search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்.
    • குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்தர்களிடம் மட்டுமின்றி கேரளாவின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. குருவா கும்பல் என போலீசாரால் அழைக்கப்படும் இந்த கும்பல், இந்த ஆண்டும் கேரளாவில் நடமாட தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ஆலப்புழா சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதுபாபு கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குருவா கும்பல் தற்போது ஆலப்புழாவில் நடமாடி வருகிறது. இவர்களை போலீசார் பார்த்துள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தக் கும்பல் அம்பலப்புழா, காயம்குளம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு அருகில் தங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் பகலில் உளவுப் பணிகளை செய்து சாத்தியமான இலக்குகளை கண்காணிப்பார்கள்.

    பின்னர் வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்துள்ளது.

    • உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் உள்ள ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

    இவர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில்களில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 20-ந் தேதி இரவு இதில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் செயலாளர் அனூஸ் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்தது தெரிய வந்தது. அவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் பள்ளியாடி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் எடுத்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர், கோவில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் கேமராவில் சிக்கிய உருவம் போல் இருந்ததால் அதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

    இதில், அவன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடித்தவன் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் பள்ளியாடியை சேர்ந்த தங்கமணி என்ற ஜேம்ஸ் என தெரியவந்தது.

    இதேபோல் 10 நாட்களுக்கு முன்பு கன்னிமூல கணபதி கோவிலில் நடைபெற்ற உண்டியல் கொள்ளை சம்பவத்திலும் தங்க மணி தான் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.

    இந்த 2 சம்பவங்களிலும் தான் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவன் வாக்குமூலம் கொடுத்து உள்ளான். இவன் மீது ஏற்கனவே 4 உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
    • டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர்:

    அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு கல்லூரியும், அரசு மருத்துவக்கலூரிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்து வமனை அமைந்துள்ளது. இது குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.

    இந்த சாலையில் இரவு பகலாக மக்கள் மிக அதிகமாக சென்று வருவார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜை அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு சீக்கிரமாக மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையை திறந்தபோது பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து மேஜையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த

    விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், பணத்தை திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    தகவல் அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.
    • மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செருதூர் மீனவகிராமத்திலிருந்து சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விஜயன், ரமணன், விக்னேஷ் குமார், ரீகன் ஆகிய 4 பேரும் கடந்த 8-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.

    அவர்கள் நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி சுமார் 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1 ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேசன் பொருட்களை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் கோடியக்கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்.
    • இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் உள்ள தனியார் வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து கொள்ளையடிக்கப்பட்ட தனியார் வங்கி மேலாளர் காவல் அதிகாரிகளிடம் கூறும் போது, "முகமூடி அணிந்த மர்ம நபர் எனது அறைக்கு வந்து துப்பாக்கியை என் கழுத்தில் வைத்து, ரூ. 40 லட்சத்தை கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார். பணத்தை கொடுக்காத பட்சத்தில் அவர் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார்."

    "நான் காசாளர் ரோகித்-ஐ அழைத்து ரூ. 40 லட்சத்தை கொண்டுவரச் சொன்னேன். பணத்தை பெற்றுக் கொண்ட மர்ம நபர் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டான்," என கூறினார்.

     


    இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை பெற்று இருப்பதாகவும், அதில் உள்ள வீடியோக்களை கொண்டு குற்றவாளியை விரிவில் பிடிப்போம் என்று காவல் துறை துணை கண்காணிப்பாளர் கௌதம் ராம்சேவாக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    பட்டப் பகலில் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

    அதில், "உ.பி. குற்ற செய்தி: வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி கொள்ளையரின் துப்பாக்கியை கண்டு அஞ்சியது. ரூ. 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோவும் உண்மை, பாஜக ஆளும் உ.பி.-யில் சட்டம் ஒழுங்கு நிலைமையின் உண்மையும் இதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.
    • கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது.

    கேரளாவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரங்களை உடைத்து ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்பி செல்லும்போது நாமக்கல் அருகே பிடிபட்டது.

    அப்போது அந்த லாரியில் இருந்த 7 பேரில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், அசார்அலி என்பவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த கும்பல் சென்னையில் வைத்து திட்டம் தீட்டி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் கோவையில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் டேப் ஒட்டி நூதனமுறையில் பணம் திருடி வருகிறார்கள்.

    அதாவது கார்டை சொருகி நம்பரை அழுத்திவிட்டு பணத்திற்கான தொகையை டைப் செய்து விட்டு காத்திருந்தால் டேப் வரை வந்து பணம் நின்று விடும். அதன்பிறகு பொதுமக்கள் எந்திரத்தில் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க சென்று விடுவர்.

