என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறைக்காற்று"

    • கமுதி அருகே சூறைக்காற்று வீசியதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், நீராவி மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்று வீசியது.

    இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவை அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோரை பள்ளத்தை சேர்ந்த விவசாயி ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள 2 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

    இதேபோல் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளான சுப்பிரமணி, கந்தசாமி, வீரமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. சூறைக்காற்றால் அந்த பகுதியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    பாறைகுளம் பகுதியில் விவசாயி கருப்பையா என்பவரின் 200-க்கும் மேற்பட்ட எலுமிச்சை மரங்களும் வேரோடு சாய்ந்து நாசமானது. இதன் காரணமாக அதனை பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். அவர்கள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வரை-செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் நாங்கள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி கருப்பசாமி(52) என்பவரது வீட்டின்மேற்கூரை சூறைக்காற்றால் முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதன் இடிபாடுகள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மேல் விழுந்து அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.

    இதனால் தற்போது அந்த தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே கருப்புசாமி வீடு அருகே இருந்த 2 ஓட்டு வீடுகளும், சூறைக்காற்றால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சூறைக்காற்றில் வீடுகள்,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்த நிலையில், அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

      பெரியகுளம்:

      தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

      இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

      நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

      தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

      • தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.
      • தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

      ராமேசுவரம்:

      தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

      தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

      இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

      இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

      • சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
      • இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

      ராமேசுவரம்

      ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்து மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தது. அவர்களுக்கான மீன்பிடி அனுமதியும் வழங் கப்படவில்லை.

      இதன் காரணமாக 1,650 விசைப்படகும், 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நான்கு நாட்க ளாக கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் குறைந்ததின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்க சென்ற னர். இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

      • மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
      • கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

      வேதாரண்யம்:

      நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

      இதனால் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

      கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

      இந்த திடீரென்று உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மீன்பிடி வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

      இந்த 6 மாத சீசன் காலத்தில் நாகை,திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

      ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் துவங்கப்படவில்லை இதற்கு காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

      எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

      • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
      • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

      தாளவாடி:

      ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

      இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

      சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

      சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

      அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

      அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

      ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

      மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

      ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

      • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

      அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

       

      இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

       

      நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

       

      • குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.
      • குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

      தென்காசி:

      தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

      இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதோடு, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.வேகமாக வீசி வரும் சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மரங்கள் முறிந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

      குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. அதனை உடனடியாக பணியாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள் அதிகம் முறிந்து விழுந்துள்ளன.

      மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று காலையில் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே விழுகிறது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

      பழைய குற்றால அருவி பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வண்ணம் எச்சரிக்கை கருவிகளை நிறுவ வேண்டும் என மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

      அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

      பழைய குற்றால அருவிப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகளை ஒட்டி வலை போன்ற இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டு உள்ளது. 

      • காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.
      • அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.

      மண்டபம்:

      வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. வட கிழக்கு பருவ மழையுடன் புயலும் சேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

      குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

      ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.

      ராமேசுவரத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டு வந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

      வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மீன்பிடி இறங்குதளங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

      கடுமையான பனி மூட்டத்துடன் பலத்த மழையும் பெய்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.

      அரிச்சல் முனை, தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.

      குந்துகால் முதல் குரு சடைதீவு வரையில் இயக்கப்படும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.

      தனுஷ்கோடி, குந்துகால் கடல் பகுதி, பாம்பன் ஆகிய இடங்களில் அலைகளின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து தாக்கியது.

      சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மீண்டும் கடலில் இழுக்கப்பட்டன. அத்துடன் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடியிருப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

      தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புயலால் ராமேசுவரம் கடலில் இன்று மணிக்கு 55 முதல் 63 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

      அதற்கேற்க இன்று காலை முதலே பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 60 கி.மீ. வேகத் தில் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் கடற்கரை வெறிச்சோடியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

      • ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
      • சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

      ராஜபாளையம்

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.

      இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

      தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

      சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

      இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.

      ×