search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvanthipuram Hayagriva Temple"

    • ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.

    அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

    இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அந்த நெல்லில் தமிழில் "அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×