search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள்"

    • மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

    முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.
    • முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.

    தருமபுரி:

    ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாவட்ட தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது, ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது, ஆசிரியர்களின் பிறப்பை தவறாக பேசுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான அரசு வழங்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்புகளை கணக்கிட்டு அதிக தற்செயல் விடுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களை தனியாக அழைத்து ஒருமையில் திட்டி வருகிறார்.

    பல்வேறு ஆசிரியர்களின் வேதனை தெரிவித்ததன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நள்ளிரவில் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
    • வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    வேலுார்:

    வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

    இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.

    இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.

    இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர கூட்டம் நடந்தது.

    இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

    பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும்.

    வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும்.

    பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

    மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவுகளை இன்று முதலே பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் குணமங்கலம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் கள்ளிப்பால் கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய பாலை சுவைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளிப்பால் குடித்ததை குறித்து மாணவர்கள் கூறியதை அடுத்து 5 பேருக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • ஜப்பானில் மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவறையை சுத்தம் செய்கிறார்கள்.
    • குழந்தைகளுக்கு தூய்மையைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

    கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், சித்ரதுர்கா தொகுதி எம்.பி.யுமான கோவிந்த் கர்ஜோல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் என்ன தவறு? எனப் பேசினார். அவரது பேச்சு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

    அந்த நிகழ்ச்சியில் கோவிந்த் கஜ்ரோல் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?. ஜப்பானில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

    ஆசிரியர்கள் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வது, இதனால் ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். மாணவர்களுக்கு துடைப்பம் கொடுப்பது குற்றமாக பார்க்கப்படுவதால், துப்புரவு பணியே தரம் தாழ்ந்ததாக மாணவர்கள் கருதுகின்றனர். மாறாக, குழந்தைகளுக்கு தூய்மையைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

    கோவிந்த் கஜ்ரோல் கருத்து குறிதது கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஒருவர் கூறுகையில் "மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அங்கு பாகுபாடு பார்க்கக் கூடாது. சுழற்சி முறையில் சுத்தம் செய்யும் பணியை தொடர வேண்டும். ஐந்தாம் வகுப்பிற்குமேல் படிக்கும் மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும். சரியான தண்ணீர் வசதி பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

    மற்றொரு கல்வியாளர் கூறுகையில் "கர்ஜோல் கருத்து விசித்திரமானதாக உள்ளது. மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்வது எளிதானது. இறுதியாக இது தலித்த குழந்தைகள் மீது விழும். மாணவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யக்கூடிய வகையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிகளை அரசு வழங்க வேண்டும்." என்றார்.

    பல்வேறு மாநிலங்களில் மாணவர்களை தூய்மை பணிகள் உள்ளிட்ட போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது என வழிநாட்டு நெறிமுறைகள் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம்.
    • வருகிற 29, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முற்றுகை போராட்டம்.

    சென்னை:

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் 8-ந்தேதி காணொலி வழியே நடைபெற்றது.

    கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான (பொறுப்பு) ஈ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி. ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ், ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந்தேதி) நடத்த உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 6-ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளி யிடபப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழு, டிட்டோஜாக் கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு நாளை (10-ந்தேதி) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், வருகிற 29, 30, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இதுகுறித்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கும்படி கோரிக்கை வைத்தோம்.

    பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைபடுத்துதல் அரசாணை 243-ஐ ரத்து செய்ய கேட்டிருந்தோம்.

    இது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எதுவும் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக நாளை காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.

    • ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார்.

    தனியார் விடுதியில் தங்கி இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.

    எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சரை வரவேற்றனர்.


    அதன்பின் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள், வகுப்புகள், அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-

    உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.

    எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.

    மலைப் பகுதிகளில் அதிக தூரம் பயணம் செய்து படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் சீருடை அணிந்து சென்றால் பஸ்சில் பாஸ் கேட்கமாட்டார்கள் என்றார். இருந்த போதும் மாணவர்களுக்கு பஸ்பாஸ் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

    அதனை தொடர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி கல்வித்துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக மாறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். 

    • ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் பெரிதும் பாதிக்கும்.
    • 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பின் சார்பில், அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2023-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டிட்டோஜாக் அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் மீது உடனடியாக ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    எனவே டிட்டோஜாக் சார்பில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், வருகிற 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாகப் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் பெரிதும் பாதிக்கும். எனவே தமிழக அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.
    • குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே.

    திருப்பூர்:

    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு குடும்பம் ஒரு கதம்பம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்ததற்கான பெருமை என்னுடைய ஆசிரியர்களையே சாரும். நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. அதேநேரம் வாத்தியார்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே வாத்தியார்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை உண்டு.

    பொதுவாக மனிதன் வலியை தாங்கக்கூடியது 10 பாயிண்ட் என்றால் ஆண்கள் 7 பாயிண்டிலேயே உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது என்றும், ஆனால் பிரசவ வலியில் பெண்கள் 7.6 பாயிண்ட் வரை வலியை தாங்குகிறார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.

    எனவே தாய்மை என்பது பெண்களுக்கு மரியாதைக்குரிய சமாச்சாரம் ஆகும். குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே. அந்த அளவிற்கு நாம் அந்நியோன்யமாக இருக்கும்போது, அதை பார்க்கும் குழந்தைகளும் நல்ல முறையில் வளருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதியை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
    • 'அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

     இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகமாக விளங்கும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பதற்கான ஆலோசனையை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

     

    சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதி குறித்து ஜி.என்.ஜா மற்றும் டி. கிருஷ்ணசுவாமி ஐயர் ஆகியோர் எழுதிய விளக்க புத்தகங்களை இளங்கலை முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளம்பியுள்ள இந்த முடிவுக்கு இடதுசாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பான SDTF ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவும், பட்டியலினத்தர்களுக்கு எதிராகவும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மனுஸ்மிருதி கல்வி முறையை சீர்குலைக்கும் என்று அவர்கள் பலகலை நிர்வாகத்துக்கு எழுதியுள்ள எதிர்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதற்கிடையில் பாடதிட்டத்தில் மனு ஸ்மிருதியை சேர்க்கும் முடிவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 'பல காலமாக அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

    மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்ம சாஸ்திரம், பிற்போக்கான வகையில் சாதிய படிநிலைகளை வகுத்து மனிதர்களக்குக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்ற சர்ச்சை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

    • வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.
    • பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு என 3 கட்டிடங்கள் கட்டப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தான் இந்தக் கட்டிடம் பயன் பாட்டுக்கு வந்தது. சுமார் 90 மாணவ-மாணவிகள் படிக்கின்ற இந்த நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடத்தில் 7-ம் வகுப்பு வகுப்பறையில் மேலே உள்ள மேற்கூரை சுவர் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்தது.

    வகுப்பறையின் மேற் கூரை சுவர் இடிந்து விழுவதற்கு முன்னதாக அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு இறைவணக்கம் பாடுவதற்காக மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


    இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடத்தை ஒப்பந்ததாரர், தரமற்ற எம் சாண்ட் மற்றும் கற்களை வைத்து கட்டி இருப்பதால் அது இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்தது. மேலும் வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களில் மேற் கூரை இடிந்து விழுந்துள்ளதால், மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ-மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, தரமான முறையில் புதிய கட்டிடத்தை கட்டித் தரவேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    • குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
    • வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.

    நெல்லை:

    தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

    ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.

    அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

    வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.

    இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.

    இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.

    ×