search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steps should be taken"

    • கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.
    • சி.சி.டி.வி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அந்தியூர் தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், தவிட்டுப் பாளையம் காய்கறி மார்க்கெட், ஜி ஹெச் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைக்கு வருபவர்களும் வியாபாரிகளும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வருவதற்குள் திருடு போகும் அவல நிலை நடந்து வருகிறது.

    கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.

    அதற்கு அடுத்த நாள் வேறொரு நபரின் இரு சக்கர வாகனமும் தாலுகா அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே திருடு போனது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே தேநீர் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று காலை அந்தியூர் பஸ் நிலைய வளாகத்திற்குள் தனியார் பேருந்து நடத்துனர் தனது 2 சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் அந்த வாகனத்தை ஒரு மணிக்கு அந்தியூர் பஸ் நிலையம் வந்தபோது பார்த்துள்ளார்.

    அப்போது அவர் நிறுத்தி விட்டு சென்ற தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனை அடுத்து அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளார். வண்டியை காணவில்லை. இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி அந்தியூர் பஸ் நிலையம், ஜி ஹெச் கார்னர், அண்ணா மடுவு உள்ளிட்ட இடங்களில் உள்ள சி.சி.டி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    இதனால் அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் சுற்றித் திரிகிறார்கள் எனவே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×