search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoppur Aiims Hospital"

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #AIIMS #AIIMSinMadurai
    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    தோப்பூரில் ஆஸ்பத்திரி அமைக்க சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு வந்தவுடன் மாநில அரசு தரப்பில் ஆஸ்பத்திரி அமைக்க அனைத்து நடவடிக்கைளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரி குறித்த திட்ட அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் விளக்கினர். ஆய்வின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தமிழகத்துக்கும், சுகாதாரத்துறைக்கும் பெருமை சேர்க்கும் வி‌ஷயமாகும்.



    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு விதித்துள்ள குடிநீர், மின்சாரம், ஐ.ஓ.சி. பைப் லைன் உள்பட 5 நிபந்தனைகள் குறித்து 2 நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்தி நிவர்த்தி செய்யப்படும்.

    இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மருத்துவமனைக்கு தேவையான 200 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. ஆஸ்பத்திரி கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    ரூ.1500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டெல்லிக்கு இணையாகவும், உலகத்தரத்திற்கும் சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிட பணிகள் தொடங்கி விரைவில் நிறைவடைய உள்ளது.

    இதுதவிர ரூ.590 கோடி மதிப்பில் செங்கல்பட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிந்து இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

    தமிழகத்தில் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.2685 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதி வந்தவுடன் தமிழகம் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVijayabaskar #AIIMS #AIIMSinMadurai

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    மதுரை:

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான முயற்சி மேற்கொண்டார். அவர் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அது தவிர திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தென்மாவட்ட மக்களின் இதயக்கனியாக மதுரையில் அமைய உத்தரவு பெற்றுத் தந்துள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் என்றென்றும் தமிழக மக்கள் கடமைப்பட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் நிலம் மட்டுமின்றி, கூடுதலாக விரிவாக்கம் செய்ய வசதியாக 62 ஏக்கர் நிலம் என மொத்தம் 262 ஏக்கர் நிலம் தர அரசு தயார் நிலையில் உள்ளது.

    அதனை அளந்து செம்மைப்படுத்தி வருவாய்த்துறையினர் சார்பில் ஒப்படைக்கும் பணிகளின் தொடக்கமாக இன்றே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அது தவிர நான்கு வழிச்சாலையை ஒட்டி புதிய இணைப்புச்சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் என மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எனவே மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகே, மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 15 கி.மீ. தொலைவில், மதுரை ரெயில் நிலையத்திற்கு 14 கி.மீ தொலைவில் என அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 19 மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

    ஏற்கனவே மருத்துவ நகரமாக விளங்கும் மதுரையில் அமைந்துள்ள ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டிற்கு 29 லட்சம் வெளிநோயாளிகளும், 19 லட்சம் உள்நோயாளிகளும் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கெல்லாம் மணி மகுடமாக இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை 19 மாவட்டங்களை சேர்ந்த ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 5 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி நிபந்தனை விதித்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் விதித்துள்ள 5 நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

    1. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலை அமைத்து, அந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்.

    2. 20 மெகாவாட் மின் வசதியை 2 வழித்தடங்கள் மூலம் செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

    3. போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

    4. தோப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தையும், டிரான்ஸ்பார்மர்களையும் தாமதமின்றி கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும்.

    5. எண்ணெய் குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ் வழியாக ஐ.ஓ.சி. எண்ணெய்க் குழாய் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur

    ×