search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvattar"

    திருவட்டார் அருகே தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார்:

    திருவட்டாரை அடுத்த வாவறைவிளை பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ் (வயது 53). தொழிலாளி. இவரது மனைவி ரோஸ்மேரி.

    சம்பவத்தன்று வர்க்கீஸ் மனைவி ரோஸ்மேரி வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஜன்னல் ஓரம் வைத்து விட்டு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றிருந்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தது.

    மேலும் வீட்டு அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் கைசெயினை மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபனன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாவியை வைத்து செல்லும் இடத்தை நோட்டமிட்டு மர்ம நபர் இந்த திருட்டு சம்பவம் நடத்திருப்பதால் உள்ளூர் ஆசாமியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 குழந்தைகளுடன் மாயமான பெண், போலீசில் தஞ்சம் அடைந்ததால் போலீசார் அப்பெண்ண பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மாத்தூர் கோழிவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர்.

    ராஜேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சுதா கணவருக்கு போன் செய்து பேசினார். அப்போது தனக்கு கடன் இருப்பதால் ரூ.5 லட்சம் பணம் கொண்டுவரும்படி கூறினார். அதன்பின்பு அவர் 2 குழந்தைகளுடன் மாயமாகி விட்டார். இதுபற்றி உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சுதா மற்றும் அவரின் குழந்தைகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் தனது மகனை விட்டுசெல்லப்போவதாக சுதா, அவரது கணவருக்கு போனில் தெரிவித்தார். அவர் உறவினர் மூலம் இத்தகவலை போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் மார்த்தாண்டம் சென்ற போது அங்கு சுதா வரவில்லை. 

    அதற்கு பதில் அவர் தக்கலை பஸ் நிலையத்தில் நேற்று மாலை தனது மகனை விட்டுவிட்டு சென்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இரவு திருவட்டார் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலிசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று கூறினார். இதையடுத்து போலீசார் சுதாவின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் சுதாவை ஒப்படைத்தனர்.
    குலசேகரம்-திருவட்டாரில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கோடை மழை வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் இந்த மழை நீடிக்கிறது.

    நேற்று காலை வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில் மாலையில் கன மழை பெய்ய தொடங்கியது.

    மழையின்போது பலத்த காற்றும் வீசியது. மேலும் இடி, மின்னலும் அதிகமாக இருந்தது. இந்த மழை காரணமாக நாகர்கோவில் நகர சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடை வீதிகள், சுற்றுலா தலங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. கன மழை காரணமாக பொது மக்கள் சிரமத்துடனேயே வீடுகளுக்கு திரும்பினார்கள். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் பாய்ந்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது.

    பாதாள சாக்கடைக்காக நகரின் சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் மழை காரணமாக அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது.

    குமரி மேற்கு மாவட்டத்திலும் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு, களியல், அருமனை, கடையாலுமூடு, பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி, திருவட்டார், மார்த்தாண்டம், வேர்கிளம்பி, களியக்கா விளை போன்ற பகுதிகளில் சிலமணி நேரங்கள் மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக திற்பரப்பில் 82.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.புத்தன் அணையில் 66.4 மில்லி மீட்டரும், பெருஞ்சாணியில் 52 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 12.2 மில்லி மீட்டரும் மழை பெய்தது. குமரி மாவட்டத்தின் அணை பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்த போது அந்த பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஒதுங்க இடமின்றி மழையில் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

    மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் மூலம் அங்கிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டதால் திற்பரப்பு பகுதியில் கடும் பேக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழை காரணமாக களியல் - குலசேகரம் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார் போக்கு வரத்தை போராடி சீர்செய்தனர்.

    குலசேகரம், திற்பரப்பு பகுதிகளில் மழையின்போது மின்னலும் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்னல் தாக்கியதில் டி.வி., பிரிட்ஜ் உள்பட ஏராளமான மின்சாதனங்கள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் கனமழை காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்வதால் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத் தில் இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தின் சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

    ×