search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue scam"

    பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு புதிதாக ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக முருகன் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே. ராஜா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறையினர் மலைக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர். அதேபோல் கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, அப்போதைய அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஐம்பொன் சிலை மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சம்பந்தப்பட்டிருப்பது கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐம்பொன் சிலையில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கவேண்டும், சிலையின் வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரியாக தனபால் இருந்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    முன்னாள் ஆணையர் தனபாலை விசாரணைக்கு வரும்படி கூறி 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. எனவே அவருடைய வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். சிலருடைய உதவியுடன் முன்னாள் ஆணையர் தனபால் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனபால் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு தனபால் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “இந்த வழக்கில் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    பழனி கோவில் சிலை மோசடியில் உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

    கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ம் கட்ட விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல்துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் மலைக்கோவில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலை, சின்னக்குமாரசாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 2004-ம் ஆண்டு பழனி கோவிலில் உதவி ஆணையராக பணிபுரிந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். புகழேந்தி அதன் பிறகு திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதில் சிலை மோசடி நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளோம். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.



    ×