வார்த் (3 தாள்), விஷாரத் உத்தரார்த் மற்றும் பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தரார்த் ஆகிய தேர்வுகள் நடக்கிறது.

    மேலும் விஷாரத் உத்தரார்த்துக்கான வாய்மொழி தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 378 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 158 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தி தேர்வு குறித்து இந்தி பிரசார சபை பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜ் கூறும்போது, ‘தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படும் தேர்வில் மட்டும் சுமார் 1¾ லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்’ என்றார். #tamilnews
    தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை விரைவில் கிடைக்கும் என்று நாடாளு மன்றத்தில் மத்திய மந்திரி அல்போன்ஸ் தெரிவித்தார். #KJAlphons #HelicopterTourism #Tamilnadu
    புதுடெல்லி:

    சுற்றுலா பயணிகளை ஊக்கும்விக்கும் வகையில் மத்திய அரசு ‘பவான் ஹன்ஸ் லிமிடெட்’ என்னும் ஹெலிகாப்டர் சேவையை நடத்தி வருகிறது. இத்தகைய சேவை ஏற்கனவே இமாசலபிரதேசம், சிக்கிம், டையு மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் மற்றும் அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    சுற்றுலாப் பயணிகளுக்கான இந்த ஹெலிகாப்டர் சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் இச்சேவையை தொடங் குவது குறித்த சாத்தியக் கூறு ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபற்றி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கூறியதாவது:-

    மத்திய அரசு நிறுவனமான பவான் ஹன்ஸ் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொண்டது.

    சுற்றுலா பயணிகளுக்கான இந்த சேவையை குறிப்பாக மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடங்குவது குறித்த வாய்ப்புகள் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முதல் கட்ட அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்துக்கு விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KJAlphons #HelicopterTourism #Tamilnadu #tamilnews 
    தமிழ்நாடு முழுவதும் சொத்துவரியை 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்தது. வீடுகளுக்கு 50 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

    குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



    தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.

    தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.

    வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி ஜெயவர்தன், தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முறையாக நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கபோவதில்லை எனவும், மத்திய அரசுடன் சுமூகபோக்கையே கடைபிடிக்கப்போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், தமிழகத்தின் குறைகளை எடுத்துரைத்தார். அதன்படி, தமிழகத்துக்கு  2015-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனவும் தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.



    மேலும், நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என குறிப்பிட்ட அ.தி.மு.க எம்.பி ஜெயவர்தன், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பையும் பதிவு செய்தார். #NoConfidenceMotion
    தமிழக பா.ஜ.க வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி வரும் அமித் ஷா, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். #Amit sha
    சென்னை:

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார்.

    சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசி வருகிறார்.

    வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர்.

    தனது பேச்சின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டிய அமித் ஷா விருந்தினருக்காக யார் காத்திருக்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர். எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்.

    11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி.



    மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழத்துக்கு ஸ்மார் சிட்டி திட்டத்துக்கு 820 கோடி ரூபாயும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1500 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்கியுள்ளது. நீர்ப்பாசன திட்டம், சென்னை மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி அளித்துள்ளது.

    வறட்சிக்காக 1750 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. வர்தா புயல் நிவாரண நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளது.

    மத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக எந்த அரசும் செய்யாத சாதனையை பா.ஜ.க செய்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்து வருகிறார். #Amit sha
    மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. #EdappadiPalaniswami #TNassembly
    சென்னை:

    மத்திய அரசு சமீபத்தில் புதிதாக அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வந்து மந்திரி சபையின் ஒப்புதலை பெற்றது.

    இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க கோரி சட்ட சபையில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு, 2010-ம் ஆண்டு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தயாரித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டது. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் அண்டை மாநிலத்தில் இருக்கும் போது அதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும் என்ற காரணத்தால், அந்த வரைவு மசோதாவில் இடம்பெற்ற தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு, அவைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என அம்மா, 29.7.2011 மற்றும் 17.3.2012 நாளிட்ட கடிதங்களின் வாயிலாக பிரதமரை கேட்டுக் கொண்டார்.

