என் மலர்
நீங்கள் தேடியது "tag 111187"
சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணிக்க ராஜ் (வயது 40), அம்பத்தூரை சேர்ந்த முருகன் (37), சென்னை ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.
தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.
இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. குடிபோதையில் இருந்த 5 பேரும் போலீசாரிடம் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கோவை சிங்காநல்லூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்தில் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியுடன் பயணம் செய்தனர்.
இந்நிலையில் பஸ் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது தாறுமாறாக சென்றபோது பாலத்தின் சுவர் மீது உரசியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பின்னர் இருகூர் பிரிவு அருகே சென்றபோது பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவரை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற விசாரணை நடத்தினர்.
அப்போது பஸ்சை ஓட்டியது கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(42) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டிரைவர் சுப்பிரமணியம் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காங்கேயம் பஸ் டெப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனடிப்படையில் டிரைவர் சுப்பிரமணியத்தை முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியம் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியான புகார்கள் இருக்கும்பட்சத்தில் டிரைவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் புதிய காலனியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 60). இவர் விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கணேசன் (42). என்பவருக்கு சொந்தமாக எருமணம்தாங்கலில் உள்ள நிலத்தில் குடிசை அமைத்து அங்கேயே தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.
சாமிக்கண்ணுவின் நண்பர் கார்த்திகேயன் (35). இவரும் விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அங்குள்ள விவசாய நிலத்தில் வைத்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது கார்த்திகேயனின் செல்போனை சாமிக்கண்ணு பறித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் அருகில் கிடந்த கம்பை எடுத்து சாமிக்கண்ணுவின் நெற்றியில் குத்தினார்.
இதில் ரத்தம் வழிந்து அதே இடத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணு துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையறிந்ததும் கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பிணமாக கிடந்த சாமிக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் வாளையாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு அதே பகுதியில் ஒரு சந்தில் நண்பர்களுடன் மது குடித்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து விஷ்ணுவின் கழுத்தில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் விஷ்ணுவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் விபத்து என்று கூறி இரவு 1 மணிக்கு சேர்த்து விட்டு மாயமானார்கள். ஆஸ்பத்திரியில் விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.
விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்து டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஷ்ணுவின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாய்த்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் விஷ்ணுவின் கழுத்தில் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டாரை அடுத்த பெரிஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மனைவி மேரி ஹெலன் பாய் (வயது 56). இவர்களின் மகன் மெர்ஜின் ராஜ் (29). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.
மெர்ஜின் ராஜ், வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை. அதனை மது குடித்து செலவு செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தகராறும் செய்தார்.
மெர்ஜின் ராஜ், வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக திரிந்ததை அவரது தாயார் மேரி ஹெலன் பாய் கண்டித்தார். இதனால் மேரி ஹெலன் பாயிக்கும், பால் ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்றும் இதுபோல தாயாருக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மெர்ஜின் ராஜ், தாயார் மேரி ஹெலன் பாயை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் வீடு முன்பு நின்ற வாழை மரங்களையும் வெட்டி நாசம் செய்தார். இது பற்றி மேரி ஹெலன் பாய், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மெர்ஜின் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். கைதான மெர்ஜின் ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி காசி மல்லி (வயது 50) என்பவர் கடந்த 11-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் மொபட்டை தள்ளிக்கொண்டு வந்தார்.
அப்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் காசிமல்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார்.
இது தொடர்பாக சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாலூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பொன்னியம்மன் கோவிலை சேர்ந்தவர் குருபிரசாத். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது 5 வயது மகன் குமரகுரு.
குருபிரசாத்துக்கு மது பழக்கம் உள்ளது. இவர் மகன் குமரகுருவுடன் ஓரகடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மகன் குமரகுருவை கடையின் வெளியே விட்டு விட்டு குருபிரசாத் மது குடிக்க சென்றார்.
இந்த நிலையில் மகனுடன் வெளியே சென்ற கணவர் குருபிரசாத் வீடு திரும்பாததால் மனைவி முருகம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கணவரை தேடியபோது மதுக்கடை பாரில் குடிபோதையில் கணவர் குருபிரசாத் மயங்கி கிடப்பது தெரிந்தது. மகன் குமரகுருவை காணவில்லை. அவன் மாயமாகி இருந்தான்.
இது குறித்து முருகம்மாள் ஓரகடம் போலீசில் புகார் செய்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கன்னா உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார்.
மதுக்கடை அருகே உள்ள மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வேஷ்டி, சட்டை அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் சிறுவன் குமரகுருவுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்த படி அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. அவர் குமரகுருவை கடத்தி செல்வது தெரிந்தது.
அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாகாநத்தம் தோப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கல்யாணி(வயது21) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் அவர்களது குடும்பத்தில் புயல் வீசதொடங்கியது.
தினமும் குடிபோதையில் மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்தபோது கிருஷ்ணமூர்த்தி குடிப்பழகத்தை விடவில்லை.
நரகவேதனையில் வாழ்வதைவிட தற்கொலை செய்துகொள்வதென கல்யாணி முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து எரியோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விரைந்து கல்யாணியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே தம்பியை உருட்டுக்கட்டையால் அண்ணன் அடித்து கொன்றார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குருகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன்கள் கலைச்செல்வன் (வயது 42). செந்தில்குமார் (39).
இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார், மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற கலைச்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் கலைச்செல்வனின் மனைவி மாலா, மகன் விமல் ஆகியோர் செந்தில்குமாரை தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அவர்களையும் சத்தம் போட்டு திட்டினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வன் ஆவேசத்துடன்அருகே கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து செந்தில்குமாரை, சரமாரியாக தாக்கினார். மேலும் மாலாவும், விமலும் சேர்ந்து தாக்கினர்.
3 பேரும் தாக்கியதால் செந்தில்குமார் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதையில் தகராறு செய்த தம்பியை அவரது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகன் என 3 பேரும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.