என் மலர்
முகப்பு » tag 332884
நீங்கள் தேடியது "பொற்கிழி"
திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு சேவையாளர்கள் 10 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
குத்தாலம்:
திருவாவடுதுறை ஆதீனத்தில் நேற்று நடைபெற்ற ஜென்ம நட்சத்திரத் திருநாளை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திரதானமும், சேவையாளர்களுக்கு பொற்கிழியையும் வழங்கி திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அருளாசி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை சைவ ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தில் தற்போது 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா நேற்று ஆதீன திருமடத்தில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலை ஞானமா நடராஜப்பெருமான், ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவப்பிரகாச விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் முன்னிலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடத்தப்பட்டது. ஹோமத்தை 24 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் கோவிலில் கோபூஜை, கஜபூஜை செய்ததுடன், சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.
அதனையடுத்து ஆதீனத் திருமடம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த குருமகா சன்னிதானம் நவீனமயமாக்கப்பட்ட நமச்சிவாய மூர்த்திகள் அச்சகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பல்வேறு சமுதாய சேவையில் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு “மனிதநேய மாமணி” என்ற பட்டத்தை வழங்கி தலா ரூ.10ஆயிரம் பொற்கிழி வழங்கி அருளாசி கூறினார். மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு குருமகா சன்னிதானம் வஸ்திரங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளை பெற்றனர்.
×
X