    எனினும், இந்த வரைவு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் கருத்து வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அத்தருணத்தில், 3.8.2011 அன்று புதுடில்லியில் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் வேணுகோபாலும், நமது பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளும் நீர்வள ஆதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான கோகாய்யை நேரில் சந்தித்து அம்மா குறிப்பிட்ட மறுப்புக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    அம்மாவின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, 2010-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட்டது.

    இருப்பினும், அணை பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு சட்டத்தை இயற்ற, மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒரு வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை தமிழ்நாட்டின் கருத்து கோரி அனுப்பி வைத்தது.

    இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்கள் கண்டறியப்பட்டது.

    அதில் குறிப்பாக, ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நதியின் குறுக்கே அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அந்தந்த மாநிலமே கட்டிக் கொள்வது குறித்து அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அந்த மாநிலத்திற்கே சொந்தமானது என்றும், அவை அம்மாநிலங்களாலேயே இயக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வரும் என்றும், இந்த வரைவு மசோதாவில் தேசிய அணை பாதுகாப்பு நிறுவனத்திற்கு மாநிலங்களிலுள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் அதிகாரங்களை அளிக்க உத்தேசித்திருப்பது, நடைமுறைக்கு உகந்ததாக இருக்குமா என தெரிய வில்லை.

    மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் ஒரு மாநிலம் வேறொரு மாநிலத்தில் கட்டிய அணைகள், அந்த அணையை கட்டிய மாநிலத்திற்கு சொந்தமானதாகும் மற்றும் அதனை இயக்குகின்ற மற்றும் பராமரிக்கக் கூடிய பொறுப்புகள் அம்மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும் என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் அணைகள், அண்டை மாநிலமான கேரளாவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களினால்  தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டும், இயக்கப்பட்டும் மற்றும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய அணைகள் பற்றிய விவரம் குறித்து இந்த வரைவு மசோதாவில் இடம் பெறவில்லை.

    மத்திய அரசின் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைவு மசோதாவினால், இந்த 4 அணைகளை பராமரிப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

    உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணை பாதுகாப்புக் குழு ஆகிய அமைப்புகளினால் அணைகளை பராமரிப்பதில் ஏற்படும் இடையூறுகளில் தீர்வு காண இயலாது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் அணை பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இவை, மத்திய நீர்வளக் குழுமம் அவ்வப்போது அளித்துவரும் வழிகாட்டி நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகின்றன.

    மேலும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அணை பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அம்மா 11.9.2016 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில், இவ்வரைவு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கீடு செய்கிறது என்றும், மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, அண்டை மாநிலத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்றும், எனவே, இந்த மசோதா அவசரகதியில் பரிசீலிக்கப்பட கூடாது எனவும், அனைத்து அம்சங்களும் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 2016-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தமிழ்நாடு அரசு இம்மசோதாவிற்கு தன்னுடைய எதிர்ப்பினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    2018-ம் ஆண்டைய அணை பாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

    இந்த வரைவு மசோதாவின் மீது மத்திய அரசு தமிழ்நாட்டின் கருத்தை கோரவில்லை. இந்த வரைவு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதிக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாலும், குறிப்பாக, அண்டை மாநிலத்தில், தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ள அணைகளான முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப் பள்ளம் ஆகிய அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கு பல்வேறு பிரச்சினைகள் இவ்வரைவு மசோதாவால் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும், அது வரையில் மத்திய அமைச்சரவை தற்பொழுது எடுத்துள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், நான் 15.6.2018 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.

    27.2.2006 மற்றும் 7.5.2014 ஆகிய நாளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு, அத்தீர்ப்புகளின்படி 21.11.2014 மற்றும் 7.12.2015 ஆகிய நாட்களில் முதற்கட்டமாக 142 அடி வரையில் அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டது.

    மேலும், மத்திய நீர் வளக் குழுமம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, தமிழ்நாடு அரசு, முல்லைப்பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடி வரையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இதன்பொருட்டு, தமிழ் நாடு அரசு செய்து முடிக்க வேண்டிய மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளைச் செய்வதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காமல், தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசு இவ்விடையூறுகளை நீக்கி, பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசு உத்தேசித்துள்ள சட்டத்தை நிறைவேற்றுமானால், அணை பாதுகாப்பு என்ற போர்வையில், முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளைப் பராமரிப்பதில் தமிழ்நாட்டிற்கு இடையூறுகள் ஏற்படும்.

