search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storm relief fund"

    வேளாங்கண்ணி அருகே புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    வேளாங்கண்ணி:

    கஜா புயலினால் தன்னிலப்பாடி மற்றும் நீடுர் பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நீடுரில் நேற்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அமுல்ராஜ், தி.மு.க. ஊராட்சி செயலாளரும், மாவட்ட நெசவாளர் அவை துணைத்தலைவருமான குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரண தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.

    மரைக்காயர் கட்டளை கிராமத்திற்கு 4 ஆண்டு காலமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையும், வெள்ள நிவாரண தொகையும் உடனே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய பணத்தை உடனடியாக அவரது வங்கி கணக்கில் ஏற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மறியலில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் அமுதவிஜயரங்கன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக செம்பியன்மகாதேவி-களத்திடல்கரை மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், தி.மு.க. அவைத்தலைவர் பழனிவேல், விவசாய தொழிற்சங்க ஒன்றிய துணை தலைவர் வீராச்சாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    ×