search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram college"

    தாம்பரம் கல்லூரியில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவரது மகள் மகிமா (வயது18). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

    நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாணவி மகிமாவை அழைத்து உள்ளனர். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

    எனினும் மகிதாவை கட்டாயப்படுத்தி கைப்பந்து போட்டியில் விளையாட வைத்து உள்ளனர். இதற்காக அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளும், பேராசிரியர்களும் மகிமாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மகிமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மகிமாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் மகிமாவின் பெற்றோர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், “விளையாட முடியாத நிலையில் இருந்த மகளை கட்டாயப்படுத்தி விளையாடுமாறு கூறி இருக்கிறார்கள். இதனால் அவர் இறந்து விட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து மகிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி மகிமா இறந்ததை அறிந்த மாணவ - மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது, அவசர சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி இறந்த சம்பவம் மாணவ- மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ×