search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சிறுகுறு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சென்னியங்கிரி, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தனிஅலுவலர் இல்லை என்று எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தனிஅலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் பயிரிட ஜீன் மாத இறுதிக்குள் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உழவு எந்திரங்கள் போன்ற விவசாய கருவிகள் வழங்கவேண்டும்.

    பொதுமக்களின் சேமிப்பு கணக்கின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
    தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாக தெரிவித்தார். #KamalHassan
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி, இந்திய விவசாய கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆர்.வி.கிரி உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் நேற்று சந்தித்தனர்.

    அப்போது காவிரி விவகாரத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசியதற்கு அனைவரும் நன்றி தெரிவித்து வீரவாள், ஏர் கலப்பை, மரக்கன்று ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள்.

    விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வழங்கிய வாள், இனி அறுவடைக்கு பயன்படும் என்றும், சமாதானம் தான் என் எண்ணம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    அதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்காக மேளம் தட்டி மழை பொழிகிறது. இந்த மழை எனக்கு புதிது அல்ல. கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்க சென்றபோது மழை பெய்தது. முதல்-மந்திரியிடம் உங்களிடம் கொடுப்பதற்கு நீர் இயற்கை தந்திருக்கிறது என்று எடுத்து சொன்னேன். நல்லதொரு மனநிலையில் இருக்கிறார்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    என் குடும்பத்தார் (விவசாயிகள்) போட்ட சோறு என் உடம்பிலும் இருக்கிறது. அவர்கள் உடம்பில் இருப்பதை விடவும் கொஞ்சம் அதிகமாக என் உடம்பில் இருக்கிறது. அவர்கள் வேலை செய்து குறைவாக சாப்பிட்டுவிட்டு, எனக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நன்றி கடன் செய்வதற்காகத்தான் நான் கர்நாடகம் சென்றேன். நான் சென்றதற்கான காரணம் அது ஒன்றே போதுமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத் தொடர்ந்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    ஆப்பு வைக்க இடம் இருக்காது

    கேள்வி:- ரஜினியும், கமலும் சேர்ந்து கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற அச்சம் எழுவதாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளாரே?

    பதில்:- இதில் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும், யாருடனும் சேர்ந்து தமிழர்களை வஞ்சிக்கமாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து ஆப்பு வைப்பதற்கு இடம் இருக்காது.

    கேள்வி:- கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தது வேடிக்கையாக இருக்கிறது என்று சரத்குமார் கூறி இருக்கிறாரே?

    பதில்:- இதற்கு தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்களா? அப்போது காந்தி யார்? எந்த கட்சி? எந்த மாநில முதல்-மந்திரி? ஆனா எல்லா விஷயத்துக்கும் முந்திரிகொட்டை போல போகும் தலைவர் இருந்தாரே... அவரை யார் என்று கேட்டார்களா.. கேட்கமாட்டாங்க.. அதுபோல யார் வேண்டுமானாலும் போகலாம். அதுக்கு வயது கிடையாது.

    கேள்வி:- விவசாயிகளுக்கு தொடர்ந்து நீங்கள் குரல் கொடுப்பீர்களா?

    பதில்:- கண்டிப்பாக குரல் கொடுப்பேன். அதற்கான முதல் கட்டம் தான் இது. ஏற்கனவே நாங்கள் போட்ட கூட்டத்தின்படி தீர்ப்பை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் ஒரு புதிய நகர்வாகத்தான் இதனை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:- காலா படம் திரையிட கர்நாடகாவில் தடை இருக்கிறதே? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- விஸ்வரூபம்-2 படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காலாவுக்கும் தடை என்று அறிவித்துவிட்டார்கள். காவிரி பிரச்சினையை எப்படி விவசாயிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமோ, அதுபோல பட பிரச்சினையை வியாபாரிகள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இதில் தொழில் விரோதம் எதுவும் இல்லை. ரஜினிகாந்தின் படத்தை பார்க்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் கமல்ஹாசன் தனது முதல் அடியை விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும் என்ற கடமையை நினைத்து செய்து இருக்கிறார். கர்நாடகத்துக்கு சென்று தண்ணீர் கேட்டார். அதை குற்றம், துரோகம் என்று சொல்கிறார்கள். துரோகம் செய்தவர்களே துரோகம் என்று சொல்கிறார்கள். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், தலைக்கு மேல் இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம்’ என்றார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், ‘விவசாயிகள் நிலை நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது போன்றது. விவசாயிகள் தத்தளிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவுக்கு சென்று முதல்-மந்திரியை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் எங்களை காப்பாற்ற வந்தாலும் அதனை வரவேற்கிறோம். விவசாயிகளை காப்பாற்றவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். இதில் அரசியல் பேசுவது நியாயம் இல்லை. யாரிடமும் யார் வேண்டுமானாலும் பேசலாம். எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்’ என்றார். #KamalHassan
    தருமபுரியில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக புறப்பட்ட 25 விவசாயிகளை வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.
    அரூர்:

    சேலம்-சென்னை வரை 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்க தருமபுரி மாவட்டத்தில் 10 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனை கண்டித்து 10 கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டனர்.

