search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்"

    பெண்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளோம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் ஒன்றிய நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டி தெருவில் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சண்முகம், அவைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்கே. பன்னீர்செல்வம் மற்றும் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ஜெயராஜ், தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    இதில் ஒன்றிய துணை செயலாளர் கே.டி பாலமணிகண்டன், ஒன்றிய குழுத்தலைவர் சகதியா பர்வீன் நிஜார், பூக்கடை செந்தில், நகரபொருளாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளோம் . பெண்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளித்ததால் இன்று பெரும்பாலானோர் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளில் பெண்கள் பாதி உள்ளனர்.

    கடந்த காலங்களில் பெண்கள் மணவறைக்கு பின்னால் இருந்தனர். ஆனால் தற்போது மணவறைக்கு முன்னால் உள்ளனர். முதலமைச்சரின் நிர்வாகத்திறன் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன்களை அடைத்து முன்னேறி வருகிறோம். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை அளிப்போம் என உறுதியளித்தார். இதுவரை தமிழக அரசு இந்த ஓராண்டில் 22,000 கோடி அளவிற்கு சலுகைகளையும் தள்ளுபடிகளை பொது மக்களுக்கு வழங்கி உள்ளோம் என தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் லால்பேட்டை அருகே கலைஞரின் உழவர்சந்தை விரைவில் 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் முடித்துவிட்டு வேலை பார்க்கும் போது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என பேசியவர் இப்போது தமிழகத்தின் நலன்களைப் பற்றி பேசுகிறார்.

    தமிழக முதல்வருக்கு 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என சவால் விடுகிறார். தமிழக முதலமைச்சர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி தான் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அண்ணாமலையின் சவால் முதல்வருக்கு சாதாரணம். கரூரை தாண்டி அண்ணாமலையால் வெளியில் வர முடியுமா? முதலில் அதை செய்யட்டும். கரூரில் இருந்து அவருடைய மக்களையும் சேர்த்து அழைத்துவந்து வரட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என சவால் விட்டார். தமிழகத்தில் பாஜக மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் கூறினார். இந்திய பிரதமராக இருப்பதன் காரணமாகவே அண்ணாமலை இதுபோன்று சவால் விட்டு வருகிறார். இந்த சவால்களை எல்லாம் திமுக பார்த்து வளர்ந்த கட்சி என கூறினார் . திமுகவிற்கு மிரட்டவும் தெரியும். அண்ணாமலை சவால்களை முதலமைச்சர் தெளிவாக சந்திப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×