search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை திண்டுக்கல் சாலையில் கியாஸ் ஏஜென்சி கடை  நடத்தி வருபவர் ஏகாம்பரம். இவர் நேற்று மாலை வழக்கம் போல்  ஏஜென்சியை பூட்டி சென்றார். பின்னர் இன்று காலையில் கியாஸ்  ஏஜென் சியை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு  அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த  ரூ.5 லட்சம் ரொக்கபணம், கம்யூட்டர் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. 

    அங்கிருந்து  சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந் ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி விடபட்டுள்ளதால் அதில் கொள்ளை நடந்த சம்பவம் எதுவும் பதிவாக வில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வையம்பட்டியில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.    

    மணப்பாறை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தினால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 40). இவரது மனைவி அடைக்காயி. பழனியாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அடைக்காயி, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பழனியாண்டியின் மனைவி அடைக்காயி, குழந்தைகளுடன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கீரனூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் திருமணம் முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அடைக்காயி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த 7½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் அடைக்காயி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
    தண்டராம்பட்டு அருகே நேற்று இரவு வீட்டில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் அஜித்குமார் (வயது 21). திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் படித்து வந்தார்.

    இந்நிலையில் அஜித்குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டல் தொழிலாளி காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது45). இவர் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் உள்ள கரடிக்கல் பகுதியில் செயல்படும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற பெரியகருப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனிடையே ஓட்டல் அருகே பெரியகருப்பன் தலையில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அவரின் மகள் சந்தியாவுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிப் போன அவர் சம்பவ இடம் வந்து தந்தையை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெரியகருப்பன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகருப்பனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

    நெல்லை அருகே 2 வாலிபர்கள் மாயமானது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கானார்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜா (வயது27), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சூரிய சரோஜினி (25). கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜா, வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. இதைத்தொடர்ந்து சூரிய சரோஜினி மானூர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜாவை தேடி வருகின்றனர். 

    நெல்லை அருகே உள்ள தென்பத்து சித்தன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதி பாளையில் உள்ள அண்ணா நகருக்கு அவரது சகோதரர் ரவி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த பார்த்திபன் திடீரென்று மாயமாகி விட்டார். வீட்டிற்கும் செல்ல வில்லை. 

    இது தொடர்பாக அவரது தந்தை பாலு, பாளை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
    கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்ற ஜீம் ராமலிங்கம் (வயது 42). முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர். இவர் திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரீங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருபுவனத்தில் உள்ள தனது கடையை பூட்டி விட்டு ராமலிங்கம் தனது மகனுடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் அவர்கள் சென்ற போது திடீரென அவரை 2 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், ராமலிங்கத்தை, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவரது மகன் தடுத்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் கும்பல் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இறந்தார்.

    இதற்கிடையே ராமலிங்கம் கொலையுண்ட தகவல் திருபுவனம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் திரண்டனர்.

    பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலையுண்ட சம்பவம் பற்றி திருவிடை மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், அரியலூர் மாவட்ட சூப்பி ரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எஸ்.பிக்கள் அன்பழகன், இளங்கோவன் தலைமையில் டி.எல்.பி.க்கள் கும்பகோணம் கமலக் கண்ணன், திருவிடைமருதூர் ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருவிடை மருதூர் மற்றும் திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராமலிங்கத்தின் உறவினர்கள் இன்று காலை திருவிடை மருதூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் போலீசாரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ராமலிங்கத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் வாலிபர்கள் சிலருக்கும் நேற்று காலை மதம் மாற்றப்படுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராமலிங்கம் அவர்களிடம் ஆவேசமாக பேசி தகராறு செய்ததாக தெரிகிறது.

