search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruvannamalai fake doctor couple arrested"

    திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் பேன்ஸி ஸ்டோரில் இருந்த மருத்துவ உபகரணங்கள், கருக்கலைப் பிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டு பேன்ஸி ஸ்டோருக்கு சீல் வைத்தனர்.


    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பிற்கு தொடர்பு கொண்டதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10-ம் வகுப்பு படித்த கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நடத்திய ஆய்வில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோர் போல் இருந்தது. உட்பகுதியில் கிளினீக், மருந்து பொருட்கள் மற்றும் கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தது.

    செல்போன் எண்ணை வைத்து தான் இந்த இடத்தை கண்டறியப்பட்டது. கிரிவலப்பதையில் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சந்தேகப்படாத வகையில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோரும் வைத்திருந்தனர்.

    இப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது நாள்தோறும் 2-க்கும் மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து சென்றது தெரியவந்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக கவிதா மற்றும் அவரது கணவர் பிரபு கருக்கலைப்பை தொழிலாக நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம்.

    முதற்கட்டமாக கிளினீக் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீட்டில் ஆய்வு செய்யப்படும்.

    தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கருக்கலைப்புக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் இந்த செயலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்பு ரூ.15 ஆயிரம் வசூலித்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்செல்வன் வீட்டில் ரகசிய அறையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டருக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தற் போது மீண்டும் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.
    ×