search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur dengue"

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். #Swineflu #Dengue

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

    கடந்த வாரம் மாதவரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். இதே போல் திருவள்ளூரில் ஒரு சிறுவனும், அதிகத்தூரில் ஒரு சிறுமியும் அடுத்தடுத்து இறந்தனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கிராம பகுதிகளில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 103 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ்காரர் உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதே போல் 8 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருப்பாச்சூர், மணவாளநகர், மேல்நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பூந்தமல்லி ஏழுமலை இன்று வந்தார்.

    அப்போது, அவருடன் அ.ம.மு.க. நிர்வாகிளும் வந்திருந்தனர். அவர்கள், தயாரித்து கொண்டு வந்து இருந்த நிலவேம்பு கசாயத்தை ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு கொடுக்க முயன்றனர்.

    ஆனால், இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நிலவேம்பு கசாயத்தை திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை ஏழுமலை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஏழுமலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். #Swineflu #Dengue

    ×