search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99754"

    செங்கத்தில் அரசுக்கு எதிராக போராடியதாக 14 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. #greenwayroad
    செங்கம்:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி செங்கம் மேல்வணக்கம்பாடி காந்திநகரை சேர்ந்த சேகர் என்ற விவசாயி தன்னுடைய நிலம் கைப்பற்றப்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், செங்கம் தாலுகாவிற்குட்பட்ட நீப்பந்துறை முதல் நயம்பாடி வரை 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகருக்கு அஞ்சலி செலுத்தி பசுமை சாலை பணியை நிறுத்தக்கோரி ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது.

    இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கம் தாலுகா முறையாறு பகுதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி (55), மண்மலை இளங்கோ (45), அத்திப்பாடி செல்வராஜ் (50) மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் உள்பட மொத்தம் 14 விவசாயிகளை வீடு புகுந்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

    மேலும் கரியமங்கலம், நீப்பந்துறை, கட்டமடுவு உள்பட பல்வேறு கிராமங்களிலும் போலீசார் நள்ளிரவு முதல் விடிய, விடிய விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டி கைது செய்வதாக கூறி தொந்தரவு செய்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் போலீசாருக்கு பயந்து ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாகினர்.

    கைது செய்யப்பட்ட விவசாயிகளில் செல்வராஜ் என்பவர் தர்மபுரி மாவட்டம் ஆத்திப்பாடியை சேர்ந்தவர். இவருடைய நிலம், செங்கம் பகுதியில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 14 பேர் மீதும் அரசுக்கு எதிராக போராடியதாக 151-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். செங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்ட 14 விவசாயிகளையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் 8 வழிச்சாலைக்கு எதிராக நடைப்பயணம், பேரணி, போராட்டம் என ஈடுபட்டால் அதிகபட்ச நடவடிக்கை பாயும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுப்பற்றி விவசாயிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பாதிப்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த எங்களை நள்ளிரவில் கைது செய்வதற்கு நாங்கள் தேச விரோதிகளா? என்று குமுறினர்.

    இதற்கிடையே, செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான போலீசார் விவசாயிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் காணப்படுகிறது. #greenwayroad
    முல்லை பெரியாறு நீர்மட்டத்தை அரசியல் சுயலாபத்திற்காக குறைக்க சொல்லும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மேலூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaperiyardam

    மதுரை:

    மேலூர் பகுதி முல்லை பெரியாறு, வைகை ஒரு போக பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

    தற்போது கடும் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது, இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாறு, வைகை ஒருபோக பாசன பகுதியான, மேலூர் பகுதியில் 2 வருடமாக போதிய தண்ணீர் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளதால் மேலூர் ஒருபோக பாசனத்திற்காக போதிய தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லாவிட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து பெரிய போராட்டம் நடத்தப்படும், முல்லை பெரியாறு அணை பகுதியில், பல்வேறு தொழில் கமிட்டிகளும், உச்சநீதிமன்றமும் 142 அடி நீர் தேக்கலாம் என்று கூறிய பின்பும், அரசியல் சுயலாபத்திற்காக நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தும் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    கடந்தாண்டு தண்ணீர் கேட்டு 4 வழிச்சாலையை மறித்து தண்ணீருக்காக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #mullaperiyardam 

    மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குளங்களுக்கு காவிரி நீர் செல்லும் நீர்வழிப் பாதையான பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராமமக்கள் தண்ணீரின்றி அவதியுற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

    கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மேட்டூர் அணையில் இருந்து 2 முறை திறந்தவிடப்பட்ட காவிரி நீர் டெல்டா மாவட்ட பகுதியான கடைமடையை வந்து சேராது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பருவமழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து மேட்டூரில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 47 ஆயிரத்து 56 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் 9523 கன அடியும், வெண்ணாறில் 9526 கன அடியும் கல்லணை கல்வாயில் 3004 கன அடியும், கொள்ளிடத்தில் 25 ஆயிரத்து 3 கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

    இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் இன்னும் ஒரு வாரத்துக்கு ஆற்றை கடக்கக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு சென்றாலும் கடைமடை பகுதிகளுக்கு இதுவரையிலும் தண்ணீர் செல்லவில்லை என்று டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், மற்றும் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல் ஒன்றியங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கொள்ளிடத்தில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு 22 நாட்களாகியும் இதுவரை கடைமடை தண்ணீர் செல்லாததற்கு வாய்க்கால், ஏரி, குளங்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாராததே காரணம் என்று விவசாயிகள் குமுறி வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டம் செங்கிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனம் அளிக்கும் மேற்கு கட்டளை கால்வாய் மற்றும் காவன் ஏரி, ஏலா ஏரி, புதுக்குடி ஏரி, புது ஏரி உள்ளிட்ட ஏரிகளை பார்வையிட்டேன். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடும் நிலையில் மாயனூர் அணையில் இருந்து பிரியும் மேற்கு கட்டளை கால்வாய் மற்றும் அதன்மூலம் பாசனம் பெறும் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசன பகுதி பாலைவனமாக உள்ளது. நிலத்தடி நீர் வற்றி விட்டது.

    எனவே ஏரிகளை நிரப்பு வதற்கும் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வருவாய்த்துறை, பொது பணித்துறை, விவசாயிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் காவிரி டெல்டா ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami
    பெங்களூரு:

    இந்தியா முழுவதும் நலிவடையும் தொழில்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.

    தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதல்மந்திரி ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். #KarnatakaCM #Kumaraswami
    கிருஷ்ணராயபுரத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்ல வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    லாலாபேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) மணி மேகலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்சமயம் காவேரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தங்களது நிலங்களை நெல் பயிரிடுவதற்க்கு தயார் படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தற்சமயம் சிஓஆர் 50, பிபிடி 5204, டிகேஎம் 13 போன்ற 130 முதல் 135 நாட்கள் வயதுடைய சன்னரகங்கள் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களது சிட்டாமற்றும் ஆதார் எண்ணுடன்கொண்டு வந்து வாங்கிச் செல்லலாம். அனைத்து நெல் பயிரிடும் விவிசாயிகளுக்குதங்களுக்கு தேவையான ரகங்களை விதைத்து பயன் பெற வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தங்கள் நெல் விதைகளை தேர்வு செய்யும் போது விதைப்பு நாளில் இருந்து அறுவடை நாளினை கணக்கீட்டு ஜனவரிமுதல் வாரத்தில் பின் அறுவடை அமையும்மாறு விதைப்பு செய்ய வேண்டும், ஏனெனில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு அடையாதவாறு விதைப்பு காலத்தை தேர்வு செய்வது அவசியம் ஆகும். இல்லை யெனில் அறுவடைகால முதிர்வு தருணத்தில் மழையினால் நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு தகுந்தார் போல ஆகஸ்ட் மாத 2ம் வாரத்தில் பின் நாற்று விடுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடலில் வீணாக கலக்கும் காவிரி உபரிநீரை வறண்டு கிடக்கும் வசிஷ்ட நதியில் இணைக்கும் திட்டத்தை ஆய்வு செய்து செயல்வடிவத்திற்கு கொண்டுவரப்படுமா? என்று மூன்று மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    வாழப்பாடி:

    கர்நாடகா மாநிலம் கூர்க் மலைப்பகுதியில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி நதி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தமிழகத்தில் பாய்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் காவிரி நதிநீர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களுக்கு வாய்க்கால் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இந்த மாவட்டத்தில் அணை பாசன வசதி பெறும் விளை நிலங்களில் பரப்பளவு டெல்டா மாவட்டங்களை விட மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதே போல கர்நாடகா மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி நதி பாய்ந்து வந்தும் தர்மபுரி மாவட்டத்திற்கு காவிரிநதி நீர் பாசனத்திற்கு பயன்படுவதில்லை. இதனால் காவரி நதி கடந்து செல்லும் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான விளை நிலங்கள் பருவ மழையை நம்பி பயிரிடும் மானாவாரி நிலங்களாகவே காணப்படுகின்றன.

    அதுமட்டுமின்றி, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு மற்றும் கொல்லி மலைப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் சுவேதா நதியும், எப்போதாவது ஒருமுறை மட்டுமே நீரோட்டத்தை பெறுகின்றன. ஆண்டு தோறும் பெரும்பாலான மாதங்களில் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. பருவ மழையும் குறைந்து போனதால் ஆறு, குளம்,குட்டை, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகளும் காய்ந்து கிடக்கின்றன.