    மத்திய அமைச்சரவை 13.6.2018 அன்று இசைவு அளித்துள்ள, 2018-ம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்கவும், மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றலாம் எனவும், அது வரையில் மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற உத்தேசித்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கீழ்க்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    “மத்திய அரசு இயற்ற உத்தேசித்துள்ள 2018 ஆம் ஆண்டைய வரைவு அணை பாதுகாப்பு மசோதாவில், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளதாலும், குறிப்பாக, தமிழ்நாடு அரசால் அண்டை மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதாலும், மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே, மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், அது வரையில், மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இம்மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

    இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி தங்கள் வாயிலாக இம்மாமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த தீர்மானத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

    இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். #EdappadiPalaniswami #TNassembly
    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். #GutkhaScam
    சென்னை:

    குட்கா போன்ற பொருட்களால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி தங்குதடையின்றி குட்கா அனைத்து இடங்களிலும் விற்கப்பட்டு வருகிறது.

    இது தொர்பாக நடந்த விசாரணையில் இந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.



    இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான விசாரணையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று தமிழக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார் என்றும், அவருக்கு குடோன் அமைக்க அனுமதி அளித்த மற்றும் அந்த குடோனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார்? என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GutkhaScam
    டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. #TNLorryOwnersstrike

    சென்னை:

    டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 18-ம் தேதி முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் அறிவித்துள்ளார். வருகிற 27-ம் தேதி மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய போக்குவரத்துத்துறை இணைச்செயலாளர் உத்தரவாதம் அளித்ததையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TNLorryOwnersstrike
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்த இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #AIIMS
    மதுரை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த 14-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இதனை அடுத்து, விசாரணையில் இருந்த மேற்கண்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 
    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தெரிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரத்துறை மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #AIMS
    மதுரை:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 
    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டுள்ள மேலும் 7 சிலைகள் மீட்கப்பட இருக்கிறது. இந்த சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கோவில்களில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 3 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மேலும் 7 சாமி சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சிலைகளை மீட்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் சென்னை கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன்கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

    சுமார் 1 மணி நேரம் இந்தக்கூட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் 7 சிலைகள், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆவணங்களாக இந்தக்கூட்டத்தில் எடுத்து வைத்தார்.

    ஆவணங்களை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் சிலைகளை திருப்பிக்கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

    விரைவில் 7 சிலைகளையும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 7 சிலைகள் பற்றிய விவரங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பனந்தாள், சீர்காழி, மயிலாடுதுறை

    1. குழந்தை வடிவிலான நின்ற நிலையில் இருக்கும் சம்பந்தர் பஞ்சலோகசிலை - சீர்காழி சாயவனம் சிவன் கோவிலில் உள்ள சிலையாகும். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.75 லட்சம் மதிப்புடையது.

    2. நடனமாடும் சம்பந்தர் சிலை - ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.4.59 கோடி மதிப்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இருக்கும் மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது.

    3. துவாரபாலகர் கல்சிலைகள் -2, திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர், மூன்றீஸ்வர உடையார் சிவன்கோவிலில் திருடப்பட்ட சிலைகள் ஆகும். 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலைகளின் மதிப்பு ரூ.4.98 கோடியாகும்.

    4. நந்தி கல்சிலை - 1,100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டிருந்தது.

    5. ஆறுமுகம் கல்சிலை - தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில் இருக்கும் நாகநாத சுவாமி கோவிலில் திருடப்பட்ட சிலையாகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிலை ரூ.1.32 கோடி மதிப்புடையதாகும்.

    6. பத்ரகாளி சிலை - 900 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடி கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்டிருந்தது.

    இந்த சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஸ் சந்திர கபூர், மும்பையை சேர்ந்த வல்லப பிரகாஷ், ஆதித்த பிரகாஷ், சஞ்சீவி அசோகன், தஞ்சாவூர் கரந்தட்டான்குடியைச் சேர்ந்த ஊமைத்துரை, அண்ணாதுரை, லட்சுமி நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் மும்பையைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிசாமி ஆகியோர் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.

    ×