search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tashildar"

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவசர காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலான இந்த அலுவலகம், 24 மணிநேரமும் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில், சரண்யா என்பவர் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    தீக்காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட கலெக்ட‌ராக இருந்த கருணாகரன், கருணை அடிப்படையில் இந்த தற்காலிகப் பணியை வழங்கியிருந்தார். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் தாசில்தாரான திருப்பதி என்பவர், சரண்யாவுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவுகொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சரண்யா கூறியதாவது:‍-

    நான் செங்கோட்டையில் வசித்துவருகிறேன். என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால், உடலில் தீவைத்துக்கொண்டதில் காயம் ஏற்பட்டது. பின்னர், என்னுடைய இரு குழந்தைகளையும் காப்பாற்ற வழியின்றித் தவிப்பதை அப்போதைய மாவட்ட கலெக்டர் சுட்டிக் காட்டியதால், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தட்டச்சராகப் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார்.

    இந்த பிரிவில் தாசில்தாராக உள்ள திருப்பதி என்பவர், கடந்த சில தினங்களாக என்னிடம் தவறான நோக்கத்தில் பழக ஆரம்பித்தார். விடுமுறை நாட்களில் எனக்கு வேலை கொடுத்து வரவழைக்கும் அவர், அருகில் அமர்ந்துகொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    ஒருகட்டத்தில் அவரது சேட்டைகள் அத்துமீறியதால் கண்டித்தேன். இதனால் அவர் என்னை மிரட்டினார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்திருந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட தாசில்தார் என்னை பணியில் இருந்து நீக்கியதாக கூறி வேறு நபர்களை பணியில் அமர்த்தி உள்ளார்.

    அதன் பின்னரே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் உதவியை நாடினேன். போலீசிலும் புகார் செய்தேன். ஆனால் இதுவரை யாரும் எந்த விசாரணையும் செய்யவில்லை. தாசில்தார் திருப்பதி மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்கு இரு பெண்குழந்தைகள் இருக்கும் நிலையில், மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை தாசில்தார் கந்தசாமி அந்த பெண் ஊழியர் சரண்யாவிடம் விளக்கம் கேட்பதற்காக வந்தார். இதனிடையே சரியாக வேலைக்கு வராததால் கண்டித்ததாகவும், அதன்காரணமாக அவர் பாலியல் புகார் கூறியதாகவும் தாசில்தார் திருப்பதி தரப்பில் கூறப்பட்டது.

    மேலும் அவர் கூறுகையில், பெண் ஊழியரை வேலையில் இருந்து நீக்கவோ, வேலையில் சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்றார். பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் தற்போது வெளியாகி வருகிற நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #tamilnews
    ×