search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram mother murder"

    தாம்பரம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    தாம்பரம் சானடோரியம், துர்கா நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவரது மனைவி பூபதி (வயது 60).

    இவர்களது மகள் நந்தினி. இவர் திருமணம் ஆகி அதே தெருவில் உள்ள வீட்டில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 7-ந்தேதி காலை பூபதி மட்டும் வீட்டில் இருந்தார். திடீரென அவர் எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அன்று மாலை பூபதி பரிதாபமாக இறந்தார்.

    குடும்பத் தகராறில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக முதலில் கூறப்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கள்ளக்காதலை கண்டித்த தகராறில் மகள் நந்தினியே மண்எண்ணையை ஊற்றி பூபதியை தீ வைத்து எரித்து கொன்றிருப்பது தெரிந்தது.

    இதையடுத்து நந்தினியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த தாய் பூபதி என்னை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    தாயின் கண்டிப்பால் கள்ளக்காதலனுடன் ஒன்றாக சேர முடியாமல் போகுமோ என்று நினைத்தேன்.

    கடந்த 7-ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது தாய் பூபதி மட்டும் இருந்தார். அப்போதும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்னர் நான் அங்கிருந்து எனது வீட்டுக்கு சென்று விட்டேன். தாய் மீது கோபத்தில் இருந்தேன்.

    தாய் பூபதி வழக்கமாக காலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்குவது வழக்கம். எனவே தூக்கத்தில் இருக்கும் அவரை மண்எண்ணை ஊற்றி எரித்து கொலை செய்ய முடிவு செய்தேன்.

    அதன்படி சிறிது நேரம் கழித்து மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றேன். அங்கு தாய் பூபதி தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு அருகில் உள்ள எனது வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். இதனை வேறு யாரும் கவனிக்கவில்லை.

    சிறிது நேரத்தில் தீயின் வெப்பத்தால் எழுந்த தாய் பூபதி எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

    அப்போது நானும் எதுவும் தெரியாதது போல் தீயை அணைத்து தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் இறந்துவிட்டார்.

    எனவே நான் தப்பித்து விட்டதாக நினைத்து இருந்தேன். போலீசார் விசாரித்து என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு நந்தினி கூறி உள்ளார்.

    இந்த கொலையில் நந்தினியின் கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அரசியல் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×