search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trash public charge"

    ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

    ஆவடி:

    ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம், திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, அண்ணனூர், பட்டாபிராம், கோவில்பாதாகை, மிட்டின மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

    இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் நகராட்சி பகுதிகளில் சுமார் 140 டன் குப்பைகள் சேர்கின்றன.

    இவ்வாறு நகராட்சி முழுவதும் 4200டன் குப்பைகள் மாதந்தோறும் சேருகின்றன. குப்பைகளை 170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். மேலும், அந்த குப்பைகளை ஊழியர்கள் சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முக்கிய சாலைகள், தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகிறது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது.

    சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகிவருகிறது.

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக பொது நலச்சங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

    எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×