search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Shobia"

    கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது தமிழக அரசு அடக்குமுறையை கையாள்வதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருணாசை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே பழைய வழக்குகளை கிளறுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை என பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.

    நாக்கை அறுப்பேன் என கூறிய அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை. தனிப்படையால் தேடப்படும் எச்.ராஜா போலீசார் பாதுகாப்பில் சுற்றி வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கருணாஸ், மாணவி ஷோபியா போன்றோர் மீது அரசு அடக்குமுறையை கையாள்கிறது. நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேலும் ஜாமீன் பெற முடியாமல் தவிக்கும் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். மணல் திருட்டு, அரசு அனுமதியுடன் தனியார் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

    ஆனால் காவல் துறையினர் நியாயமாக போராடும் மாற்றுத் திறனாளிகள் மீது கூட அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றாக திரட்டி வலிமைமிக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×