search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Green way road"

    திருவண்ணாமலையில் அரசு ஆணை நகலை எரித்து 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட 63 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #Greenwayroad

    திருவண்ணாமலை:

    சென்னை- சேலம் இடையே 227 கி.மீ. தொலைவில் அமைக்கப்படும் 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தால் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், வனப்பகுதி, கிணறுகள், வீடுகள் அழிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்படும் 5 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பசுமை சாலை திட்ட அரசானை நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

    திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் 2 இடங்களில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்து வேனில் ஏற்ற முயன்றனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொடர்ந்து வாக்குவாதம் செய்த விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் சூழ்ந்து கொண்டு சட்டையை பிடித்து இழுத்து வேனில் ஏற்றினர்.

    மேலும் போராட்டம் நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்த சிலரையும் விரட்டி விரட்டி கைது செய்தனர். வெளியூர் செல்ல பஸ் நிலையம் வந்ததாகவும், மருத்துவ மனைக்கு செல்வதாகவும் தெரிவித்தவர்களையும் போலீசார் விடவில்லை.

    இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ரவீந்திரன், மாநில குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் பலராமன், அழகேசன், 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அபிராமன் உள்ளிட்ட 63 பேர் கைது செய்யப்படடனர்.

    அவர்கள் மீது 5 பேருக்கு மேல் கூடுதல், மறியல் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு, அரசு ஆவணங்கள் எரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அவர்களை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் 63 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீசார் திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்தியதாகவும், கைதுக்கு தயாராக இருந்தவர்களை தாக்கி வேனில் ஏற்றியது கண்டிக்கத்தக்கது என மாநில துணை செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் செங்கம் அடுத்த நடுசிங்க நல்லூர் கிராமத்தல் கரும்புத் தோட்டம் மற்றும் சம்பங்கி பூந்தோட்டங்களில் எல்லை குறியீடு கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் சர்வே உட்பிரிவு அளவீடு நேற்று நடந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய தாலுகாக்களில் 14 கிராமங்களில் தொடர்ந்து பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. #Greenwayroad

    ×