search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai soundrarajana"

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதால் மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன் மீது கோபம் உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
    மதுரை:

    மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

    மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொது கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

    பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க.ஆட்சி வருவதற்கு முன் பல காலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தனர்.

    10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்த போதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக் கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் தி.மு.க.காரர்கள்.

    மத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்தனர்.

    மத்தியில் பா.ஜ.க.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான் யோசித்தது தமிழகத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பது தான்.

    மதுரை தோப்பூரை பற்றி எனக்கு தெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன் பெறும் என்று தான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

    மதுரைக்கு வர வேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என் மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம் கூட இருக்கும்.

    நான் மத்திய சுகாதார துறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றி தான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


    எய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர் மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்கவில்லை.

    தமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்து உள்ளது மோடி அரசு.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    பொது கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தரமான சிகிச்சையை தென் தமிழக மக்கள் பெறவே மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    கர்நாடகாவில் குமாரசாமி பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாமலே ஆட்சிக்கு வந்தது திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் தான். ஆகவே தான் ஸ்டாலினும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தான் ஸ்ரீரங்கம் வந்து சென்றுள்ளார்.

    காவிரியில் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வந்தே தீரும். எதிர்கட்சிகள் கேட்டதை போல காவிரி ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. அதன் ஒழுங்காற்று கூட்டமும் நடத்தப்பட்டு விட்டது. இனி 50 வருடங்களுக்கு மோடி ஆட்சி தான் இந்தியாவில் நடக்க போகிறது.

    தமிழகத்தில் கூடிய விரைவில் பா.ஜ.க.ஆட்சி மலர இருக்கிறது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் என் உயிர் போகாது.

    இவ்வாறு அவர் பேசினார். #AIIMS #BJP #TamilisaiSoundararajan #PonRadhakrishnan
    ×