    தொடர்ந்து வெளியே காத்திருக்கும் 2 வாலிபரில் ஒருவர் உள்ளே சென்று, எந்திரத்தில் ஒட்டியுள்ள டேப்பை எடுத்துவிட்டு அங்கு குவிந்து நிற்கும் பணத்தை அள்ளி சென்று விடுவார். முதலில் ரத்தினபுரி ஆறு மூக்கு பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் மேற்கண்ட நூதன பணம் திருட்டு தொடங்கியது.

    பின்னர் அதே வாலிபர்கள் ஆவாரம்பாளையம், கருமத்தம்பட்டி, போத்தனூர் பகுதிகளிலும் ஏ.டி.எம். எந்திரத்தில் டேப் ஒட்டி இதேமுறையில் பணத்தை திருடி சென்று உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வரும் 2 வெளிமாநில வாலிபர்கள் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் திருடர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து அங்கு பணம் வரும் எந்திர பகுதியில் டேப்பை ஒட்டிவிட்டு வெளியே வருகிறார்.

    தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துவிட்டு பணம் வராமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பின்னர் இன்னொரு நபர் உள்ளே சென்று எந்திரத்துக்குள் சிக்கி குவிந்து கிடக்கும் பணத்தை எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் குற்ற சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்ட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து கோவை மாநகர போலீசார் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும கன்டெய்னர் கொள்ளையன் அசார்அலியிடம் காட்டி விசாரணை நடத்தினர். ஆனால் அவன், இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளான். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கோவையில் கடந்த சில நாட்களாக கைவரிசை காட்டி வரும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆவடியில் நடந்த ஏ.டி.எம். பணம் கொள்ளையில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து கோவையில் சுற்றி திரியும் ஏ.டி.எம். நூதன கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.

    அப்போது பஞ்சாரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த நிலையில் மேற்கு வங்க போலீசார் அங்குள்ள ரெயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என தெரியவந்தது.

    அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். 2 பேரையும் மேற்குவங்க போலீசார், ஆந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
    • ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    திருச்சி:

    பாதுகாப்பான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

    நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தைவிட ரெயில் பயணத்தை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்வது தனி சுகம். கூட்டம் நெரிசல் இருந்தால் சிலர் படிகட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்த படியே செல்கின்றனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் ரெயில் பயணிகளிடம் செல்போன்கள், நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறிகொடுப்பதுடன் அதில் உள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறும்போது:

    பஸ்சை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று நினைத்து அதிகளவிலான பயணிகள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், சம்பவங்கள் தொடர்கின்றன.

    ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த கும்பல் ரெயில் வந்துநிற்கும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களை குறிவைத்து அவர்கள் அருகில் வந்து நின்று கொள்கிறார்கள். ரெயில் புறப்படும் போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் கிடக்கும் நகைகள், கையில் வைத்திருக்கும் செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர்.

    கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நெல்லை செல்லும் ரெயிலில், திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஒருவர், திருச்சிக்கு பயணம் மேற் கொண்டார். இவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு வந்தார்.

    விழுப்புரம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கல்லால் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் காவலரின் கண், பற்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.

    இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    பல ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை தங்களுக்கு சாதகமாக மர்ம கும்பல் பயன்படுத்தி கொள்கிறது. இதனால், ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, அரக்கோணம் ரெயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறைவாக செல்லும் இடங்களில் போதுமான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை தடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவு பூட்டை உடைத்தார். சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனது கை, காலைகட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

    தகவல் அறிந்ததும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் புட்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பது தெரிந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிராமமக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவலாங்காடு போலீஸ் நிலையம் அருகே திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகம் எல்லை மேடு அருகே உள்ள காவிரிநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது31).

    இவர் கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு கரூருக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வலது பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.

    இதுபற்றி பவுன்ராஜ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார்
    • பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்

    உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டரே திருடுபோன சம்பவம் அம்மாநில அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தங்களது SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் ஹெலிகாப்டரை திருடியதாக ரவீந்தர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    ஹெலிகாப்டரே திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டது இணையத்திலும் பேசுபொருளான நிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜக அரசை விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    'உத்தரப் பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி,பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜக அரசின் சட்டம் ஒழுங்கை தான் பார்ட் பார்ட்டாக ஆக பிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடிச் சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறி ஆகியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த உ.பி போலீஸ், திருடுபோன ஹெலிகாப்டர், விமான நிலையத்தில் வைத்து திருடு போகவில்லை எனவும் SAR ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக உ.பியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் சமீபத்தில் போலீஸ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ், பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×