    சேலம் - தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் எல்லையாக அமைந்துள்ள அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்னைக்கு செல்லும் வீராணம் ஏரியை சென்றடைகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிஷ்ட நதி உற்பத்தியாகும் அருநூற்று மலை பெரியக்குட்டி மடுவு வனப்பகுதிக்கும், காவரி க்ஷ்யாறு தமிழகத்தை வந்தடையும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கும் இடைப்பட்ட தூரம் 100 கி.மீ., மட்டும்தான். அதுமட்டுமின்றி, ஒகேனக்கலில் இருந்து தாழ்வான பகுதியில் தான் பெரியகுட்டிமடுவு அமைந்துள்ளது.

    எனவே, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து, மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக திறக்கப்படும் நேரத்தில், காவிரிநதி நீரை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதியில் திறந்து விட வேண்டுமென்பது, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசிஷ்நதி கரையோர கிராம விவசாயிகளிடையே நீண்டநாளாக கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்து காவிரி நதிநீரை வசிஷ்டநதியில் திறப்பதின் வாயிலாக, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், காவிரி நதிநீரை பெற்று செழிப்படையும். இந்த திட்டம் குறித்து 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பேளூர் கரடிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீலகராஜன், அந்த திட்டத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு மற்றும் பயன் பெறும் பகுதிகள் குறித்து தமிழக அரசின் சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறி அப்போதைய தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

    இந்நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நிரம்பி வழிந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடலில் கலக்கும் காவிரி நதி உபரிநீரின் ஒருபகுதியை வறண்டு கிடக்கும் வசிஷ்டநதிக்கு கால்வாய் அமைத்து திருப்பிவிடும் திட்டத்தை ஆய்வு செய்து செயல்வடிவம் கொடுத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென, மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வாழப்பாடி ஜவஹர், ஏத்தாப்பூர் முன்னோடி விவசாயி கொட்டவாடி குப்புசாமி ஆகியோர் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்திருந்தும் சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஆறு, குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. வறட்சியால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போவதால் பயிர்செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    எனவே, விவசாயிகளின் நலன் கருதி, ஒகேனக்கலில் இருந்து பெரியகுட்டிமடுவு வரை கால்வாய் அமைத்தோ அல்லது குழாய்கள் அமைத்தோ காவிரி நதிநீரை கொண்டு வந்து வசிஷ்டநதியில் விடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால், சேலம் கிழக்கு மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களிலும் வேளாண்மைத் தொழில் செழிப்படைந்து விவசாயிகள் வாழ்வு பெறுவார்கள். எனவே இத்திட்டத்தை ஆய்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்றனர்.
    நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத்திட்டம், முதல்அமைச்சர் ஆணைப்படி தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் இதற்காக வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த திட்டம் நடப்பு நிதி ஆண்டில் 2லட்சத்து 66 ஆயிரத்து 953 எக்டர் பரப்பளவில் ரூ.1,586 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயிர் வாரியாக வழங்கப்படும் அதிகபட்ச மானியம் (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) சிறு, குறு விவசாயிகளுக்கு எக்டருக்கு வாழைக்கு ரூ.81 ஆயிரத்து 135ம், கரும்புக்கு ரூ.97 ஆயிரத்து 134ம், காய்கறி பயிருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133ம், தென்னைக்கு ரூ.27 ஆயிரத்து 770ம் வழங்கப்படுகிறது.

    இதர விவசாயிகளுக்கு வாழைக்கு ரூ.63 ஆயிரத்து 25ம், கரும்புக்கு ரூ.75 ஆயிரத்து 452ம், காய்கறி பயிருக்கு ரூ.87 ஆயிரத்து 880ம், தென்னைக்கு ரூ.21 ஆயிரத்து 572ம் வழங்கப்படுகிறது.

    அதே போல் சிறு, குறு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைத்திட எக்டருக்கு மாற்றத்தக்க தெளிப்பான் கருவிகள் எனில் ரூ.20 ஆயிரத்து 866ம், மழைத்தூவான் கருவிகள் எனில் ரூ.30 ஆயிரத்து 498ம், இதர விவசாயிகளுக்கு தெளிப்பான் கருவிகள் எனில் ரூ.16 ஆயிரத்து 208ம், மழைத்தூவான் கருவிகள் ரூ.23 ஆயிரத்து 690ம், மானியமாக வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை, அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறுகுறு விவசாயிகளாக இருப்பின் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/    mimis என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் தமிழக விவசாயிகள் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.

    இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    எனவே 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு- வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். #tamilnews
    தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த கல்வியறிவு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பருவநிலை மாற்றமும், வேளாண்மையும் என்ற கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை விவசாயிகள் எதிர்கொள்வது குறித்தும் உரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இடர்களை குறைக்க விவசாயிகள் பயிர் பரவலாக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் மற்றும் வானிலை சார்ந்த ஆலோசனைகளை பெற்று தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் கிராமங்களில் தமிழக அரசு செயல்படுத்தும் நீர் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் நீர்நிலை மேலாண்மையை சிறப்பாக கையாண்டால் பருவநிலை மாற்றத்தினை சிறப்பாக கையாள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
    புதுடெல்லி:

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவில், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில் ஏற்கனவே ரூ.5 ஆயிரத்து 780 கோடி அளவுக்கு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பெரும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.1,980 கோடி செலவாகும். மேலும் அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று பல தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்டு உள்ளது. எனவே, மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    தமிழக அரசின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
    காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கரைபுரண்டு வரும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
    திருச்சி:

    கர்நாடாக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக திகழும் மேட்டூர் அணை கடந்த 23-ந்தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடைந்தது.

    பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள மேட்டுக்கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம் பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.

    அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்து விரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

    தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும்.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. முப்போகம் விளைவித்த டெல்டாவில் ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்து தற்கொலையும் செய்து கொண்டனர்.

    அவ்வாறான சூழலில் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கரைபுரண்டு வரும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

    ஆடிப்பெருக்கு வருகிற 3-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே காவிரி ஆற்றில் ஏராளமானோர் திரண்டு வந்து காவிரி தாய்க்கு பூஜை பொருட்களை வைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தி வரவேற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரளும் வெள்ள நீரால் கரையோரத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் நேராக கடலில் சென்று கலக்கிறது. கடந்த சில தினங்களாக கொள்ளிடத்தில் திறக்கப்படும் 40 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீரால் தினமும் கடலில் 5 டி. எம்.சி. தண்ணீர் வரை கலந்து வருகிறது.

    கடந்த 22-ந்தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை காவிரி தண்ணீர் அடைந்ததும் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    அந்த தண்ணீர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தை சென்றடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய 4 தாலுகா பகுதிகளிலும் காவிரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்று காலை 8 மணியளவில் காவிரி தண்ணீர் வந்தது. நாகுடியை அடுத்த இடையன் கொல்லை நீர்த்தேக்கத்திற்கு கல்லணை கால்வாயில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரைபுரண்டு வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    இந்த தண்ணீர் மூலம் 160 ஏரிகள் நிறைந்து சுமார் 28 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே இந்த ஆண்டு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி வரை இப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பல ஆண்டுகளுக்கு பிறகு முப்போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலந்து அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழுர் வழியாக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்கரை கீழணையை சென்றடைந்தது. அணைக்கரை கொள்ளிடம் ஆற்று கரையோரங்களில் ஏராளமானோர் குடிசை வீடுகள் அமைத்து தங்கியுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் குடிசை வீடுகள் மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கரை கீழணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட்டனர். அணைக்கரை கீழ ணையில் தண்ணீர் நிரம்பியதும், அமைச்சர் மற்றும் அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட இருந்தனர். ஆனால் வெள்ள அபாயம் ஏற்பட்டதால், நேற்றிரவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் 30ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.

    அங்கிருந்து வடவாறு வாய்க்கால், வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் ஆகிய வாய்க்கால்களில் 400, 300 மற்றும் 1500கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கரை கீழணையில் இருந்து வடவாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர், காட்டு மன்னார்கோவில் வழியாக சென்னை வீராணம் ஏரியை சென்றடைகிறது.

    அணைக்கரை கீழணை தண்ணீர் மூலம் கடலூர், நாகை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் தண்ணீர் எப்போதும் வரும் என்று கடலூர், நாகை மாவட்ட விவசாயிகள் காத்திருந்தனர். அணைக்கரைக்கு தண்ணீர் வந்ததும் அதன்பிறகு விவசாய பணிகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் விவசாயிகள் யாரும் எதிர்பாராத வகையில் நேற்றிரவே அணைக்கரை கீழணையில் முழுவதும் தண்ணீர் நிரம்பி, அங்கிருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை இன்று காலைதான் விவசாயிகள் அறிந்தனர். இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் உடனடியாக விவசாய பணிகளையும் தொடங்கினர். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சம்பா சாகுபடிக்கு மிகவும் கைக்கொடுக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×