search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy baby"

    திருச்சியில் இதய நோயுடன் பிறந்த குழந்தைக்கு ஆபரேசன் செய்வதற்காக 4 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. #AmbulanceStaff #TrichyBaby
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்த குணசீலன் மனைவி கிருஷ்ணவேணி, பிரசவத்திற்காக திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சிசுவுக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததை டாக்டர்கள் குழுவினர் கண்டுபிடித்தனர்.

    உடனடியாக ஆபரே‌ஷன் செய்யாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் ஆபரே‌ஷன் செய்ய டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்கான வசதி திருச்சியில் இல்லை. எனவே சென்னை அப்பல்லோவில் ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்க்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தையை சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்க்குபேட்டர் வசதியுடன் விமானத்தில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடிவானது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் அவசரமாக ஆபரே‌ஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்காக நேற்று மாலை 4 மணியளவில் அமெரிக்கன் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஆம்புலன்சுகள் புறப்பட, அதற்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக 2 ஆம்புலன்சுகள் சென்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விழுப்புரம் வரை ஆம்புலன்சு செல்வதில் சிக்கல் இல்லை.

    ஆனால் அதற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடும் என்பதால் ஒரே நேரத்தில் சைரன் ஒலியுடன் ஏராளமான ஆம்புலன்சு சென்றால் வாகன ஓட்டிகள் விலகி விடுவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.


    இதற்காக விழுப்புரம், செங்கல்பட்டு போலீசாரின் உதவி கேட்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆம்புலன்ஸ்கள் விழுப்புரம் சென்றதும் அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மேலும் 8 ஆம்புலன்ஸ்களுடன் இணைந்து சென்னைக்கு புறப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு அனைத்து ஆம்புலன்சுகளும் செங்கல்பட்டை அடைந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த செங்கல்பட்டு போலீசார் மற்றும் மேலும் 15 ஆம்புலன்சுகள் கான்வாயில் இணைந்து சென்றன.

    அதன்படி குழந்தையின் ஆம்புலன்சுக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னுமாக 25 ஆம்புலன்ஸ்கள் உடன் சென்றன. இரவு 8 மணிக்கு சென்னை அப்பல்லோவை ஆம்புலன்ஸ்கள் அடைந்தன.

    அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் இருந்து குழந்தையை இறக்கி ஆபரே‌ஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று உடனடியாக ஆபரே‌ஷன் செய்தனர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குழந்தையை பத்திரமாக சென்னைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், போலீசாரை, குழந்தையின் உறவினர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர். #AmbulanceStaff #TrichyBaby
    ×