    இதற்காக கடத்தூர், அரூர், தீர்த்தமலை, சாமியாபுரம், மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, கடத்தூர்-தருமபுரி மெயின்ரோடு ஆகிய 8 இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆங்காங்கே நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    அரூரில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் அறிவித்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், விளை பொருட்களை விற்காவிட்டால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என அரியானா முதல்வர் தெரிவித்துள்ளார். #farmersstrike #kisanakvash
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளின் அவல நிலையை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் அம்மாநில விவசாயிகள் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

    இதனால் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை அரியானா மாநில விவசாயிகள் கையில் எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக கிசான் அக்வாஷ் என்ற பெயரில் அரியானா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்கப்போவதில்லை என அறிவித்தனர்.

    மேலும் அரியானா மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும், போராட்டத்தின் இறுதி நாளான ஜூலை 10-ம் நாள் பேரணி நடத்தப்படும் எனவும் அம்மாநில விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு இங்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், தேவையில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரித்தார்.

    மேலும், விளை பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பதால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்றும் முதல்மந்திரி மனோகர் லால் கத்தாரி கூறியுள்ளார். மாநில முதல் மந்திரியின் இந்த சர்ச்சை கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 800 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #farmersstrike #kisanakvash
    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash
    சண்டிகர்:

    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash

    அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், விவசாயிகளின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், ராஷ்ட்ரிய கிசான் மஹாசங் என்ற விவசாய அமைப்பானது கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்) என்ற பெயரில் புதிய போராட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பேசிய அரியானா மாநிலத்தின் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங், அரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. மேலும், 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும், இறுதி நாளான ஜூன் 10-ம் தேதி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

    பஞ்சாபில் ஏற்கனவே கடைகளுக்கு கொடுத்த காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் திரும்பபெற்றுக்கொண்டனர். #kisanavkash 
    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி போராட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். #Cauveryissue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தினர்.

    இன்று காலை 10 மணியளவில் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது விவசாயிகள் "வேண்டும்.. வேண்டும்.. காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்..." என்று கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை அங்கு நின்ற போலீசார், தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்துக்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அங்கு கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் பாக்கி தொகை ரூ.160 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதேபோல் 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

    டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வார வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே நாகை புதிய கடற்கரைக்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்தினர்.

    அப்போது கடலில் இறங்கிய விவசாயிகள் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. மத்திய- மாநில அரசுகளே விவசாயிகளை வஞ்சிக்காதே...’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #Cauveryissue #TNFarmers #Protest
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நாளை விவசாயிகள் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். #CauveryIssue #TNFarmers #Protest
    கீழ்வேளூர்:

    நாகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியால் கடைமடை பகுதியில் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மன உளைச்சலில் உயிரிழந்தனர்.

    2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.160 கோடிக்கு மேல் பாக்கிஉள்ளது. காவிரி நீர் கடைமடை வரை வந்து சேராததால் கதிர் வரும் பருவத்தில் பயிர்கள் கருகியது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டது. 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.


    டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

    எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) நாகையில் கடலில் மூழ்கி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதன்படி நாளை நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கிறோம். பின்னர் அங்கிருந்து நாகை கடலுக்கு சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #TNFarmers #Protest
    விவசாயிகளின் நலன் பேணும் அரசாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து விளங்கும் என்று திருமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalanisamy
    மதுரை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.

    கோவில்பட்டி செல்லும் வழியில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சரவணன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    ஜெயலலிதா பேரவை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள்-பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மறைந்த முதல்- அமைச்சர் அம்மா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாகி வருகிறது.

    கல்வித்துறையில் அம்மா எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. எதையும் கேட்டு வாங்கி விடலாம். ஆனால் கல்வியை கேட்டு வாங்கி விட முடியாது. அந்தந்த பருவங்களில் அதை பெறுவதுதான் கல்வி. பருவங்கள் தவறி விட்டால் உரிய கல்வியை பெற முடியாது.

    ஏழை மாணவ, மாணவிகளின் நலனை பேணும் வகையில் அம்மா இலவச மடிக்கணினி மற்றும் சீரூடைகள் வழங்கினார்.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் 36 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிசையில் இருக்கும் மாணவர்கள் கூட உலக அறிவியலை பெற முடிகிறது.

    விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவும் அம்மாவின் அரசு திகழ்ந்து விளங்குகிறது. கிராமப்புற விவசாயிகள் தான் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

    நானும் ஒரு விவசாயி என்ற முறையில் விவசாயிகளின் உழைப்பை நன்றாக அறிவேன். எனவே இந்த அரசு விவசாயிகளின் நலன் பேணும் அரசாக தொடர்ந்து விளங்கும்.

    அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalanisamy
    ×