search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sucess"

    • மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கு பொதுத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கான பணிகளை ஏற்கனவே அந்த கட்சி பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 450 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளனர். குறிப்பாக மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    140 தொகுதிகள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு பலவீனமானதாக கருதப்படுகிறது. அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை முடிந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முதல் முறை இளம் வாக்காளர்களை குறி வைத்து பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பாரதிய ஜனதாவின் இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்ககட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களும் வேட்பாளர்கள் பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தை தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நாடு முழுவதும் 7 லட்சம் கிராமங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அப்போது பிரத மர் நரேந்திர மோடி தலை மையில் பா.ஜ.க. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக பிரசாரத்தை முன்னெடுப்பார்கள்.

    8 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த 8 தொகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியின் பொதுதுக் கூட்டம், வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தேசிய அளவிலான பிரசார பொறுப்பை ஏற்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மூத்த தலைவர் ஒருவர் தேர்தல் பிரசார பொறுப் பாளராக நியமிக்கப்படுவார்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாநிலங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பெண்கள், இளைய தலைமுறையினரை ஈர்க்க புதிய உத்திகள் வகுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

    விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கையேடுகள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். பிரதமர் மோடி நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்வார்.

    இந்த தகவல்கள் டெல்லி பா.ஜ.க. வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளன.

    ×