    இந்த பிரச்சினை காரணமாக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் ராமலிங்கம் மீது திருவிடைமருதூர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சில வழக்குகளும் உள்ளது. ரவுடி போல் திரிந்த ராமலிங்கத்தை வேறு யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட ராமலிங்கத்துக்கு சித்ரா என்ற மனைவியும், சாம்சந்தர், மலர் மன்னன், இளவரசன் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருபுவனம் பகுதியில் இன்று காலையில் கடைகள் அடைக்கப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    முன்னாள் பா.ம.க. செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர், திரு புவனம் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள இவர்களது தோட்டத்தில் மாரியம்மாள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து உடனடியாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு பரமேஸ்வரன் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பரமேஸ்வரன் தன்னுடைய மனைவியை தனது சகோதரர் சொத்துப் பிரச்சினை காரணமாக கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.

    போலீஸ் விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறில் பரமேஸ்வரனே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தரமணியில் மாமூல் கேட்டு சாலையோர டிபன் கடைகாரர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தரமணியில் சாலையோர டிபன் கடை நடத்தி வருபவர் செல்லத்துரை. இவரிடம் அ.தி.மு.க. வட்ட அவைத்தலைவர் எமநாதன் என்பவர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.15 ஆயிரத்தை செல்லத்துரை கொடுத்தார்.

    இந்த நிலையில் எமநாதன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் மாமூல் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். ஆனால் செல்லத்துரை பணம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த எமநாதன் தனது ஆதரவாளர்களுடன் செல்லத்துரையின் டிபன் கடையை நொறுக்கி சூறையாடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து செல்லத்துரை கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமைந்தகரை பிபி கார்டன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் பிரதாப் சந்திரன். அவர் நேற்று இரவு கடையை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வினித்குமார், பிரசாந்த் ஆகிய இருவரும் பிரதாப் சந்திரனிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டினர்.

    இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிரதாப்சந்திரன், அவரது மனைவி பிரியங்கா, கடை ஊழியர் மகேஷ் ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் கடைக்கு வந்த வடமாநில வாலிபர் ஒரு வருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    கோவையில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    நாமக்கல்லை சேர்ந்தவர் ஜானகி ராமன். இவரது மகன் அரிஹரன் (21). இவர் கோவை கோவில் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புக்கு சென்று வந்தார்.

    இன்று காலை மாணவர் அரிஹரன் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மாணவர் அரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினையா? காதல் விவகாரமா? கல்லூரியில் தொந்தரவா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெடிமேட் கடை மற்றும் ஆட்டோமொபைல் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பரமக்குடி:

    பரமக்குடி எல்லைப்புற காந்தி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், மணிகண்டன் வழக்கம் போல் கடையை அடைத்துச் சென்றார்.

    நேற்று விடுமுறை தினம் முடிந்து இன்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கே இருந்த சட்டை, பேண்ட் போன்றவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மணிநகர் பகுதியில் முதுகுளத்தூர் பொதிகுளத்தைச் சேர்ந்த அசோக்ராஜா என்பவர் நடத்தி வரும் ஆட்டோமொபைல் கடைக்குள்ளும் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி.டி. பிளேயர், கார்களில் பொருத்தக்கூடிய மிரர் டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்தும் பரமக்குடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தா.பேட்டை அருகே விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் ஜவுளிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த இந்துமதியை (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 மாத பெண்குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி தனது தந்தை வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    மேலும் இந்து மதிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    சேலம் அம்மாப்பேட்டை நர்சிங் மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாறன் (வயது 53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

    இவர்களது 4-வது மகள் சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் சாந்தி தனது 2 மகள்களுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி சங்கவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு சாந்தி எடுத்து சென்றார். அப்போது உறவினர்களிடம் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.

    ஆனால் அதனை நம்பாத சாந்தியின் கணவரின் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்ட போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவரே தூக்கில் தொங்கினாரா? என்பது தெரியவரும் என்றும் ஏற்கனவே 2 முறை மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சாந்தியின் கணவரின் உறவினர்கள் சாந்தி மகளை கொன்று விட்டு நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நீடித்து வருகிறது.

    ×