என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tanjore Farmers"
- காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.
- 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
மேட்டூர் அணை 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் அதாவது ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததால், அக்டோபர் 10-ந்தேதி முற்றிலுமாக மூடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 167.25 டி.எம்.சி.யில் 78.07 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியது.
இதனால், கடந்த ஆண்டு குறுவை பருவ நெல் சாகுபடிக்கு கூட முழுமையாக காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. மேலும், காவிரி நீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.
குறுவை சாகுபடிக்கு சுமார் 100 டி.எம்.சி.யும், சம்பா சாகுபடிக்கு 230 டி.எம்.சி.யும் என மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 43.64 அடியும், நீர் இருப்பு 14.04 டி.எம்.சி.யும் மட்டுமே உள்ளது. இதை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், பாசனத்துக்கு மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆற்றுப் பாசனத்தை சார்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலையில் உள்ளதால், நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் குறுவை சாகுபடியில் இயல்பான பரப்பளவு 3.50 லட்சம் ஏக்கராக இருந்தாலும், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கருக்குதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.10 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 73 ஆயிரத்து 400 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் என்ற இலக்கில் 72 ஆயிரத்து 500 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 92 ஆயிரம் ஏக்கரில் இதுவரை 29 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1,125 ஏக்கரிலும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் முன்பட்ட சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போது காவிரி நீருக்கு வாய்ப்பில்லாத நிலையில், தென்மேற்கு பருவமழை பெய்வதை பொருத்தே குறுவை சாகுபடியில் இலக்கை எட்ட முடியும். தொடர்ந்து பரவலாக மழை பெய்தால் மட்டுமே ஆழ்துளை குழாய் மூலம் செய்யப்படும் குறுவை சாகுபடியும் வெற்றிகரமாக அமையும் என்ற நிலை நிலவுகிறது.
கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்து, உபரிநீர் பெருக்கெடுத்து வந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கமாக உள்ளது. தற்போது, அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடிக்காவது காவிரி நீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
இதனால் காவிரியில் நமக்குரிய பங்கீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்