search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student death"

    • மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வென்றவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை லட்சுமணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவரது தாயாரின் வளர்ப்பில் இருந்து வந்தார் இவர் குடும்ப பாரத்தை குறைக்கவும், பள்ளிப்படிப்பிற்கும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த மைனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி தாக்கியதில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழந்தார்.

    நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தாயார் தேடி சென்று அங்கு பார்த்த போது விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்தன் உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனந்தனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருந்த போதும், குடும்ப சுமையை குறைக்க கூலி வேலைக்கு சென்று அவரது தாயாருக்கு பெரும் உதவியாக இருந்த சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர்.
    • 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின்(வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (14). இவர் அரசு பள்ளியில் 8- ம் வகுப்பு பயின்று வந்தார்.

    ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் மாரி முத்து (13). இந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று மாலை தங்கள் பெற்றோர்களிடம் விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து பெற்றோர்கள் அவர்களை தேட தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    செருப்பு கிடந்த இடத்திற்கு அருகே கிணறு ஒன்றும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பிரத்யேக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் அங்கு ஏதும் தென்படவில்லை.

    பின்னர் அந்த நள்ளிரவிலும் கயிற்றின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில் கிணற்றின் ஆழப்பகுதியில் சிறுவர்களின் உடல் தட்டுப்பட்டது, இதன் பின்னர் மேலும் சில வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவர்களின் உடல்களை இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர்.

    இது குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த சிறுவர்கள் குளிக்கும் போது அஸ்வின் என்ற சிறுவனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் மூழ்க, நண்பனை காப்பாற்றும் முயற்சியில் மற்ற 2 சிறுவர்களும் இறங்கி இருக்கலாம். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறினர்.

    உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
    • போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே மாணவன் ஜீவா உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.

    அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

    அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
    • ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.

    அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.

    இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.

    இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.

    தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
    • பொதுமக்கள் மாணவர் மோகனசுந்தரத்தை இறந்த நிலையில் மீட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் மோகனசுந்தரம் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.

    பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மோகனசுந்தரம் தனது நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 2 பேரும் கரையோரமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் மோகனசுந்தரம் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர் மோகனசுந்ரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் மாணவர் மோகனசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
    • உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    • தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார்.
    • தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது.

    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது கணவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த தம்பதியின் மகள் லியோரா ஸ்ரீ (வயது 10) இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல அவர் மகளை மொபட்டில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.

    கோவிலம்பாக்கம் ரோட்டில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் கீர்த்தனா சென்ற மொபட்டும் சிக்கி நிலை தடுமாறியது. இதனால் மொபட் சரிந்ததால் அதன் பின்னால் பயணம் செய்த லியோராஸ்ரீ தவறி கீழே ரோட்டில் விழுந்தார்.

    அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி லியோராஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவிலம்பாக்கம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவதாகவும் லாரிகள் போன்ற வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால் இதுபோன்று விபத்துக்கள் நடந்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் உயிர் இழந்த சம்பவம் கோலிலம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×