என் மலர்
நீங்கள் தேடியது "tag 134992"
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது 70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.
நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர்:
காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.
இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் திலகவதி நகரில் வசித்து வருபவர் முத்தையா (72). கட்டுமான தொழில் செய்து வரும் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.வி. நடிகை ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் என் மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், அவரது மனைவி டி.வி. நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் சிலர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர்.
என்னையும் என் மகன் கிறிஸ்டோபரையும் காசிமேடு, அண்ணாநகர், ரவுடிகள் மூலம் கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 லட்சம் உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டினர்.
எதற்காக இந்த பணம் தர வேண்டும் என்று கேட்டதற்கு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் கேட்ட பணத்தை கொடு, இல்லையெனில் ரவுடிகளை வைத்து உன் குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என்று மிரட்டினர்.
பணத்தை இப்போது தரவில்லை என்றால் என்னையும் என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து உயிருக்கு பயந்து ரூ.10 லட்சத்துக்கு ‘செக்’ எழுதி கொடுத்தேன். அதிகாலை 2 மணி வரை என்னை கத்தி முனையில் மிரட்டியதால் நான் வேறுவழி தெரியாமல் பயந்து செக்கினை கொடுத்து விட்டேன்.
என்மகன் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை கூறினேன். போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் எங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், டி.வி. நடிகை சஜினி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
பரமக்குடி மேலசத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஏகாம்பரம் என்ற முதியவர் சுற்றித்திரிந்தார். இரவில் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
நள்ளிரவில் அங்கு வரும் யாரோ சிலர் அவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து ஏகாம்பரம் அந்தப்பகுதி மக்களிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஏகாம்பரம் வழக்கமாக படுக்கும் வீட்டின் முன்பு சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டது.
வழக்கம் போல் ஏகாம்பரத்திடம் பணம் பறிக்கும் வாலிபர் நேற்று இரவு அங்கு வந்தார். மதில் ஏறி குதித்த அவர் ஏகாம்பரத்தின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றார்.
அப்போது அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அங்கு கிடந்த கல்லை எடுத்து முதியவரை தாக்கினார்.
பின்னர் அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் பரமக்குடியைச் சேர்ந்த கணேச பாண்டியன் (வயது 17) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
ஆங்கில மருத்துவத்தில் முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது அரிதான ஒன்றாகும். அதிலும் அதிக வயதுடைய முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிக மிக சவாலுக்குரிய ஒன்றாகும். சென்னை மருத்துவர்கள் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், 103 வயதான முன்னாள் அரசு ஊழியர் ஸ்ரீனிவாசன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் முழுமூச்சாக செயல்பட்டனர்.
103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனும் அசாத்திய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதுதொடர்பாக எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் லக்சுமி நாதன் கூறுகையில், சுமார் 90 நிமிடங்கள் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக மருத்துவர்கள் குழு செய்து முடித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், மிக விரைவில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. #Chennai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களில் சிறுவர்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள்தான் ஆடம்பர செலவுக்கு ஆசைப்பட்டு ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் தங்களை போலீசார் அடையாளம் காணாமல் இருக்க ஹெல்மெட் அணிந்தும், முகத்தில் துணியை கட்டிக்கொண்டும் கைவரிசை காட்டி வருகின்றனர்.
ஆனால் தற்போது முதியவர் ஒருவர், வளசரவாக்கம் பகுதியில் நூதன முறையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
வேட்டி, சட்டை அணிந்தும், நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டும் நீல நிற மொபட்டில் சாலையில் வலம் வரும் அவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். அந்த நபர், சாலையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறி வைத்து தனது சங்கிலி பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றி வருகிறார்.
அவரது வயதை வைத்து யாரும் அவரை சங்கிலி பறிப்பு திருடன் என சந்தேகம் அடையமாட்டார்கள் என்பதால் அவர், ஹெல்மெட் அணியாமலும், முகத்தில் துணி கட்டாமலும் துணிச்சலுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வளசரவாக்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்த அவர், உடனடியாக நகையை வாயில் லாவகமாக கவ்விக்கொண்டு மொபட்டில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டார். அதன்பிறகுதான் அந்த மூதாட்டிக்கு நகை பறிபோனது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது, அதில் அவர் நீல நிற மொபட்டில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி தெளியாக பதிவாகி உள்ளது தெரிந்தது.
அதில் பதிவான அவரது உருவம் மற்றும் மொபட் பதிவெண் ஆகியவற்றை வைத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் முதியவரும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருவதால் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (80) இவர் கடந்த மார்ச் மாதம் 23 -ந் தேதி தனது பிறந்த நாள் முதல் யாரிடமும் பேசாமல் அவினாசி சாலை திருமுருகநாத சாமி கோவிலில் உள்ள பனைமரத்தடியில் நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்,
பின்னர் அவர் எதுவும் பேசாமல் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 70 நாட்களாக மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.முத்துசாமி மவுன போராட்டம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமியிடம் கேட்ட போது கூறியதாவது-
எனது கணவர் மவுனப் போராட்டம் நடத்துவது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத்தான். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் முறையான தமிழ் கல்வி இல்லாமையே இதற்கு காரணம்.வீடுகளில் தமிழில் பேசுவதில் தொடங்கி எழுதுவது வரை தமிழ் எளிமையாக வர வேண்டும் .
அந்த அளவிற்கு தமிழை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சுப்புலட்சுமி சொல்லிய கருத்தை ஆமோதிக்கும் வகையில் முத்துசாமி தலையசைத்தார்.
7-ம் வகுப்பு வரை படித்த முத்துசாமி, பின்னலாடை தொழிலில் இயற்கை முறையில் சாயமிடும் தொழிலில் வெற்றி கண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி தமிழ் அறிஞர்கள் டெல்லியில் நடத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தமிழக ம் தலை நிமிர தமிழ் மொழி கல்வியே வழி வகுக்கும் என மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துள்ளார். #tamilnews